Published : 15 Sep 2025 06:23 AM
Last Updated : 15 Sep 2025 06:23 AM
சென்னை: ரயில்களின் மீது கல் எறிபவர்களுக்கு ரயில்வே சட்டத்தின் கீழ் ஆயுள் சிறைத் தண்டனை அல்லது 10 ஆண்டு சிறைத் தண்டனை கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
தெற்கு ரயில்வேயில் பல்வேறு வழித்தடங்களில் விரைவு, பாசஞ்சர் ரயில் மற்றும் மின்சார ரயில்கள் இயக்கப்படுகின்றன. சில
ரயில்களின் மீது கற்களை வீசும் சம்பவங்கள் அவ்வப்போது நடைபெறுகின்றன. கற்களை வீசுபவர்கள் மீது ரயில்வே சட்டத்தின் கீழ், ஆர்பிஎஃப் போலீஸார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இதுகுறித்து தெற்கு ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது: ரயில் மீது கல் வீசுபவர்கள் மீது ரயில்வே துறை கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ரயில்வேக்கு ஏற்பட்ட சேதத்துக்கு சமமான தொகை கல்வீசிய குற்றவாளிகளுக்கு அபராதமாக விதிக்கப்படும். கண்ணூர் எக்சிகியூட்டிவ் விரைவு ரயில் மீது கடந்த மாதம் 30-ம் தேதி நடந்த கல் வீச்சுசம்பவம் தொடர்பாக எர்ணாகுளம் ஆர்பிஎஃப் போலீஸார் 2 பேரை கைது செய்தனர்.
இதுதவிர சில இடங்களில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. இதுபோன்ற சட்டவிரோத மற்றும் ஆபத்தான செயலுக்கு கடுமையான தண்டனை வழங்கும் வகையில், விரைவான நடவடிக்கை எடுக்கப்படும். பயணிகள், ரயில்வே பணியாளர்கள் மற்றும் ரயில் நடவடிக்கைகளின் பாதுகாப்புக்கு கடுமையான அச்சுறுத்தலை ஏற்படுத்துவதால், இதுபோன்ற நாச வேலைகளை இந்திய ரயில்வே மிகவும் தீவிரமாக கருதுகிறது.
இதுபோன்ற குற்றச்செயல்களில் ஈடுபடுவது ரயில்வே சட்டத்தின் கீழ் ஜாமீனில் வெளிவர முடியாத குற்றமாகும். குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்களின் எதிர்கால வேலை வாய்ப்பு மோசமாக பாதிக்கலாம். தீங்கு செய்யும் வகையில், ரயிலை சேதப்படுத்துதல் அல்லது சேதப்படுத்த முயற்சித்தல், ரயில் தண்டவாளத்தின் மீது கற்கள் அல்லது பிற பொருட்களை வீசுதல், தண்டவாளங்கள் இயந்திரங்கள் போன்றவற்றை சேதப்படுத்துதல், ரயில்வேயில் உள்ள நபர்களின் பாதுகாப்புக்கு ஆபத்து ஏற்படுத்தும் நோக்கத்துடன் செயல்படுபவர்களுக்கு ஆயுள் தண்டனை அல்லது 10 ஆண்டுகள் வரை கடுமையான சிறைத் தண்டனையும், முதல்முறை குற்றம்புரிந்தவராக இருந்தால் குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், அடுத்த முறை செய்தால் குறைந்தபட்சம் 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கவும் ரயில்வே சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT