Published : 17 Sep 2025 06:13 AM
Last Updated : 17 Sep 2025 06:13 AM
சென்னை: மெட்ராஸ் காகித வர்த்தகர்கள் சங்கத்தின் சார்பில் நடத்தப்படும், இந்திய காகித வர்த்தகர்கள் சங்கங்களின் கூட்டமைப்பின், 64-வது ஆண்டு பொதுக்குழு மற்றும் 3 நாள் அகில இந்திய மாநாட்டின் தொடக்க விழா சென்னையில் கடந்த செப்.12-ம் தேதி நடைபெற்றது.
இவ்விழாவில் தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகித நிறுவனத்தின் தலைவர் சந்தீப் சக்சேனா சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று, மாநாட்டை தொடங்கி வைத்து சங்கத்தின் ஆண்டுமலரை வெளியிட்டு பேசியதாவது: இத்துறையை பொறுத்தவரை ஆலைகள், வர்த்தகர்கள் இரண்டும் ஒரு வாகனத்தின் சக்கரங்கள் போல பிரிக்க முடியாது.
காகிதத்துக்கான மூலப் பொருட்கள் விவசாயத்தில் இருந்துதான் கிடைக்கின்றன. விவசாயிகளின் வளர்ச்சியையும் கருத்தில் கொள்ள வேண்டும். ஜிஎஸ்டி வரி முரண்பாடு குறித்த உங்களுடைய கோரிக்கைகளை முறையாக அணுகி தீர்வு காணுங்கள் என்றார்.
காகித வர்த்தகர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் மெஹுல் மேத்தா மற்றும் நிர்வாகிகள் பேசுகையில், “காகித வர்த்தகம் மற்றும் காகிதப் பொருட்கள் துறை இந்தியாவின் முக்கியத் துறைகளில் ஒன்று. இது 5 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு நேரடி வேலைவாய்ப்பையும், 20 லட்சம் பேருக்கு மறைமுக வேலைவாய்ப்பையும் வழங்குகிறது.
தற்போது பயிற்சிப் புத்தகங்கள், நோட்டுப் புத்தகங்கள் மற்றும் வரை படங்களுக்குப் பயன்படுத்தப்படும் காகிதத்துக்கு ஜிஎஸ்டி இல்லை என கூறப்பட்டுள்ளது. அதே நேரத்தில், நாள்காட்டிகள், டைரிகள், சுவரொட்டிகள் மற்றும் எழுது பொருட்களை அச்சிடுவதற்குப் பயன்படுத்தப்படும் காகிதத்துக்கு 18 சதவீதம் வரி விதிக்கப்படுகிறது.
ஜிஎஸ்டி-யை 2 அடுக்கு அமைப்பாக மாற்றுவது வரவேற்கத்தக்க நடவடிக்கை. இருப்பினும், காகிதம் மற்றும் அட்டைப் பொருட்களுக்கு, ஒரே மாதிரியான 5 சதவீத ஜிஎஸ்டி அவசியமானது. எனவே, இதுகுறித்து மத்திய அரசு பரிசீலனை செய்ய வேண்டும்” என்றனர். பொதுக் குழுவில் 2025-26-ம் ஆண்டுக்கான தேசியத் தலைவராக சென்னையைச் சேர்ந்த ராஜேஷ் ஜெயின் தேர்வு செய்யப்பட்டார். அவர் கடந்த சனிக்கிழமை பதவியேற்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT