Published : 18 Sep 2025 03:42 AM
Last Updated : 18 Sep 2025 03:42 AM
சென்னை: ‘இந்து தமிழ் திசை’ நாளிதழின் முதல் பக்கம் முதல் கடைசி பக்கம் வரை இடம்பெறும் செய்திகள் ஒவ்வொன்றும் தனிச்சிறப்புக்குரியது என்று நாளிதழின் 13-ம் ஆண்டு தொடக்கத்தை முன்னிட்டு வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், தமாகா தலைவர் ஜி.கே.வாசன், இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் மு.வீரபாண்டியன் ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து அவர்கள் அனுப்பியுள்ள வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது:
தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்: ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் மலர்ந்து 12-ம் ஆண்டு நிறைவு பெற்று, தனது 13-ம் ஆண்டில் சாதனை தடத்தை பதித்திருப்பதை அறிந்து மட்டில்லா மகிழ்ச்சி கொள்கிறேன்.
இந்திய தேச ஒற்றுமையையும் ஒருமைப்பாட்டையும், தன் கண்களாக காத்து வரும் இதழ் ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ். அதோடு மட்டுமில்லாமல் தமிழகத்தின் கலாச்சாரம் மற்றும் பண்பாடு ஆகியவற்றை பிரதிபலிக்கும் ஒரு ஊடகக் கண்ணாடியாக திகழ்ந்து வருகிறது. குறிப்பாக முதல் பக்கம் முதல் கடைசி பக்கம் வரை இடம்பெறும் செய்திகள் ஒவ்வொன்றும் தனிச்சிறப்புக்குரியது.
முக்கியமாக ‘இந்து தமிழ் திசை’ நாளிதழின் ‘கருத்துப் பேழை’ பகுதியில் இடம்பெற்றுள்ள செய்திகள் அனைத்தும் நமது பழங்கால பண்பாட்டு, கலாச்சாரங்களைச் சொல்லும் ‘பனைஓலை’ செய்தியாகவே கருதுகிறேன்.
இந்த சிறப்புக்குரிய ‘இந்து தமிழ் திசை’ நாளிதழின் நிர்வாகிகளுக்கும், ஆசிரியர் குழுவினருக்கும், செய்தியாளர்களுக்கும், வாசகப் பெருமக்களுக்கும், என் நெஞ்சார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்து அனைவரையும் பாராட்டி மகிழ்கிறேன்.
தமாகா தலைவர் ஜி.கே. வாசன்: ‘இந்து தமிழ் திசை’ தமிழ் நாளிதழ் 13-ம் ஆண்டில் அடியெடுத்து வைப்பது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. பத்திரிகை துறையின் மூலம் தொடர்ந்து மக்கள் பணியாற்ற மனம் நிறைந்த நல் வாழ்த்துக்கள். ‘தி இந்து’ ஆங்கில நாளிதழின் ஓர் அங்கமாக கடந்த 2013- ம் அண்டு தொடங்கப்பட்ட இந்து தமிழ் திசை நாளிதழ் நாடும், நாட்டு மக்களும் பயன்பெறும் வகையில் வணிகம், கல்வி, விளையாட்டு,
சுற்றுச்சூழல், இலக்கியம், வினாடி வினா, பொழுதுபோக்கு, சினிமா, சிறப்பு கட்டுரை, ஆன்மீகம், சிந்தனை களம், தேசிய மற்றும் சர்வதேச செய்திகளை உடனுக்குடன் மக்களிடம் கொண்டு சென்று மக்கள் மனதில் நிறைந்துள்ளது.
‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் தொடர்ந்து அரசு திட்டங்களையும், செயல்பாடுகளையும், பொது பிரச்சனைகளையும், அனைவரும் புரிந்துகொள்ளும் வகையில் மக்களிடம் கொண்டு செல்வது தனிசிறப்பு. ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் வெற்றிகரமாக 13-ம் ஆண்டில் அடியெடுத்து வைத்து அனைத்து தரப்பு மக்கள் மனதிலும் நீங்கா இடம் பிடித்துள்ளது. நாளிதழ் வெற்றிகரமாக வெளிவர அயராது பாடுபடும் ஆசிரியர் குழுவினர்களுக்கும், நிருபர்களுக்கும், தொழில்நுட்ப கலைஞர்களுக்கும், புகைப்பட கலைஞர்களுக்கும், வடிவமைப்பாளர்களுக்கும் மற்றும் அனைத்து பணியாளர்களுக்கும் நல் வாழ்த்துக்கள். தமிழ் பத்திரிகை உலகில் சிறப்புடன் விளங்கி தேசமெங்கும் மென்மேலும் புகழ்பெற தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் வாழ்த்துகிறேன்.
இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் மு.வீரபாண்டியன்: ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் தமிழின் மகத்தான பண்பு கூறுகளை, அதன் செவ்வியல் கூறுகளை, அதன் இலக்கிய வடிவங்களை கட்டுரைகளாக, கவிதைகளாக கோடிக்கணக்கான தமிழ் மக்களிடம் கொண்டு சேர்த்திருக்கிறது. மிகச்சிறந்த அரசியல் விற்பன்னர்களின் கட்டுரைகளை, பகுத்தறிவை, சுயமரியாதையை, சமதர்மத்தை வளர்க்கிற எண்ணிலடங்கா கட்டுரைகளை அது நாளும் வெளியிட்டு, மகத்தான முத்திரையை பதித்திருக்கிறது. வேறு எந்த நாடுகளிடமும் ஒப்பிட முடியாத அளவு உயர்ந்த ஜனநாயகத்தை கொண்டது நம் நாடு. இந்த நாட்டின் பன்முகம், மதச்சார்பின்மை, மகத்தான கருத்தாக்கம் ஆகியவற்றுக்கு பாதிப்பு ஏற்படும் போதெல்லாம் ‘இந்து தமிழ் திசை’ அதை எதிர்த்து நின்று இருக்கிறது. இது தான் இந்நாளிதழின் மகத்தான கூறு.
ஒடுக்கப்படுகிற மக்கள், ஏழை, எளிய மக்கள், தொழிலாளர்கள் உரிமைகளுக்காக போராடுகிற போது கடந்து சென்றுவிடாமல் அந்த போராட்டங்களுக்கு முன்னுரிமை அளித்திருக்கிறது. இவ்வாறு 12 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ், தற்போது 13-வது ஆண்டில் அடியெடுத்து வைத்திருக்கும் மகிழ்ச்சியான தருணத்தில் ‘இந்து தமிழ் திசை’க்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மனப்பூர்வமான பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறது. அதன் பயணம் தொடரட்டும். வெல்லட்டும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT