Published : 16 Sep 2025 09:22 PM
Last Updated : 16 Sep 2025 09:22 PM
பெரியகுளம்: தமிழகத்தை காப்பதற்காக அதிமுக ஒருங்கிணைய வேண்டும் என்பதை வலியுறுத்தி பெரியகுளத்தின் பல பகுதிகளிலும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. இதில் இபிஎஸ் - ஓபிஎஸ் முகமலர்ச்சியுடன் கைகுலுக்குவது போன்ற படங்கள் இடம்பெற்றுள்ளன. ஒருங்கிணைவு விஷயத்தில் தொடர்ந்து சர்ச்சை இருந்து வரும் நிலையில், இந்த போஸ்டரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
அதிமுகவில் இருந்து முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், டிடிவி தினகரன், சசிகலா உள்ளிட்டோர் அடுத்தடுத்து வெளியேற்றப்பட்டனர். செங்கோட்டையனின் கட்சிப் பதவி பறிக்கப்பட்டது. தற்போது பொதுச் செயலாளரான பழனிசாமி அதிமுகவை வழிநடத்தி வருகிறார். இந்நிலையில், கட்சியில் இருந்து வெளியேறியவர்களை ஒருங்கிணைக்க வேண்டும் என்று எதிர்தரப்பினர் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால், அதிமுக தரப்பு தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வருகிறது.
இந்நிலையில், பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் இருவரும் சிரித்தபடி கைகுலுக்குவது போல பெரியகுளத்தில் பிளக்ஸ் பேனர்கள், போஸ்டர்கள் பல பகுதிகளில் உள்ளன. இதில் செங்கோட்டையன், டிடிவி தினகரன், சசிகலா ஆகியோர் படங்களும் இடம்பெற்றுள்ளன. மேலும் ‘தமிழகத்தை காப்போம். கழகத்தை ஒன்றிணைப்போம். பிரிந்துள்ள தொண்டர்களே, தலைவர்களே ஒன்று சேருங்கள். 2026 தேர்தலில் வென்றிடுவோம்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
போஸ்டர் ஒட்டிய ஓபிஎஸ் தரப்பைச் சேர்ந்த அம்மா பேரவை ஒன்றியச் செயலாளர் டி.முத்து கூறுகையில், “மேல்மட்ட தலைவர்கள்தான் விலக்கப்பட்டுள்ளனர். நாங்கள் இன்னமும் அதிமுகவில்தான் இருக்கிறோம். அனைவரும் ஒருங்கிணைந்தால்தான் வரும் தேர்தலில் வெற்றி பெற முடியும். இந்த உணர்வுகளை பிரதிபலிக்கும் வகையில் எங்கள் எண்ணங்களை இந்த போஸ்டரில் வெளிப்படுத்தி இருக்கிறோம்” என்றார். இந்த ஒருங்கிணைவு போஸ்டரால் பெரியகுளத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT