Published : 12 Sep 2025 07:56 PM
Last Updated : 12 Sep 2025 07:56 PM
மதுரை: தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மற்றும் தவெக நிர்வாகிகள் மீது திருச்சி ஏர்போர்ட் போலீஸார் பதிவு செய்துள்ள வழக்கின் விசாரணைக்கு உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் திருச்சியில் நாளை முதல் அரசியல் சுற்றுப் பயணத்தை தொடங்கவுள்ளார். இந்த சுற்றுப் பயணத்துக்கு காவல் துறை அனுமதி பெறுவதற்காக தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் செப்.6-ம் தேதி திருச்சி வந்தார். பின்னர் திருச்சி - புதுக்கோட்டை சாலையில் ஏர்போர்ட் விநாயகர் கோயிலில் காவல் துறை அனுமதி கோரும் கடிதத்தை வைத்து வழிபட்டார். அப்போது அங்கு ஏராளமான தவெக தொண்டர்கள் திரண்டனர்.
மேலும், திருச்சி - புதுக்கோட்டை சாலையில் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் அவர்கள் கொண்டு வந்த கார்களையும் நிறுத்தியுள்ளனர். இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படவே கார்களை எடுக்குமாறு போலீஸார் கூறியும் தவெகவினர் கேட்கவில்லை என கூறப்படுகிறது. மேலும், போலீஸாருடன் தவெகவினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதையடுத்து சட்டவிரோதமாக கூடியது, போலீஸாரை பணி செய்யவிடாமல் தடுத்தது, போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தியது உள்ளிட்ட பிரிவுகளில் தவெக பொதுச் செயலாளர் புஸ்சி ஆனந்த், திருச்சி தெற்கு மாவட்ட செயலாளர் உள்ளிட்ட பல நிர்வாகிகள் மீது ஏர்போர்ட் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.
இதனிடையே, இவ்வழக்கை ரத்து செய்யக் கோரி புஸ்ஸி ஆனந்த் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனுத் தாக்கல் செய்தார். அதில், போலீஸார் உள்நோக்கத்துடன் அரசியல் காரணத்துக்காக வழக்குப் பதிவு செய்துள்ளனர். இதனால் வழக்கை ரத்து செய்ய வேண்டும். அதுவரை விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும் எனக் கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதி சுந்தர் மோகன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, புஸ்ஸி ஆனந்த் மற்றும் தவெக நிர்வாகிகள் மீது ஏர்போர்ட் போலீஸார் பதிவு செய்துள்ள வழக்கை விசாரிக்க இடைக்கால தடை விதித்து உத்தரவிட்ட நீதிபதி, புஸ்ஸி ஆனந்த் மனு தொடர்பாக ஏர்போர்ட் போலீஸார் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணை தள்ளிவைத்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT