Published : 17 Sep 2025 10:22 AM
Last Updated : 17 Sep 2025 10:22 AM
புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் பாஜக அங்கம் வகிக்கும் என்டிஏ கூட்டணி ஆட்சி நடக்கிறது. முதல்வரையும் சேர்த்து மொத்தம் 6 அமைச்சர்கள் இருக்கிறார்கள். இதில், முதல்வர் உள்ளிட்ட நான்கு அமைச்சர்கள் என்.ஆர்.காங்கிரஸ் வைத்துக்கொண்ட நிலையில், இரண்டு அமைச்சர்கள் மற்றும் சபாநாயகர் பதவிகள் பாஜக-வுக்கு ஒதுக்கப்பட்டன.
முதல்வராக 2021 மே 7-ல் ரங்கசாமி பொறுப்பேற்ற நிலையில், அதன் பிறகு 50 நாட்கள் கழித்து ஜூன் 27-ல் தான் மற்ற அமைச்சர்கள் பொறுப்பேற்றனர். பாஜக-வில் முதலில் நமச்சிவாயமும், சாய் ஜே.சரவணன்குமாரும் அமைச்சர்களாகப் பொறுப்பேற்றார்கள்.
இதையடுத்து, பாஜக எம்எல்ஏ-வான ஜான்குமாருக்கு அமைச்சர் பதவி கிடைக்காததைக் கண்டித்து அவரது ஆதரவாளர்கள் பாஜக அலுவலகத்தை முற்றுகையிட்டனர். ஆனாலும், வேலை நடக்கவில்லை. எனினும் ஜான்குமார் அமைச்சராகும் முயற்சிகளை தொடர்ந்து கொண்டே இருந்தார். இதனிடையே, அமைச்சர் மற்றும் வாரியத் தலைவர் பதவிகளை எதிர்பார்த்து ஏமாந்து போன பாஜக எம்எல்ஏ-க்கள், சுயேச்சைகள் சிலரை சேர்த்துக் கொண்டு தனி அணியாக செயல்பட்டனர்.
இந்த நிலையில், மக்களவைத் தேர்தல் தோல்வியை அடுத்து அதிருப்தி எம்எல்ஏ-க்களை திருப்திப்படுத்துவதற்கான வேலைகளை முன்னெடுத்தது பாஜக டெல்லி தலைமை. அதன் ஒரு பகுதியாக, டெல்லியின் உத்தரவால் பாஜக அமைச்சர் சாய் ஜே.சரவணன்குமார் தனது பதவியை ஜூன் 27-ல் ராஜினாமா செய்தார்.
அவருக்குப் பதிலாக, அதிருப்தியில் இருந்த ஜான்குமார் அமைச்சரவைக்குள் கொண்டுவரப்பட்டார். அமைச்சராக அறிவிக்கப்பட்ட பிறகும் 2 வார காத்திருப்புக்குப் பிறகே ஜூலை 14-ல் அமைச்சராகப் பொறுப்பேற்றார் ஜான்குமார். ஆனபோதும், அவருக்கு துறைகள் ஏதும் ஒதுக்கப்படாததால் 50 நாட்களைக் கடந்தும் இலாகா இல்லாத அமைச்சராகவே தொடர்கிறார் ஜான்குமார்.
இதுபற்றி புதுச்சேரி சட்டப்பேரவை வட்டாரங்களில் விசாரித்தபோது, "அமைச்சராக இருந்த சாய் ஜே.சரவணன்குமார், ஆதிதிராவிடர் நலன்,
தீயணைப்பு, சிறுபான்மையினர் நலன் உள்ளிட்ட துறைகளை கவனித்து வந்தார். ஆனால், ஜான்குமாருக்கு அப்படியே சாய் சரவணன் வைத்திருந்த துறைகளை ஒதுக்காமல் அவருக்கு முக்கியத்துவம் வாய்ந்த துறைகளை ஒதுக்க நினைக்கிறது பாஜக தலைமை.
அப்படி முக்கிய துறைகளை அவருக்கு ஒதுக்கினால், என்.ஆர்.காங்கிரஸ் அமைச்சர்களுக்கும் இலாகா மாற்ற வேண்டி வரலாம். இல்லாவிட்டால் முதல்வரே தன்வசம் உள்ள சில துறைகளை விட்டுக்கொடுக்க வேண்டி இருக்கும். ஆனால், ‘அடுத்த சில மாதங்களில் தேர்தல் வரப்போவதால் இப்போது கூட்டணிக்குள் எந்தக் குழப்பமும் செய்ய வேண்டாம். அப்படி அவசியம் ஏற்பட்டால் பாஜக அமைச்சர்கள் வைத்திருக்கும் துறைகளுக்குள்ளேயே மாற்றம் செய்து கொள்ளுங்கள்’ என முதல்வர் தந்திரமாகச் சொல்லிவிட்டார். அதனால் ஜான்குமாருக்கு இலாகா ஒதுக்குவதில் சிக்கல் நீடிக்கிறது” என்றனர்.
இதுகுறித்து என்.ஆர்.காங்கிரஸ் வட்டாரத்தில் விசாரித்த போது, “இதுவரை இரண்டு முறை அமைச்சரவையில் மாற்றம் செய்திருக்கிறார் முதல்வர் ரங்கசாமி. முதலில், என்.ஆர்.காங்கிரஸ் அமைச்சராக இருந்த சந்திர பிரியங்கா நீக்கப்பட்டார். அதன் பிறகு ஐந்து மாதங்கள் கழித்தே புதிய அமைச்சராக திருமுருகன் பதவியேற்றார். அவரும் இப்படித்தான் மாதக் கணக்கில் இலாகா இல்லாத அமைச்சராகவே வலம் வந்தார். சொந்தக் கட்சிக்காரரான திருமுருகனுக்கே 138 நாட்கள் கழித்துத்தான் துறைகளை ஒதுக்கினார் ரங்கசாமி. அப்படிப்பட்டவர், பாஜக-வைச் சேர்ந்த ஜான்குமாருக்கு மட்டும் கேட்டதுமே பசையான துறைகளை கொடுத்து விடுவாராக்கும்” என்றனர்
புதுதாக அமைச்சராக பொறுப்பேற்ற ஜான்குமாருக்கு இலாகா ஒதுக்கீடு செய்ய என்ன முயற்சி எடுத்திருக்கிறீர்கள் என மாநில பாஜக தலைவர் ராமலிங்கத்திடம் கேட்டதற்கு, "ஜான்குமாருக்கு இலாகா ஒதுக்குவது தொடர்பாக முதல்வரிடம் கலந்தாலோசித்து விரைவில்(?) அவருக்கு இலாகா ஒதுக்கீடு செய்ய ஆவன செய்வோம்” என்றார்.
புதிதாக பொறுப்பேற்ற பாஜக அமைச்சருக்கு எப்போதுதான் இலாகா ஒதுக்குவீர்கள் என முதல்வர் ரங்கசாமியிடம் கேட்டதற்கு, "எப்போது வேண்டுமானாலும் ஒதுக்கப்படும்" என்று, வரும்... ஆனா, வராது... ஸ்டைலிலேயே சொன்னார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT