Published : 17 Sep 2025 04:20 PM
Last Updated : 17 Sep 2025 04:20 PM
சென்னை: தன்னை குறித்து அவதூறு கருத்து தெரிவிக்க ஜாய் கிரிசில்டா-வுக்கு தடை விதிக்கக்கோரியும், சமூக வலைதளங்களில் உள்ள வீடியோக்களை நீக்கக் கோரியும் மாதம்பட்டி ரங்கராஜ் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
திருமணம் செய்து கொள்வதாகக் கூறி ஏமாற்றி விட்டதாக ஆடை வடிவமைப்பு நிபுணர் ஜாய் கிரிசில்டா, பிரபல சமையல் நிபுணர் மாதம்பட்டி ரங்கராஜுக்கு எதிராக புகார் அளித்திருந்தார்.
இது தொடர்பாக சமூக வலைதளங்களில் பதிவிட்ட ஜாய் கிரிசில்டா, மாதம்பட்டி பாகசாலா நிறுவனத்தையும் டேக் செய்திருந்தார். இந்நிலையில் இந்த விவகாரத்தில் மாதம்பட்டி பாகசாலா நிறுவனத்தை தொடர்புபடுத்தி பேச ஜாய் கிரிசில்டாவுக்கு தடை விதிக்கக்கோரி மாதம்பட்டி தங்கவேலு ஹாஸ்பிட்டாலிட்டி பிரைவேட் லிமிடெட் நிறுவனம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அதில், நிறுவனத்தின் இயக்குநர்களில் ஒருவரான மாதம்பட்டி ரங்கராஜனின் தனிப்பட்ட விவகாரத்தில் ஒட்டுமொத்த நிறுவனத்தையும் தொடர்புபடுத்தி பேசக்கூடாது என்றும் ஜாய் கிரிசில்டாவின் இந்த செயலால் நிறுவனத்தின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுவதோடு வணிக ரீதியாகவும் தாக்கத்தை ஏற்படுத்தும்” என மனுவில் கூறப்பட்டுள்ளது.
இந்த வழக்கு நீதிபதி செந்தில்குமார், முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் சார்பில் மூத்த வழக்கறிஞர் பி.எஸ்.ராமன் மற்றும் வழக்கறிஞர் விஜயன் சுப்ரமணியன் ஆகியோர் ஆஜராகி, மாதம்பட்டி ரங்கராஜனுடனான தனிப்பட்ட விவகாரத்தில் ஜாய் கிரிசில்டா தங்களை தொடர்புபடுத்தி பேசியதால் 15 நாட்களில் 12.5 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக” வாதிட்டனர்.
மேலும், இந்த விவகாரம் தொடர்பாக ஊடகங்களில் கருத்து தெரிவிக்காமல் ஓய்வு பெற்ற நீதிபதி முன்பு மத்தியஸ்த பேச்சுவார்த்தைக்கு ஜாய் கிரிசில்டா முன்வர வேண்டும் எனவும் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.
ஜாய் கிரிசில்டா சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் எஸ்.பிரபாகரன், மத்தியஸ்த பேச்சுவார்த்தைக்கு தாங்கள் செல்ல விரும்பவில்லை. மாதம்பட்டி என்று குறிப்பிடாமல் வெறும் ரங்கராஜ் என குறிப்பிட்டால் யாருக்கும் தெரியாது. மேலும், இந்த மனு விசாரணைக்கு உகந்தது அல்ல எனவும் வாதிடப்பட்டது. மேலும், இவ்விவகாரத்தில் தங்களுக்கு தொடர்பில்லை எனக்கூறும் நிறுவனம் மாதம்பட்டி ரங்கராஜை பாதுகாப்பதாகவும் குற்றம்சாட்டு முன்வைக்கப்பட்டது.
இதனிடையே, தன்னை குறித்து அவதூறு கருத்து தெரிவிக்க ஜாய் கிரிசில்டா-வுக்கு தடை விதிக்கக் கோரியும், சமூக வலைதளங்களில் உள்ள வீடியோக்களை நீக்கக்கோரியும் மாதம்பட்டி ரங்கராஜ் தனியாக ஒரு மனுத் தாக்கல் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து, இந்த வழக்குடன் மாதம்பட்டி ரங்கராஜ் தாக்கல் செய்த வழக்கும் சேர்த்து விசாரிக்கப்படும் எனக் கூறிய நீதிபதி, ரூ.12.5 கோடி இழப்பு ஏற்பட்டதாக கூறும் குற்றச்சாட்டுக்களுக்கான ஆதாரங்களை தாக்கல் செய்ய உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை செப்.24-ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT