Last Updated : 16 Sep, 2025 05:53 PM

 

Published : 16 Sep 2025 05:53 PM
Last Updated : 16 Sep 2025 05:53 PM

உரங்களை விரைந்து வழங்கிட உடனடி நடவடிக்கை தேவை: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்

சென்னை: தமிழ்நாட்டுக்கு வழங்கப்படவேண்டிய 27,823 மெட்ரிக் டன் யூரியா, 15,831 மெட்ரிக் டன் டிஏபி, 12,422 மெட்ரிக் டன் எம்ஓபி மற்றும் 98,623 மெட்ரிக் டன் என்பிகே காம்ப்ளக்ஸ் உரங்களை உடனடியாக வழங்கிட நடவடிக்கை எடுக்கக் கோரி பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

இது தொடர்பாக பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில், “நாட்டின் முக்கியமான நெல் உற்பத்தி மாநிலங்களில் தமிழ்நாடு ஒன்றாகும். மாநிலத்தில் விவசாய உற்பத்தியை அதிகரிக்கவும், விவசாயிகளின் வருமானத்தை உயர்த்தவும் தமிழக அரசு தொடர்ந்து உயர் முன்னுரிமை அளித்து வருகிறது. விவசாய உற்பத்தியை அதிகரிக்க ஊக்கமளிக்கும் வகையில் குறிப்பான பகுதிக்கு ஏற்ப திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அத்துடன், தேவையான வேளாண் இடுபொருட்கள் கிடைப்பதையும் சீராக கண்காணித்தும் வருகிறது.

பருவமழை முன்கூட்டியே தொடங்குவதைக் கருத்தில் கொண்டு, தமிழ்நாட்டில் 2025 ஜூன் மாதம் முதல் காரிப் பருவத்தில் நெற்பயிர் முழுவீச்சில் பயிரிடப்பட்டுள்ளது. தற்போதைய நிலவரப்படி, 5.661 லட்சம் ஹெக்டேரில் நெல் பயிரிடப்பட்டுள்ளது. இது கடந்த வருடத்தில் பயிரிடப்பட்ட 5.136 லட்சம் ஹெக்டேர் பரப்பளவைவிட 0.525 லட்சம் ஹெக்டேர் (10%) அதிகமாகும். இதனால் மாநிலம் முழுவதும் நேரடி உரங்களுக்கு அதிக தேவை நிலவுகிறது.

மாநிலத்தில் பெய்துவரும் பரவலான மழை மற்றும் முக்கிய நீர்த்தேக்கங்களில் தண்ணீர் போதுமான அளவில் உள்ளதன் காரணமாக, விவசாய உற்பத்திக்குத் தேவைப்படும் யூரியா, டிஏபி, எம்ஓபி மற்றும் காம்ப்ளக்ஸ் உரங்களை உற்பத்தியாளர்களால் இந்திய அரசின் வழங்கல் திட்டத்தின்படி 2025 ஏப்ரல் முதல் 2025 ஆகஸ்ட் வரை வழங்கிடவில்லை. மேலும் அவர்களால் மொத்த ஒதுக்கீட்டில் சுமார் 57 விழுக்காடு அளவிற்கு மட்டும்தான் வழங்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ள முதல்வர் ஸ்டாலின், நிறுவன வாரியாக இதுவரை உரங்கள் வழங்கப்பட்ட விவரங்களைப் பட்டியலிட்டுள்ளார்.

“இந்த நிலையில், தமிழ்நாட்டின் தற்போதைய காரிப் மற்றும் எதிர்வரும் ராபி பருவத்திற்கு, உரப் பற்றாக்குறையை தவிர்த்திடும் வகையில், தமிழ்நாட்டுக்கு வழங்கப்படவேண்டிய 27,823 மெட்ரிக் டன் யூரியா, 15,831 மெட்ரிக் டன் டிஏபி, 12,422 மெட்ரிக் டன் எம்ஓபி மற்றும் 98,623 மெட்ரிக் டன் என்பிகே காம்ப்ளக்ஸ் உரங்களை உடனடியாக வழங்கிடத் தேவையான அறிவுரைகளை ரசாயன மற்றும் உர அமைச்சகத்துக்கு வழங்கிடுமாறு பிரதமரை கேட்டுக் கொள்கிறேன்” என்று முதல்வர் ஸ்டாலின் எழுதிய கடித்ததில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x