Published : 17 Sep 2025 06:00 PM
Last Updated : 17 Sep 2025 06:00 PM
மேடவாக்கம் ஏரி முதல் பள்ளிக்கரணை சதுப்பு நிலம் வரை, 2,200 மீட்டர் தூரம், ரூ.,57.70 கோடியில் கட்டப்பட்டு வரும் பெரிய பாதாள மூடு கால்வாய் பணி இந்த மாதத்தில் நிறைவடையும் என, நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். மேடவாக்கம், பள்ளிக்கரணை, சுண்ணாம்பு கொளத்தூர், கோவிலம்பாக்கம் போன்ற பகுதிகள், மழைக்காலங்களில் வெள்ளத்தால் கடுமையான பாதிப்புகளை சந்தித்து வந்தது. இந்த பகுதியில் உள்ள ஏரிகளுக்கு மழைநீர் செல்லவும், வெளியேறவும் போதிய வசதி இல்லாமல் இருந்தது.
இதனால் இந்த பகுதியில் வசித்து வரும் மக்கள் பாதிக்கப்பட்டு வந்தனர். இந்நிலையில், நீர்வளத்துறை சார்பில் ரூ.58 கோடி மதிப்பில் பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் மழைநீர் செல்ல, மேற்கண்ட பகுதிகளில் உள்ள ஏரிகளை இணைத்து, பாதாள மூடு கால்வாய் அமைக்க முடிவு செய்யப்பட்டு பணிகள் கடந்த ஆண்டு தொடங்கப்பட்டது.
அதன்படி மேடவாக்கம் ஏரியிலிருந்து வெளியேறும் உபரி நீர் பள்ளிக்கரணை அணை ஏரிக்கும், அங்கிருந்து சுண்ணாம்பு கொளத்தூர் மற்றும், அதன் தொடர்ச்சியாக கோவிலம்பாக்கம் ஏரி வழியாக பல்லாவரம், துரைப்பாக்கம் ரேடியல் சாலையில் உள்ள மழைநீர் வடிகால் மூலம் பள்ளிக்கரணை சதுப்பு நிலத்துக்கு செல்லும் வகையில் பாதாள மூடு கால்வாய் திட்டம் அமைக்கப்பட்டது.
மொத்தம், 2,200 மீட்டர் தூரம் பணிகளில், 2100 மீட்டர் பணிகள் முடிவுற்றுள்ளது. மீதி, 100 மீட்டர் பணிகள் மட்டும் உள்ளது. இந்த மாத இறுதிக்குள் இந்த பணி முழுமையாக முடிவுறும் என, நீர்வளத்துறையினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து மேலும் அவர்கள் கூறியது: மேடவாக்கம் ஏரி, பள்ளிக்கரணை ஏரி, பள்ளிக்கரணை அணை ஏரி, சுண்ணாம்பு கொளத்தூர் ஏரி, கோவிலம்பாக்கம் ஏரி ஆகிய ஏரிகளுக்கு உபரி நீர் கால்வாய் இல்லை. இதனால் மழைக் காலங்களில் ஏரி நிரம்பி குடியிருப்புகளை சூழ்கிறது.
இதன் காரணமாகவே மேற்கூறிய அனைத்து ஏரிகளையும் மூடு கால்வாய் மூலம் இணைத்து பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் மழைநீர் செல்ல வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதனால் மழைக்காலங்களில் குடியிருப்புகளுக்கு வெள்ள பாதிப்பு ஏற்படாது.
இதில் பள்ளிக்கரணை அணை ஏரியில் மட்டும் இரண்டு வழித்தடத்தில் பாதாள மூடு கால்வாய் அமைக்கப்பட்டுள்ளது. இதில் ஒன்று ஏரிகளை இணைத்து வழித்தடம் அமைத்து மூடு கால்வாய் அமைக்கப்பட்டுள்ளது. இதேபோல் மற்றொரு வழித்தடம் தாம்பரம் - வேளச்சேரி சாலை வழியாக பாதாள மூடு கால்வாய் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த பணி மட்டும் 100 மீட்டர் பாக்கி உள்ளது. இதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. மற்ற பணிகள் அனைத்தும் முடிந்து விட்டன. இந்த மாத இறுதிக்குள் அனைத்து பணிகளும் முடிந்து விடும். வரும் பருவ மழையின் போது பள்ளிக்கரணை, மேடவாக்கம், கோவிலம்பாக்கம் போன்ற பகுதிகளில் மழைநீர் பாதிப்புகள் இருக்காது என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT