Published : 15 Sep 2025 06:11 PM
Last Updated : 15 Sep 2025 06:11 PM

“தவெகவுக்கு எனர்ஜியும், இயல்பான ஆதரவும் இருக்கிறது” - கார்த்தி சிதம்பரம் எம்.பி கருத்து

மதுரை: “தவெகவுக்கு ஒரு எனர்ஜியும், இயல்பான ஆதரவும் இருக்கிறது” என மதுரையில் இன்று காங்கிரஸ் எம்.பி. கார்த்தி ப.சிதம்பரம் தெரிவித்தார்.

மதுரை செல்லூரில் காங்கிரஸ் கட்சி சார்பில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் 80-வது பிறந்த நாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா இன்று நடைபெற்றது. இவ்விழாவில் சிவகங்கை தொகுதி எம்பி கார்த்தி ப.சிதம்பரம் நலத்திட்ட உதவிகள் வழங்கினார். பி்ன்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியது: “இதுவரை விஜய்யின் ரசிகர்களாக இருந்தவர்கள், அவர் கட்சி ஆரம்பித்துள்ளதால் இனிமேல் ஆதரவாளர்களாக மாறுவார்கள்.

அப்படி ஆதரவாளவர்களாக மாறும்போது எல்லா கட்சிகளுக்கும் சேதாரம் ஏற்படும். ஆனால், வரும் தேர்தலில் தமிழகத்தில் திமுக தலைமையிலான கூட்டணியே வெற்றி பெறும். இந்தக் கூட்டணி ஒற்றுமையாகவும், பெரும்பான்மையான வாக்குகள் ஒற்றுமையாகவும் இருக்கிறது. சிறுபான்மை வாக்குகளை பெற அங்கு காங்கிரஸ் கட்சி உள்ளதால் இக்கூட்டணிதான் வெற்றி பெறும்.

யார் கட்சி ஆரம்பித்தாலும் ஆளும் அரசை விமர்சிப்பது இயல்பு. ஆனால், தவெகவுக்கு ஒரு எனர்ஜியும், இயல்பான ஆதரவும் இருக்கிறது. அந்த ஆதரவு, தேர்தலில் கணிசமாக வாக்குகளை பெற்று சீட்களை வெல்வார்களா என்று இப்போது சொல்ல முடியாது. எந்த அரசாக இருந்தாலும் நிறை, குறைகள் இருக்கத்தான் செய்யும். ஆனால், சீர்தூக்கி பார்த்தால் திமுக அரசு பல கோரிக்கைகளை நிறைவேற்றியிருக்கிறது. பெரிய அளவில் குறைகள் இல்லை.

அதிமுக சுதந்திரமாக தன்னிச்சையாக முடிவெடுக்க முடியாமல் உள்ளது. தமிழக மக்களால் புறக்கணிக்கப்பட்ட பாஜகவின் துணைக் கட்சியாக உள்ளது. அதிமுகவுக்கு ஆளுமை மிக்கவர்கள் தலைவர்களாக இருந்தனர். இப்போது அதற்கு மாறுபட்ட தலைமை இருக்கிறது. அங்கு ஒற்றுமை இல்லை. கட்சிக்குள் எந்தக் குழப்பம் வந்தாலும் பஞ்சாயத்துக்கு உடனடியாக டெல்லிக்கு செல்கின்றனர்.

அதிலிருந்து அவர்கள் மீது மக்களுக்கு நம்பிக்கை குறைகிறது. இரட்டை இலை பவர்ஃபுல் சின்னம், ஆளுமை மிக்க தலைவர்கள், அவர்களுக்குள் பிரச்சினை மைனஸாக உள்ளது. அதை விட பாஜகவோடு கூட்டணி வைத்தது பெரிய மைனஸ் ஆக உள்ளது. தமிழகத்தில் ஓர் அரசியல் நியதி உள்ளது. அது பாஜக யாரோடு கூட்டணி வைத்தாலும் அது விளங்காது. அதை நோக்கி அதிமுக செல்வதால் வெற்றிடம் ஏற்படுகிறது. அதை மற்றவர்கள் நிரப்பலாம்.

கூட்டணி ஆட்சி அமையும் என்ற ஏக்கம் 1967-லிருந்து உள்ளது. வரும் தேர்தலிலும் அதே ஏக்கம்தான் இருக்கும். 2006-ல் கூட்டணி வாய்ப்பு வந்தபோது பயன்படுத்திக்கொள்ளவில்லை. 2026-ல் கூட்டணி ஆட்சி வாய்ப்பு வந்தால் பயன்படுத்திக்கொள்வோம். இந்தியா - பாகிஸ்தான் இடையே சில பிரச்சினைகள் இருந்தாலும் ராஜாங்க உறவு முறியவில்லை. அரசியலையும் கிரிக்கெட் விளையாட்டையும் கலக்க தேவையில்லை.

மத்திய அரசு ஜிஎஸ்டியை முதலிலேயே குறைத்திருக்க வேண்டும். மிகவும் தாமதமாக குறைத்ததையும் வரவேற்கிறேன். உலகத்தில் ஜிஎஸ்டியாக இருந்தாலும் வாட் வரியாக இருந்தாலும் ஒரே மாதிரித்தான் இருக்கும். ஆனால், இந்தியாவில்தான் 5, 18, 40 என மூன்று வரி விகிதமாக உள்ளதை ஒரே வரி முறையாக மாற்ற வேண்டும். உலகம் முழுவதும் அத்தியாவசிய பொருட்களுக்கு ஜிஎஸ்டி கிடையாது. அந்த நிலையை நோக்கி செல்வார்கள் என நம்புகிறேன்
என்று அவர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x