Published : 12 Sep 2025 05:55 PM
Last Updated : 12 Sep 2025 05:55 PM
திண்டுக்கல்: மருத்துவ வளர்ச்சிக்காக பொதுமக்கள் தங்கள் உடல்களை தானம் செய்ய முன்வர வேண்டும் என திண்டுக்கல் எம்.பி சச்சிதானந்தம் கூறியுள்ளார். மேலும், ஆர்.சச்சிதானந்தமும், தனது மனைவி கவிதாவுடன் உடல் உறுப்பு தானம் செய்ய உறுதிமொழி பத்திரம் வழங்கினார்.
திண்டுக்கல் மாவட்ட மா.கம்யூ., கட்சி சார்பில் அக்கட்சியின் தேசியத் தலைவராக இருந்த சீதாராம் யெச்சூரி நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. அங்கு அவரது திருஉருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. இந்நிகழ்வில் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து திண்டுக்கல் அருகே அடியனூத்தில் உள்ள திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரியில் உடல் தானம், கண் தானம் வழங்க உறுதிமொழி பத்திரம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு மா.கம்யூ., மாவட்ட செயலாளர் பிரபாகரன் தலைமை வகித்தார். நகரச் செயலாளர் அரபு முகமது வரவேற்றார். ஒன்றிய செயலாளர் சரத்குமார் முன்னிலை வகித்தார்.
இந்நிகழ்ச்சியில் மா.கம்யூ., கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் என மொத்தம் 75 பேர் உடல் மற்றும் கண் தானம் வழங்க உறுதிமொழி பத்திரங்களை அரசு மருத்துவக் கல்லூரி டாக்டர்களிடம் வழங்கினர். உறுதிமொழி பத்திரம் வழங்கிய அனைவருக்கும் திண்டுக்கல் எம்.பி., ஆர்.சச்சிதானந்தம் கேடயங்களை வழங்கி பாராட்டினார்.
பின்னர் நிகழ்ச்சியில் பேசிய திண்டுக்கல் எம்.பி சச்சிதானந்தம் கூறியதாவது: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் அகில இந்திய பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி, தனது உடலை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அளித்திருந்தார். இதை பின்பற்றி இந்த நிகழ்ச்சி நடைபெறுகிறது. உடல்களை தானம் செய்யும் போது பல்வேறு சந்தேகங்கள் நமக்கு உருவாகிறது.
குறிப்பாக சில சமுதாயத்தில் உடல்களை புதைப்பார்கள். சில சமுதாயங்களில் உடல்களை எரியூட்டுவார்கள். ஆனால் மருத்துவ வளர்ச்சிக்காக நமது உடல்கள் தானமாக வழங்க அனைவருக்கும் விழிப்புணர்வு வேண்டும். வரும் காலங்களில் இந்திய மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் இது போன்ற செயல்களில் அதிக அளவில் ஈடுபடுவார்கள். இதேபோன்று மருத்துவ வளர்ச்சிக்காக பொதுமக்கள் தங்கள் உடல்களை தானம் செய்ய முன்வர வேண்டும்” என்று எம்.பி சச்சிதானந்தம் கூறினார்.
இந்நிகழ்ச்சியில் திண்டுக்கல் எம்.பி., ஆர்.சச்சிதானந்தம், தனது மனைவி கவிதாவுடன் உடல் உறுப்பு தானம் செய்ய உறுதிமொழி பத்திரம் வழங்கினார். இதேபோல் பலர் தம்பதிகளாக வந்து உடல் உறுப்பு தான உறுதிமொழி பத்திரங்களை வழங்கினர்.
இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் வீரமணி, துணை முதல்வர் கீதா ராணி, உடற்கூறாய்வியல் துறை மருத்துவர் ஜெயமணி ஆகியோர் உடல் தான உறுதிமொழி பத்திரங்களை பெற்றனர். உடல் மற்றும் கண் தானம் செய்பவர்களுக்கான சந்தேகங்கள் மற்றும் கேள்விகளுக்கு விளக்கம் அளித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT