Published : 17 Sep 2025 08:33 PM
Last Updated : 17 Sep 2025 08:33 PM
கரூர்: “திராவிடம் என்றால் என்னவென்று தெரியாது என்று கூறிய பழனிசாமி, அதிமுக தலைமை பொறுப்பில் இருப்பது வெட்கக்கேடு. அதிமுக தொடங்கியபோது, தன்னுடைய கொள்கை அண்ணாயிசம் என்றார்கள். அதை பழனிசாமி அடிமையிசம்னு மாற்றி, இப்போது அமித் ஷாவே சரணம் என்று மொத்தமாக சரண்டராகிவிட்டார்” என்று முதல்வர் ஸ்டாலின் கடுமையாக விமர்சித்துள்ளார்.
மேலும், “இப்போதும் சிலர் திமுகவுக்கு நாங்கள்தான் மாற்று என்று பேசுகின்றனர். மாற்றம், மாற்றம் என்று சொன்னவர்கள்தான் மாறினார்கள்; மறைந்தும் போனார்கள். ஆனால், திமுக மட்டும் மாறவில்லை. தமிழக மக்கள் மனதில் என்றும் மறையவில்லை” என்று தவெக தலைவர் விஜய்க்கு மறைமுறைமாக எதிர்வினையாற்றினார் முதல்வர் ஸ்டாலின்.
அண்ணா பிறந்தநாள் விழா, பெரியார் பிறந்தநாள் விழா, திமுக தொடங்கப்பட்ட நாள் விழா என முப்பெரும் விழா இன்று கரூர் - கோடங்கிப்பட்டியில் நடைபெற்றது. இந்த விழாவில் சிறப்புரையாற்றிய முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியது: “இது கரூர் அல்ல, திமுக ஊர். கொட்டும் மழையில்தான் அண்ணா இதேநாளில் வடசென்னை ராபின்சன் பூங்காவில் திமுகவை தொடங்கி வைத்தார். அதேபோல, இந்தக் கொட்டும் மழையில் உங்கள் எழுச்சியை பார்த்துக் கொண்டே இருக்கலாம் போல உள்ளது.
கரூர் மாவட்ட செயலாளர் செந்தில் பாலாஜி, இந்த விழாவை ஒரு மாநாடு போல ஏற்பாடு செய்துள்ளார். திமுக வரலாற்றில் இப்படியொரு பிரம்மாண்ட முப்பெரும் விழா நடந்திருக்காது. இங்கு பெரியார் விருது பெற்றவர்... பார்த்தால்தான் கனிமொழி, ஆனால் நாடாளுமன்றத்தில் பேசினால் கர்ஜனை மொழி. திராவிட இயக்க திருமகளாக, பெரியார் பேத்தியாக முழங்குகிறார். விருது பெற்ற ஒவ்வொருவரும் பெரியவர்கள். உங்கள் அனைவரையும் வாழ்த்துகிறேன்.
திறமை, அறிவு, ஒழுக்கம் ஆகியவற்றை ஒருங்கே பெற்றவர்கள்தான் திமுகவினர். 2019-ம் ஆண்டு முதல் நாம் எதிர்கொள்ளும் தேர்தல்களில் வெற்றி பெற்று வருகிறோம். வரும் தேர்தலிலும் திராவிட மாடல் 2.0 ஆட்சி நிச்சயம் அமையும். தொடர்ந்து திமுக ஆட்சி அமைந்தது என்று புது வரலாறு படைக்க வேண்டும்.
தமிழக வளர்ச்சிக்கு இடையூறாக இருக்கும் காவிக் கொள்கையின் அரசியல் முகமாக உள்ள மத்திய பாஜக அரசுடன் தொடர்ந்து போராடி வருகிறோம். 2 நாட்களுக்கு முன்பு, எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி, அதிமுக ஆட்சியை காப்பாற்றியது பாஜகதான் என்று உண்மையை பேசியிருக்கிறார்.
திமுக அரசுக்கு மத்திய பாஜக அரசு தொடர்ந்து குடைச்சல் கொடுக்கிறது. அதைப் பார்த்து நாம் முடங்கிடுவோம் என நினைத்தார்கள். திமுக மிரட்டலுக்கு பயப்படும் கட்சியா? இந்தியாவிலேயே முதல்முறையாக ஆட்சி அதிகாரத்துக்கு வந்த ஒரு மாநிலக் கட்சி தான் திமுக.
75 ஆண்டுகால வரலாறு நமக்கு உள்ளது. அதன் பிறகு தமிழகத்துக்கு வந்த எல்லா கட்சிகளும் திமுகவை அழிப்போம், ஒழிப்போம் என்றார்கள். ஏன் இப்போதும் சிலர் திமுகவுக்கு நாங்கள்தான் மாற்று என்று பேசுகின்றனர். மாற்றம், மாற்றம் என்று சொன்னவர்கள்தான் மாறினார்கள்; மறைந்தும் போனார்கள். ஆனால், திமுக மட்டும் மாறவில்லை. தமிழக மக்கள் மனதில் என்றும் மறையவில்லை.
திமுக ஆட்சிக்கு வந்தபோது ஏகப்பட்ட நெருக்கடிகளை கடந்து ஏராளமான திட்டங்களை செயல்படுத்தி, முதலீடுகளை ஈர்த்து, வேலை வாய்ப்புகளை உருவாக்கி, இந்தியாவிலேயே பொருளாதாரத்தில் இரட்டை இலக்கம் கொண்ட மாநிலமாக உருவாக்கி இருக்கிறோம். இதனால் தான் திராவிட மாடல் அரசை பார்த்தால் சிலருக்கு வயிறு எரிகிறது. வாய்க்கு வந்த அவதூறுகளை அள்ளி வீசுகின்றனர். அவர்களது கண்ணீர் ஆட்டுக்காக ஓநாய் வடிக்கும் கண்ணீர்.
பழனிசாமி ஆட்சி அதிகாரம் இருக்கும்போது எதுவும் செய்யாமல், தமிழக உரிமைகளுக்காக குரல் கொடுக்காமல் அடிமை சாசனம் எழுதிக் கொடுத்தார். இப்போது எதிர்க்கட்சி என்ற மாண்பே இல்லாமல் தரம் தாழ்ந்து என்னை ஒருமையில் பேசுகிறார். ரெய்டுகளிலிருந்து காப்பாற்றிக்கொள்ள அதிமுகவை அடகு வைத்துவிட்டார்.
திராவிடம் என்றால் என்னவென்று தெரியாது என்று கூறிய பழனிசாமி, அதிமுக தலைமை பொறுப்பில் இருப்பது வெட்கக்கேடு. அதிமுக தொடங்கியபோது, தன்னுடைய கொள்கை அண்ணாயிசம் என்றார்கள். அதை பழனிசாமி அடிமையிசம்னு மாற்றி, இப்போது அமித் ஷாவே சரணம் என்று மொத்தமாக சரண்டராகிவிட்டார்.
முழுவதும் நனைந்த பிறகு முக்காடு எதற்கு என்பார்கள். நேற்று டெல்லியில் கார் மாறி மாறி முகத்தை மூடிக் கொண்டு போன பழனிசாமியை பார்த்து, காலிலே விழுந்த பிறகு முகத்தை மூட கர்ச்சீஃப் எதற்கு என்றுதான் எல்லோரும் கேட்கிறார்கள்.
மத்திய அரசின் செயல்களை நாம் துணிச்சலுடன் நேருக்கு நேர் எதிர்க்கிறோம். போராடி தலைநிமிர்ந்த தமிழகத்தை ஒரு நாளும் தலைகுனிய விடமாட்டேன். தனிநபர்கள் தோன்றுவார்கள், மறைவார்கள். கட்சிகள் வரும், போகும்; ஆனால், தமிழகத்தின் தனிப்பெருமை நிரந்தரமானது. தமிழ் மொழியின் சீரிளமை நிரந்தரமானது. மக்கள் உரிமை காக்கப்பட வேண்டும். இந்த தமிழ் மண்தான் நமக்கு எல்லாவற்றையும் கொடுத்தது. இந்த மண்ணைக் காக்கும் பொறுப்பம், கடமையும் நமக்கு உள்ளது.
டெல்லி எப்படியெல்லாம் நம் மீது ஆதிக்கம் செலுத்துகிறார்கள். இந்தி மொழியை திணிக்கிறார்கள். நீட் தேர்வு விலக்கு தர, கல்வி நிதியை விடுவிக்க, கீழடி ஆய்வு முடிவுகளை வெளியிட மறுக்கிறார்கள். நம் வாக்குரிமையை பறிக்கிறார்கள். ஆனால், அப்போதும் சரி, இப்போதும் சரி, அடக்கு முறைக்கு இங்கு எப்போதும் ‘நோ-என்ட்ரி’ தான். ஆதிக்கத்துக்கு, திணிப்புக்கு என மொத்தத்தில் இங்கு பாஜகவுக்கு ‘நோ-என்ட்ரி’தான்.
இது பெரியார், அண்ணா, கலைஞர் செதுக்கிய தமிழ்நாடு. 3 முறை மத்தியில் ஆட்சி அமைத்தும் தமிழகத்தில் மட்டும் மோடி மஸ்தான் வேலை பலிக்கவில்லை. இன்னுமா எங்களை பற்றி உங்களுக்குத் தெரியவில்லை?
பாஜகவை இப்போது நாம் தடுத்து நிறுத்தாவிட்டால், அடுத்து மாநிலங்களே இருக்கக் கூடாது என்பதை நோக்கிதான் நகர்வார்கள். ஏற்கெனவே காஷ்மீரில் ஓர் ஒத்திகை பார்த்துவிட்டனர். இந்திக்கு எதிராக போராடி ஒட்டுமொத்த இந்தியாவை தமிழகம் காப்பாற்றியது போல, இப்போது மீண்டும் ஓர் உரிமைப் போர் நடத்தி நாட்டை காக்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது.
இந்தப் போராட்டக்களத்தில் உங்களுடன் முன்கள வீரனாக 27 வயதில் எமர்ஜென்சியில் சிறை சென்ற முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் இருக்கிறேன். தாய்மார்கள், விவசாயிகள், உழைப்போர் என அனைவர் நலனையும் காக்க தொடர்ந்து உழைப்பேன். ஒவ்வொரு மாவட்டத்துக்கும் தேவையானதை பார்த்து பார்த்து செய்து கொடுப்பேன்.
பெரியார், அண்ணா, கலைஞர் விதைத்த இன உணர்வு நம்மிடம் உள்ளது. 8 கோடி மக்களின் ஆற்றல் பக்க பலமாக உள்ளது. நாம் முன்னெடுக்கும் போராட்டம் என்பது ஆட்சி அதிகாரத்துக்கான போராட்டம் அல்ல. தமிழ்நாட்டுக்கான போராட்டம். இதற்கு தமிழ்நாடு முழுவதும் ஓரணியில் திரள வேண்டும். தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் என டெல்லிக்கு கேட்கும்படி அனைவரும் சேர்ந்து சொல்லுங்கள்” என்று அவர் பேசினார்.
முன்னதாக, திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு தலைமை வகித்த இந்த விழாவில், முன்னாள் அமைச்சரும், கரூர் மாவட்ட செயலாளருமான வி.செந்தில்பாலாஜி எம்எல்ஏ வரவேற்றுப் பேசினார். இந்த விழாவில், துணை பொதுச் செயலாளர் கனிமொழி எம்.பி.க்கு பெரியார் விருது, பாளையங்கோட்டை நகர் மன்ற முன்னாள் தலைவர் சுப.சீத்தாராமனுக்கு அண்ணா விருது, முன்னாள் எம்எல்ஏ சோ.மா.ராமச்சந்திரனுக்கு கலைஞர் விருது, மறைந்த தலைமைச் செயற்குழு உறுப்பினர் குளித்தலை சிவராமனுக்கு (குடும்பத்தினர் பெற்றுக் கொண்டனர்) பாவேந்தர் பாரதிதாசன் விருது வழங்கப்பட்டது.
சட்டப்பேரவை முன்னாள் கொறடா மருதூர் ராமலிங்கத்துக்கு பேராசிரியர் விருது, ஒருங்கிணைந்த கோவை மாவட்ட முன்னாள் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பொங்கலூர் பழனிசாமிக்கு மு.க.ஸ்டாலின் விருது ஆகியவற்றை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். மேலும், முரசொலி அறக்கட்டளை சார்பில் மூத்த பத்திரிகையாளர் ஏ.எஸ்.பன்னீர்செல்வத்துக்கு முரசொலி செல்வம் விருது வழங்கப்பட்டது. இதுதவிர, கட்சியில் சிறப்பாக பணியாற்றும் 16 பேருக்கு நற்சான்று, பணமுடிப்பு ஆகியற்றை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்.
இந்த விழாவில், கட்சியின் முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு, துணை பொதுச் செயலாளர்கள் ஐ.பெரியசாமி, திருச்சி என்.சிவா, ஆ.ராசா, கனிமொழி, அந்தியூர் செல்வராஜ் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். இந்த விழாவுக்கு கட்சியின் பொதுச் செயலாளர் துரைமுருகன் தலைமை வகிப்பார் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், உடல் நலக்குறைவு காரணமாக அவர் விழாவில் பங்கேற்கவில்லை. அவருக்குப் பதிலாக பொருளாளர் டி.ஆர்.பாலு விழாவுக்கு தலைமை வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
திமுக முப்பெரும் விழாவை முன்னிட்டு கரூர், திருச்சி, புதுக்கோட்டை, பெரம்பலூர், அரியலூர், கோவை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 3,000-க்கும் மேற்பட்ட மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டிருந்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT