Published : 17 Sep 2025 06:18 AM
Last Updated : 17 Sep 2025 06:18 AM
சென்னை: ‘இந்து தமிழ் திசை’ நாளிதழின் 13-வது ஆண்டு தொடக்கத்தையொட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
முதல்வர் மு.க.ஸ்டாலின்: தமிழ்ப் பத்திரிகையுலகில் புதுப்போக்கை உருவாக்கிடும் வகையில் பாரம்பரியம் மிக்க ‘தி இந்து’ குழுமத்தால் தொடங்கப்பட்ட ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் 12 ஆண்டுகளை நிறைவு செய்து, 13-வது ஆண்டில் அடியெடுத்து வைப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.
ஆங்கில நாளேடுகளில் வெளிவரும் தரமான கட்டுரைகளின் தமிழாக்கம், சிறுவர், மகளிர் உள்ளிட்டோருக்கு ஊக்கமளிக்கும் சிறப்புப் பக்கங்கள், பல்வேறு துறை சார்ந்த வல்லுநர்களின் ஆழ்ந்த கருத்துகளை வெளிப்படுத்திடும் கருத்துப் பேழை, உள்ளூர் நடப்புகளை அங்குலம் அங்குலமாக அளந்திடும் ஊர்வலம், சிறந்த நூல் அறிமுகங்கள், இலக்கிய ஆர்வலர்களை மகிழ்வித்திடும் பகுதிகள் என அனைத்தும் அடங்கிய பெட்டகமாக ‘இந்து தமிழ் திசை’ வெளியாகி வருகிறது.
நம்பகத்தன்மை மிக்க செய்திகளுக்கான நாளேடான ‘இந்து தமிழ் திசை’ கடந்த 12 ஆண்டுகளில் பல்வேறு பிரிவினருக்கும் வழிகாட்டும் நிகழ்ச்சிகளையும் தமிழகமெங்கும் நடத்திவருவது பாராட்டக்குரியது.
திராவிட மாடல் அரசின் சிறந்த திட்டங்களைப் பாராட்டி, பல தலையங்கங்களை தீட்டி, திட்டங்கள் குறித்து மக்களிடம் தொடர்ந்து விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது. இவற்றுக்கு எல்லாம் மகுடம் வைத்தாற்போல, முத்தமிழறிஞர் கலைஞர் குறித்த ‘தெற்கிலிருந்து ஒரு சூரியன்’, பேரறிஞர் அண்ணாவின் பன்முகப் பரிமாணத்தை வெளிப்படுத்தும் ‘மாபெரும் தமிழ்க் கனவு’, தந்தை பெரியாரை அனைத்து இல்லங்களுக்கும் கொண்டு சேர்க்கும் ‘தமிழர் தலைவர்’ ஆகிய சிறப்பு நூல்களையும் தங்களது பதிப்பகம் வாயிலாக வெளியிட்டு, தமிழ் மக்களின் நெஞ்சில் தனி இடம் பிடித்துள்ளது ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ்.
எனக்கு அன்பளிப்பாக வழங்கப்படும் நூல்களில் பெரும்பான்மையான நூல்கள் ‘இந்த தமிழ் திசை’ பதிப்பகம் வெளியிட்ட நூல்கள்தான். எத்தனை ஊடகங்கள் வந்தாலும் அச்சு ஊடகம் வழங்கும் தெளிந்த, ஆழ்ந்த, விரிந்த செய்திக்கான தேவை இருப்பதை உறுதி செய்யும் வகையில் ‘இந்து தமிழ் திசை’ திகழ வாழ்த்துகிறேன்.
‘இந்து தமிழ் திசை’யின் இந்த வெற்றிப் பயணத்தில் துணைநிற்கும் ஆசிரியர் குழுவினர், செய்தியாளர்கள், புகைப்படக் கலைஞர்கள், வடிவமைப்பாளர்கள், விநியோகஸ்தர்கள் உள்ளிட்ட அனைத்துப் பணியாளர்களுக்கும் எனது பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி: மக்களாட்சி விழுமியங்களைப் பாதுகாக்க வேண்டிய கடமை பத்திரிகைகளுக்கும் உள்ளதால்தான், அவற்றை நான்காவது தூணாகக் கருதுகிறோம். அவ்வகையில், 12 ஆண்டுகளை நிறைவு செய்து, 13-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் நடுநிலையோடு உண்மை செய்திகளை மக்களுக்கு அளித்து, சமூக முன்னேற்றத்துக்கான தனது அரும்பணியைத் தொடர அதிமுக சார்பில் இதயப்பூர்வமான நல் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். `இந்து தமிழ் திசை' நாளிதழ் தரணியெங்கும் சிறக்க வேண்டும்.
தமிழக காங்கிரஸ் தலைவர் கு.செல்வப்பெருந்தகை: வெற்றிகரமாக 12-வது ஆண்டை நிறைவு செய்து, 13-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் ‘இந்து தமிழ் திசை’ நாளிதழுக்கும், அதன் ஆசிரியர் குழு மற்றும் நிர்வாகத்துக்கும் மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். 13-வது ஆண்டு மட்டுமல்ல, 113-வது ஆண்டிலும் ‘இந்து தமிழ் திசை’ ஜொலிக்க வாழ்த்துகிறேன்.
சமூகம், அரசியல், பொருளாதாரம், கலை, இலக்கியம், உள்ளூர், மாநிலம், தேசியம், உலக செய்திகள் என அனைத்து செய்திகளையும் நடுநிலை தவறாமலும் வழங்கி வரும் ‘இந்து தமிழ் திசை’ நாளேட்டை மனதார வாழ்த்துகிறேன்.
பாமக தலைவர் அன்புமணி: ‘தி இந்து’ குழுமத்தில் இருந்து வெளிவரும் ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் 12 ஆண்டுகளை நிறைவு செய்து, 13-ம் ஆண்டில் அடியெடுத்து வைப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இத்தருணத்தில் ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் நிர்வாகத்தினர், ஆசிரியர் குழுவினர் உள்ளிட்ட அனைத்துப் பிரிவினருக்கும் எனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
‘இந்து தமிழ் திசை’ நாளிதழில் செய்திகள் மட்டுமின்றி, செய்திக் கட்டுரைகள், அரசியல் ஆய்வுகள், இலக்கியச் செய்திகள், நூல் மதிப்பாய்வுகள் உள்ளிட்டவையும் வெளிவருவது கூடுதல் சிறப்பாகும். தமிழ் ஊடக உலகின் தனிச்சிறப்பு மிக்க ஊடகங்களில் ஒன்றான ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் தரணியெங்கும் சிறக்க வாழ்த்துகிறேன்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT