Published : 15 Sep 2025 05:55 AM
Last Updated : 15 Sep 2025 05:55 AM
சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி நாளை (செப்.16) டெல்லி செல்கிறார். குடியரசு துணைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு வாழ்த்து தெரிவிக்க செல்வதாக அதிமுக தலைமை அலுவலகம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் 2026 சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அரசியல் கட்சிகள் கூட்டணி வியூகங்கள் குறித்து ஆலோசித்து வருகின்றன. அதிமுகவில் ஒன்றிணைப்பு குரலை முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் எழுப்பியுள்ளார். அதனால் அவரது கட்சி பொறுப்பும், ஆதரவாளர்களின் கட்சி பொறுப்புகளும் பறிக்கப்பட்டுள்ளன.
இதையடுத்து டெல்லி சென்ற செங்கோட்டையன், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து, அதிமுக ஒன்றிணைந்தால் மட்டுமே, திமுகவை வீழ்த்த முடியும் என்பதை வலியுறுத்தியுள்ளார். டெல்லி சென்று திரும்பிய பிறகு அவர் அமைதி காத்து வருகிறார்.
கட்சி ஒன்றிணைப்பு தொடர்பாக செங்கோட்டையன் விதித்த கெடுவும் செப்.15-ம் தேதியுடன் முடிவடைகிறது. இந்தச் சூழலில் 16-ம் தேதி அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி டெல்லி சென்று, அமித் ஷாவை சந்திக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
நேபாளத்தில் கலவரம் உச்சகட்டத்தை அடைந்திருந்த நிலையில், அதை உற்றுநோக்க வேண்டிய மத்திய உள்துறை அமைச்சர், செங்கோட்டையனை சந்திக்க நேரம் ஒதுக்கியதும், தமிழகத்தில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் தேர்தலை சந்திக்க இருக்கும் பாஜக, அதிமுக தலைமையால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்ட ஒரு நபரை சந்தித்ததும் பழனிசாமிக்கு வருத்தத்தை ஏற்படுத்தி இருப்பதாக தெரிகிறது.
இதுதொடர்பாக விவாதிப்பதற்காக, அமித் ஷாவை சந்திக்கும் நோக்கில் டெல்லி செல்வதாக பழனிசாமிக்கு நெருங்கிய வட்டாரங்களில் கூறப்படுகிறது. இந்த சந்திப்பின்போது, இதர கட்சிகளை கூட்டணியில் சேர்க்கும் நடவடிக்கைகள், பாமகவின் நிலைப்பாடு, தவெகவின் செயல்பாடுகள், தமிழக அரசியல் நிலவரம் தொடர்பாக மத்திய அரசுக்கு வந்துள்ள உளவுத் தகவல்கள் உள்ளிட்டவை குறித்தும் இந்த சந்திப்பில் விவாதிக்க இருப்பதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் அதிமுக தலைமை வெளியிட்ட அறிக்கையில், பழனிசாமி வரும் செப்.16-ம் தேதி புதுடெல்லி செல்கிறார். அங்கு அவர் குடியரசு துணைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சி.பி.ராதாகிருஷ்ணனை சந்தித்து வாழ்த்து தெரிவிக்க உள்ளார்“ என தெரிவித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT