Published : 13 Sep 2025 10:07 AM
Last Updated : 13 Sep 2025 10:07 AM
ராமநாதபுரம்: ‘தவெக தலைவர் விஜய் கொள்கையே இல்லாதவர்’ என கீழக் கரையில் நடைபெற்ற கூட்டத்தில் சீமான் பேசினார். ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் தமிழ்த் தேசிய இஸ்லாமிய கூட்டமைப்பு சார்பில் ‘எது நமக்கான அரசியல்’ என்ற தலைப்பில் கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியதாவது: குஜராத் கலவரத்தை திமுக ஆதரித்தது. அது அந்த மாநிலத்தின் பிரச்சினை என கூறியவர் முன்னாள் முதல்வர் கருணாநிதி. ஆபரேஷன் சிந்தூரை முதலில் ஆதரித்தவர் முதல்வர் ஸ்டாலின். இதை ஆதரித்து ரஷ்யாவுக்கு சென்று பேசியவர் கனிமொழி எம்.பி. இதிலிருந்து பாஜகவுடன் யார் நெருக்கமாக உள்ளனர் என்பது தெரியும்.
அப்படி இருக்கும்போது என்னை ஏன் பாஜகவின் ‘பி டீம்’ என கூறுகின்றனர்? தவெக தலைவர் விஜய் கொள்கையே இல்லாதவர். பெரியார், காமராஜர், வேலுநாச்சியாரை கொள்கையாளர்களாக ஏற்றுக்கொண்டதாக கூறுகிறார்.
ஆனால், அவர்களை பற்றி அவருக்கு 10 நிமிடங்கள் பேசத் தெரியுமா? பாஜக கொள்கை எதிரி; திமுக அரசியல் எதிரி என்கிறார் விஜய். அப்படியென்றால் அதிமுக, காங்கிரஸ் உங்களுக்கு எதிரி இல்லையா? திடீரென வந்து திராவிடமும், தமிழ் தேசியமும் ஒன்று என கூறுகிறார்.
தமிழர்கள் அல்லாதவர்கள் பாதுகாப்பாகவும், வசதியாகவும் வாழ்வதற்காக கொண்டு வரப்பட்டதே திராவிடம். திமுகதான் பாதுகாப்பு என நினைக்கும் முஸ்லிம்களிடம் கேட்கிறேன். திமுக உங்களை பாதுகாக்கிறதா? நீங்கள் திமுகவை பாதுகாக்கிறீர்களா என நினைத்து பார்க்க வேண்டும். இவ்வாறு சீமான் பேசினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT