Published : 12 Sep 2025 09:05 PM
Last Updated : 12 Sep 2025 09:05 PM
மதுரை: பொதுக் கூட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் நடக்கும் இடங்களில் ஆம்புலன்ஸ் உள்ளிட்ட அவசர கால வாகனங்கள் இடையூறின்றி செல்வதை உறுதிப்படுத்த வேண்டும் என காவல் ஆணையர்கள், கண்காணிப் பாளர்களுக்கு டிஜிபி சுற்றறிக்கை அனுப்பியிருப்பதாக உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
மதுரையைச் சேர்ந்த 108 அவசர ஊர்தி ஓட்டுநர் இருளாண்டி, உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில், “எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி, கடந்த ஆகஸ்ட் 18ம் தேதி அன்று வேலூர் மாவட்டத்தில் பிரச்சாரம் செய்தபோது நோயாளி சந்திராவை அழைத்துக்கொண்டு கூட்டம் நடந்த இடத்தைக் கடந்தார். அப்போது பழனிசாமி, இனிமேல் நோயாளி இல்லாமல் ஆம்புலன்ஸ் வந்தால் அதன் ஓட்டுநர் அதே வாகனத்தில் நோயாளியாகச் செல்வார் என பகிரங்கமாக மிரட்டினார்.
அதைத் தொடர்ந்து, ஆகஸ்ட் 24ம் தேதி அன்று திருச்சி அதிமுக பிரச்சாரக் கூட்டத்தில் மயங்கி விழுந்த ஒருவரை அழைத்துச் செல்ல 108 ஆம்புலன்ஸ் வந்தபோது, அங்கிருந்த அதிமுகவினர், ஓட்டுநரைத் தாக்கி 108 ஆம்புலன்ஸை சேதப்படுத்தினர். இதுகுறித்து பாதிக்கப்பட்ட ஓட்டுநர்கள் புகார் அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, 108 ஆம்புலன்ஸ் மற்றும் அதன் ஊழியர்களுக்குப் போதிய பாதுகாப்பு வழங்க வேண்டும். குறைந்தபட்சம் தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் முடியும் வரையாவது போலீஸ் பாதுகாப்பு வழங்க உத்தரவிட வேண்டும்” என கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் அனிதா சுமந்த், குமரப்பன் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு தரப்பில், டிஜிபியின் வழிகாட்டுதல்கள் குறித்த அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில், ”அதிக போக்குவரத்து மிகுந்த பிரதான சாலைகளில் ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்கள், பொதுக்கூட்டங்களுக்கு அனுமதி வழங்கக்கூடாது. தவிர்க்க முடியாத பட்சத்தில், அனுமதிக்கும்போது போதுமான முன்னெச்சரிக்கை மேற்கொள்ள வேண்டும்.
சாலை ஓரங்களில் அல்லது பொது சந்திப்புகளுக்கு அருகில் கூட்டம் நடத்தும்போது போதிய பாதுகாப்பு மற்றும் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தவும், பொதுமக்களின் சிரமத்தைத் தவிர்க்கவும் போதுமான காவலர்களை பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்த வேண்டும். 108 ஆம்புலன்ஸ், தீயணைப்பு, மீட்பு வாகனங்கள் மற்றும் காவல் மீட்பு வாகனங்கள் உட்பட அனைத்து அவசர கால வாகனங்களும் தடையின்றிச் செல்ல முடியும் என்பதை முன்கூட்டியே உறுதிப்படுத்த வேண்டும். அவசர கால வாகனங்கள் செல்வதற்கான பாதையை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.
பெரிய அளவில் பொதுக்கூட்டம், ஆர்ப்பாட்டம், போராட்டம் நடைபெறுகிறது என்றால் அருகில் இருக்கக் கூடிய மருத்துவமனைகள், தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினருக்கு முன்கூட்டியே தகவல் தெரிவிக்க வேண்டும்” எனக் கூறப்பட்டிருந்தது. மேலும், இந்த வழிகாட்டுதலை கண்டிப்பாகப் பின்பற்ற வேண்டும் என காவல்துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என அரசு வழக்கறிஞர் தெரிவித்தார். இதைப் பதிவு செய்துகொண்ட நீதிபதிகள் விசாரணையை செப்.15-க்கு தள்ளிவைத்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT