Published : 15 Sep 2025 08:27 PM
Last Updated : 15 Sep 2025 08:27 PM

“மக்கள் பிரச்சினைகளை எழுதி வைத்துப் படிப்பது சரியல்ல” - விஜய் மீது சீமான் விமர்சனம்

சென்னை: “மக்கள் பிரச்சினைகளை எழுதி வைத்துப் படிப்பது என்பது சரியானது அல்ல” என்று தவெக தலைவர் விஜய் மீது நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சனத்தை முன்வைத்துள்ளார்.

இது தொடர்பாக சென்னை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களிடம் அவர் கூறியது: “ஒவ்வொரு தொகுதியிலும், ஒவ்வொரு ஊரிலும் மக்களுக்கு என்ன பிரச்சினை இருக்கிறது என்பதை சொல்லும்போது இதயத்தில் இருந்து வரவேண்டும். அதை எழுதி வைத்துப் படிப்பது என்பது சரியானது அல்ல. அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பிடம் எழுதி கொடுத்தால் கூட, மேடையில் ஏறி இதுதான் பிரச்சினை என்பதை படித்து காட்டிவிட்டு சென்றுவிடுவாரே.

திமுக, அதிமுகவை விட தவெக தலைவர் விஜய்யை எதிர்ப்பதையே நான் மும்முரம் காட்டுவதாக சொல்கின்றனர். திமுகவை நிறுவியவர் அண்ணா. அதிமுகவை நிறுவியவர் எம்ஜிஆர். விஜய் இவர்கள் இருவரையும் சேர்த்து தூக்கிக் கொண்டு வருகிறார். இருவரின் படத்தை மேடையில் வைத்துவிட்டால் மட்டும் போதுமா?

அண்ணா மீது எனக்கு பெருமதிப்பு உண்டு. அவரது ஆட்சியில் குறை சொல்வதற்கு ஒன்றுமில்லை. அண்ணா அரசியலுக்கு வந்த பிறகு தான் தமிழரின் வரலாறு, இலக்கியம் எல்லாம் அரசியல் மேடையில் பேசப்பட்டது. அந்தப் பெருமை அண்ணாவையே சேரும். அவரை பற்றி ஒரு அரை மணி நேரமாவது பேச வேண்டாமா?

இலங்கை தமிழர் விடுதலைக்கு உதவிய எம்ஜிஆரை போற்றுகிறோம். அதேநேரம்ம் தமிழகத்தில் கல்வியை, மருத்துவத்தை தனியார் மயப்படுத்தியது, தமிழில் இருந்து ஆங்கிலத்தை பயிற்று மொழியாக மாற்றியது, முல்லை பெரியாறு அணையை கேரளாவுக்கு தாரைவார்த்தது எல்லாமே எம்ஜிஆர் தானே. அதை ஏற்க முடியுமா?

இதைப் பற்றியும் விஜய் பேச வேண்டும் அல்லவா? நானும் சினிமாவில் இருந்துதான் வந்திருக்கிறேன். ஆனால், களத்தில் நான் மக்களை சந்திக்கிறேன். அவர் ரசிகர்களை சந்திக்கிறார்” என்று சீமான் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x