Published : 17 Sep 2025 12:20 PM
Last Updated : 17 Sep 2025 12:20 PM
சென்னை: டெல்லியில் அமித் ஷாவை சந்தித்து தேச விடுதலைக்காக பாடுபட்ட பசும்பொன் முத்துராமலிங்க தேவருக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்று அதிமுக சார்பில் கடிதம் கொடுத்ததாக எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்த பதிவில், “உள்துறை அமைச்சர் அமித் ஷாவை, அதிமுக தலைமைக் கழக நிர்வாகிகள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களோடு நேற்று சந்தித்து, தேச விடுதலைக்காக பாடுபட்ட பசும்பொன் உ.முத்துராமலிங்கத் தேவருக்கு இந்திய நாட்டின் உயரிய விருதான பாரத ரத்னா வழங்கிட வேண்டும் என அதிமுக சார்பில் கடிதம் வழங்கி வலியுறுத்தினேன்.” என்று பதிவிட்டுள்ளார்.
கடந்த வாரம், செங்கோட்டையன் டெல்லி சென்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து பரபரப்பை ஏற்படுத்தினார். இந்நிலையில், நேற்று டெல்லி சென்ற அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்தார். அதிமுக துணை பொதுச் செயலாளர் கே.பி.முனுசாமி, பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன், தலைமை நிலைய செயலாளர் எஸ்.பி.வேலுமணி, எம்.பி.க்கள் தம்பிதுரை, சி.வி.சண்முகம், இன்பதுரை, தனபால் ஆகியோரும் உடன் சென்றார். பின்னர் அமித் ஷாவும், பழனிசாமியும் தனியே கலந்துரையாடினர்.
இதில் சமீப காலமாக வலுப்பெற்று வரும் அதிமுக ஒருங்கிணைப்புக் குரல், கூட்டணி பலம், பலவீனம் உள்ளிட்ட விவகாரங்கள் பற்றி ஆலோசிக்கப்பட்டிருக்கலாம் என்று கூறப்பட்ட நிலையில், எடப்பாடியோ, முத்துராமலிங்க தேவருக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்று கடிதம் கொடுக்கவே சென்றேன் என்று கூறியுள்ளார். கடிதம் வழங்கும் புகைப்படம் உள்ளிட்ட படங்களையும் அவர் எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT