Published : 17 Sep 2025 06:23 AM
Last Updated : 17 Sep 2025 06:23 AM
சென்னை: சென்னை மாநகராட்சி சார்பில், இதுவரை 12,255 தெரு நாய்களுக்கு மைக்ரோ சிப் பொருத்தப்பட்டுள்ளது.
இது தொடர்பாக, சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்திக் குறிப்பு: மாநகராட்சி சார்பில் தெருநாய்களின் இனப்பெருக்கத்தைக் கட்டுப்படுத்தவும், வளர்ப்பு நாய்களை முறைப்படுத்தவும் நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கடந்த ஒரு மாதத்தில் மட்டும் சிறப்பு முகாம்களின் வாயிலாக 46,122 தெரு நாய்களுக்கு வெறி நோய் (ரேபிஸ்) தடுப்பூசி மற்றும் அக, புற ஒட்டுண்ணி நீக்கம் மருந்து செலுத்தப்பட்டுள்ளது.
கடந்த 2021 முதல் இதுவரை 1.34 லட்சம் நாய்களுக்கு வெறிநாய்க்கடி நோய்த் தடுப்பூசியும், 71,475 தெரு நாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சைகளும் செய்யப்பட்டுள்ளன. தற்போது, சோழிங்கநல்லூர், புளியந்தோப்பு, மீனம்பாக்கம் உள்ளிட்ட 5 நாய்களுக்கான கருத்தடை அறுவை சிகிச்சை மையங்களில், சராசரியாக நாளொன்றுக்கு 115 தெருநாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
கியூஆர் குறியீடு காலர்: நாய்களை முறையாகப் பிடித்து விடுவிப்பதை உறுதி செய்வதற்காக, கியூஆர் குறியீடு காலர்கள் மற்றும் மைக்ரோ சிப் பொருத்தும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதுவரை 12,255 தெருநாய்களுக்கு கியூஆர் குறியீடு காலர்கள் மற்றும் முழுமையான தகவல்கள் அடங்கிய மைக்ரோ சிப் பொருத்தப்பட்டுள்ளது.
தெருநாய்களின் இனப்பெருக்கத்தைக் கட்டுப்படுத்த பொதுமக்களிடமிருந்து தெருநாய் தொல்லைகள் தொடர்பான புகார்களை 1913 என்ற உதவி எண்ணிலும், மாநகராட்சியின் 94450 61913 என்ற வாட்ஸ்-ஆப் எண் வாயிலாகவும் புகார் தெரிவிக்கலாம். இவ்வாறு செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT