Published : 16 Sep 2025 06:38 AM
Last Updated : 16 Sep 2025 06:38 AM
ஈரோடு: அதிமுக ஒன்றிணைய வேண்டும் என்ற எனது கருத்துக்கு தொண்டர்கள், பொதுமக்களிடையே வரவேற்பு கிடைத்துள்ளது. இதை புரிய வேண்டியவர்கள் புரிந்து கொள்ள வேண்டும் என முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.
முன்னாள் அமைச்சரும், கோபி தொகுதி அதிமுக எம்எல்ஏவுமான செங்கோட்டையன், கடந்த 5-ம் தேதி, செய்தியாளர்களிடம் பேசும்போது,; ‘அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்களை ஒன்றிணைக்கும் முயற்சியை 10 நாட்களில் தொடங்க வேண்டும். இதைச் செய்யத் தவறினால், இதே மனநிலையில் இருப்பவர்களை சேர்த்து ஒருங்கிணைக்கும் பணியை நாங்களே மேற்கொள்வோம்’ என தெரிவித்தார்.
அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமிக்கு 10 நாள் கெடு விதித்து செங்கோட்டையன் அறிவிப்பு வெளியிட்டது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த அறிவிப்பு வெளியான அடுத்த நாளே, செங்கோட்டையன் வகித்து வந்த அமைப்புச் செயலாளர் மற்றும் ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட செயலாளர் கட்சி பொறுப்புகள் பறிக்கப்பட்டன.
இதன் தொடர்ச்சியாக கடந்த 7-ம் தேதி டெல்லி சென்ற செங்கோட்டையன், மத்திய அமைச்சர்கள் அமித்ஷா மற்றும் நிர்மலா சீதாராமன் ஆகியோரை சந்தித்துப் பேசினார். அதிமுகவை ஒருங்கிணைப்பது தொடர்பாக அவர்களிடம் பேசியதாக செங்கோட்டையன் தெரிவித்தார். இந்நிலையில், செங்கோட்டையன் விதித்திருந்த 10 நாள் கெடு நேற்று முடிவடைந்த நிலையில், அடுத்த கட்ட நடவடிக்கை குறித்த அவரது அறிவிப்பு வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது.
செய்தியாளர் சந்திப்பு: ஈரோடு மாவட்டம் கோபியில் உள்ள ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட அதிமுக அலுவலகத்துக்கு நேற்று காலை வந்த செங்கோட்டையன், முன்னாள் முதல்வர் அண்ணா படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது: எம்ஜிஆர், ஜெயலலிதாவின் கனவை நனவாக்கும் வகையில், 100 ஆண்டு காலம் அதிமுக ஆட்சியில் அமர வேண்டும் என்ற நோக்கில் தான் கடந்த 5-ம் தேதி மனம் திறந்து பேசினேன். என்னைப் பொறுத்தவரை அதிமுக ஒன்றுபட வேண்டும் என்பதே எனது நோக்கம்.
எனது கருத்துக்கு கட்சித் தொண்டர்கள், பொதுமக்கள் இடையே வரவேற்பு கிடைத்துள்ளது. அவர்களின் கருத்தைத்தான் நான் பிரதிபலித்துள்ளேன். இதை புரிய வேண்டியவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். அடுத்தாண்டு நடக்கும் சட்டப்பேரவைத் தேர்தலில், அதிமுக வெற்றி பெற, அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்.
‘மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணம் உண்டு, மறப்போம் மன்னிப்போம்’ என்ற அண்ணாவின் பொன்மொழிகளை அவரது பிறந்தநாளில் நினைவூட்டுகிறேன். இவ்வாறு அவர் தெரிவித்தார். மத்திய அமைச்சர் அமித்ஷா உடனான சந்திப்பு உள்ளிட்ட பல்வேறு கேள்விகளுக்கு செங்கோட்டையன் பதில் அளிக்கவில்லை.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT