Published : 16 Sep 2025 06:24 AM
Last Updated : 16 Sep 2025 06:24 AM
திருச்சி: கட்சியின் கட்டமைப்பை மேலும் வலுப்படுத்த திமுகவுடன் அனுசரணையாக செயல்படுங்கள் என மதிமுக மாநில மாநாட்டில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ தொண்டர்களுக்கு அறிவுறுத்தினார்.
அண்ணாவின் 117-வது பிறந்த நாளையொட்டி திருச்சி சிறுகனூரில் மதிமுக மாநில மாநாடு நேற்று நடைபெற்றது. மதிமுக ஆட்சிமன்றக் குழுச் செயலாளர் சி.கிருஷ்ணன் தலைமை வகித்தார். மாநில துணைப் பொதுச்செயலாளர் டாக்டர் ரொஹையா ஷேக் முகமது கட்சிக் கொடியேற்றி வைத்தார்.
கூட்டத்தில், முதன்மைச் செயலாளர் துரை வைகோ எம்.பி. பேசியது: அண்ணாவின் பிறந்த நாளை எழுச்சிமிகு மாநாடாக நடத்தும் ஒரே இயக்கம் மதிமுக மட்டும் தான். இந்த இயக்கத்தை அழித்துவிடலாம், பிளவுபடுத்தலாம் என 32 ஆண்டாக சிலர் முயற்சித்தனர். எப்போதும் அது முடியாது. அண்ணா கண்ட வளமான தமிழகம் அமையும் வரை மதிமுக வீழாது என்றார்.
தொடர்ந்து, பொதுச்செயலாளர் வைகோ பேசியது: மனிதர்கள் வருவார்கள், சிலர் போவார்கள், வெகு சிலர் விலகிப்போவார்கள். உங்களையும், என்னையும் எந்த சக்தியாலும் பிரிக்க முடியாது. மதிமுகவுக்கு பல சோதனைகள் வந்தாலும் அதை கடந்து வந்துள்ளோம்.
இந்தியாவின் பன்முகத் தன்மையை உடைத்து ஒரே மொழி, ஒரே கலாச்சாரம், ஒரே பண்பாடு, ஒரே நாடு என ஆர்எஸ்எஸ், இந்துத்துவா சக்திகள் பிரகடனம் செய்துள்ளன. அதை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம். நமது கட்சி அமைப்பை வலுப்படுத்த நமக்கு நேசமான திமுகவினருடன் அனுசரணையை மேற்கொள்ளுங்கள். முதல்வர் ஸ்டாலின் சொல்லாத, சொன்ன வாக்குறுதிகளை நிறைவேற்றிவிட்டார். சில வாக்குறுதிகளை மத்திய அரசின் தடைசுவர்களால் நிறைவேற்ற முடியவில்லை.
வரும் சட்டப்பேரவைத் தேர்தலிலும் திமுக கூட்டணி தான் அபரிமிதமான வெற்றியை பெறும். திமுக தனிப்பெரும்பான்மையை பெறும். மீண்டும் ஸ்டாலின் மகுடம் ஏந்துவார். இவ்வாறு அவர் பேசினார். கூட்டத்தில், அவைத் தலைவர் ஆடிட்டர் ஆ.அர்ஜூனராஜ், பொருளாளர் மு.செந்திலதிபன், துணைப் பொதுச் செயலாளர்கள் செஞ்சி ஏ.கே.மணி, ஆடுதுறை இரா.முருகன், தி.மு.ராசேந்திரன் உள்ளிட்டோர் சிறப்புரையாற்றினர். பெரம்பலூர் மாவட்டச் செயலாளர் எஸ்.ஜெயசீலன் நன்றி கூறினார்.
மாநாட்டில், வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வெற்றி பெற மதிமுக பணியாற்றும். ஜிஎஸ்டி வரி மாற்றி அமைத்ததால் தமிழகத்துக்கு ஏற்படும் வரி இழப்பை மத்திய அரசு ஈடுகட்ட வேண்டும். தமிழ் ஈழம் அமைய பொதுவாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்பன உள்ளிட்ட 12 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT