Published : 18 Sep 2025 06:35 AM
Last Updated : 18 Sep 2025 06:35 AM
சென்னை: தமிழக ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு 15-வது நிதிக்குழுவின் தொகுப்பற்ற மானிய முதல் தவணை ரூ.127.58 கோடியை மத்திய அரசு விடுவித்துள்ளது. ஊரக வளர்ச்சி, பஞ்சாயத்து ராஜ் மற்றும் நீர்வள அமைச்சகங்களின் மூலம் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்காக 15-வது நிதிக்குழுவின் மானியங்களை விடுவிக்க மத்திய அரசு, மாநிலங்களுக்கு பரிந்துரை செய்து, நிதியமைச்சகத்தின் மூலம் நிதி விடுவிக்கப்படுகிறது. ஒதுக்கப்பட்ட மானியங்கள், நிதியாண்டில் 2 தவணைகளாக விடுவிக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
தொகுப்பற்ற மானியங்களை சம்பளம் மற்றும் இதர செலவுகள் தவிர, அரசியல் சாசனத்தின் 11-வது பட்டியலில் குறிப்பிட்டுள்ளபடி, அந்தந்தப் பகுதிகளின் தேவைகளுக்காக ஊரக உள்ளாட்சி அமைப்புகளும், பஞ்சாயத்து ராஜ் அமைப்புகளும் பயன்படுத்தும். தொகுப்பு மானியங்கள், தூய்மைக்கான அடிப்படை சேவைகள், திறந்தவெளிக் கழிப்பிடம் இல்லாத நிலையைப் பராமரித்தல் ஆகியவற்றுக்காக பயன்படுத்தப்படும்.இதில் வீட்டுக் கழிவுகளை நிர்வகித்தல் மற்றும் சுத்திகரித்தல் ஆகியவை இடம் பெற்றுள்ளன.
குறிப்பாக மனிதக் கழிவுகள் மற்றும் மலக் கசடுகளை அகற்றுதல், குடிநீர் விநியோகம், மழைநீர் சேகரிப்பு மற்றும் நீர் மறுசுழற்சி ஆகியவற்றுக்காக தொகுப்பு மானியங்கள் பயன்படுத்தப்படலாம். அந்த வகையில், இந்த 2025-26-ம் நிதியாண்டில் தமிழக ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்காக, 15-வது நிதிக்குழுவின் தொகுப்பற்ற மானியத்தின் முதல் தவணையாக ரூ.127.58 கோடியை மத்திய அரசு விடுவித்துள்ளது. இந்த நிதியானது 2,901 தகுதியுடைய கிராம ஊராட்சிகள், 74 தகுதியுடைய ஊராட்சி ஒன்றியங்கள், 9 தகுதியுடையமாவட்ட பஞ்சாயத்துகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT