Last Updated : 12 Sep, 2025 04:06 PM

3  

Published : 12 Sep 2025 04:06 PM
Last Updated : 12 Sep 2025 04:06 PM

“தமிழக அரசியலில் இதுவரை இல்லாத நிபந்தனைகளை எதிர்கொள்கிறது தவெக” - விஜய் ஆவேசம்

சென்னை: “தமிழக அரசியலிலேயே இதுவரை இல்லாத வகையில் எந்த அரசியல் தலைவருக்கும் செய்யாத வகையில், மக்கள் சந்திப்பு சார்ந்த பாதுகாப்பு நிபந்தனைகளை தவெக மீது மட்டும் காவல் துறை விதித்துள்ளது” என்று தவெக தலைவர் விஜய் கூறியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பொய்யான வாக்குறுதிகளைத் தந்து மக்களை ஏமாற்றி வரும் வெற்று விளம்பர மாடல் திமுக அரசின் மீதான நம்பிக்கையை மக்கள் முற்றிலும் இழந்துவிட்டனர். தங்களுக்கென்றே உண்மையான தோழமை மற்றும் பாரபட்சமற்றத் தன்மையுடன் கூடிய ஓர் அரசு அமைய வேண்டும் என்று எதிர்பார்க்கின்றனர்.

மக்களின் மனமறிந்து அரசியல் களம் காணும் தமிழக வெற்றிக் கழகம், மக்களுக்காக 'மனசாட்சி உள்ள மக்களாட்சியை அமைக்கும் உன்னத லட்சிய நோக்குடன் களமாடி வருகிறது. மக்களுடன் மக்களாக இணைந்து நிற்கும் "வாகை சூடும் வரலாறு திரும்புகிறது: உங்க விஜய் நா வரேன்" என்கிற நமது பயணம்தான் தமிழகம் முழுவதுமான மக்கள் சந்திப்புப் பயணம்.

நாளை (சனிக்கிழமை - செப்.13) காலை 10.35 மணிக்கு திருச்சி காந்தி மார்க்கெட் காவல் சரகம் மரக்கடை எம்.ஜி.ஆர். சிலை அருகே தொடங்கி அடுத்தடுத்து, நமது மதுரை மாநாட்டில் சொன்னதுபோலவே என் குடும்ப உறவுகளாகிய உங்களைச் சந்திக்க, உங்களுக்காகவே குரல் கொடுக்க உங்கள் விஜய், நம் கொள்கைத் தலைவர்கள் தந்தை பெரியார், பெருந்தலைவர் காமராஜர், அண்ணல் அம்பேத்கர், வீரமங்கை வேலுநாச்சியார். மக்கள் சேவகர் அஞ்சலை அம்மாள் ஆகியோரின் வழியில், மக்களிடம் செல்" என்ற பேரறிஞர் பெருந்தகை அண்ணாவின் ஆணையை மானசீகமாக ஏற்று, ஒவ்வொரு மாவட்டத்துக்கும் வருகிறேன்.

ஓர் அரசியல் கட்சியின் தலைவராக, நாம் ஜனநாயக முறையில் மக்களைச் சந்திக்க விழைகிறோம். இந்நிலையில், தமிழ்நாட்டு அரசியலிலேயே இதுவரை இல்லாத வகையில் எந்த அரசியல் தலைவருக்கும் செய்யாத வகையில், மக்கள் சந்திப்பு சார்ந்த பாதுகாப்பு நிபந்தனைகளை தவெக மீது மட்டும் காவல் துறை விதித்துள்ளது. இப்படி பாதுகாப்பு சார்ந்த தமது பொறுப்பைத் தட்டிக கழிக்காமல், அரசியல் நிலைப்பாடுகளைக் கடந்து தார்மிகக் கடமையோடு நமது கழகத் தோழர்களுக்கும் பொதுமக்களுக்கும் பாதுகாப்பு வழங்குவதை இந்த அரசும் காவல் துறையை வழிநடத்தும் தமிழ்நாட்டு முதலமைச்சரும் உறுதி செய்ய வேண்டும்.

தவெக தொண்டர்களாகிய நீங்களும் நமது பொது மக்கள் சந்திப்புக்கு ஏதுவாக, அந்தந்த மாவட்டங்களில் பங்கு பெற்றும் சமூக வலைத்தளங்கள் மற்றும் தொலைக்காட்சி நேரலைகளில் கண்டும், ஏற்கெனவே பொதுமக்களுக்கு இடையூறின்றி மக்கள் சந்திப்புகளை நடத்த நாம் தேர்ந்தெடுத்துள்ள நாட்களில் அவர்களைச் சந்திக்க ஏதுவாகப் பாதுகாவலர்கள், தன்னார்வலர்கள் மற்றும் காவல் துறைக்கு உறுதுணையாகக் காவல் துறை அளித்துள்ள வழிமுறைகளைக் கடமை, கண்ணியம் மற்றும் ராணுவக் கட்டுப்பாட்டுடன் பின்பற்றி நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களான மாவட்டப் பொறுப்பாளர்களுக்கு உறுதுணையாக இருந்து உதவ வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

இறைவன் அருளால், இயற்கையின் துணையால் உங்கள் அனைவரின் பேரன்பால் நம்முடைய இந்த மக்கள் சந்திப்புப் பயணம் மகத்தான வெற்றி பெறும் என்கிற அசைக்கமுடியாத நம்பிக்கையுடன் "உங்க விஜய், நான் வரேன்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

காவல் துறையின் 23 நிபந்தனைகள்: ‘தவெக தலைவர் விஜய் 30 நிமிடங்கள் மட்டுமே பேச வேண்டும்; சென்னை புறவழிச்சாலை, டிவிஎஸ் டோல்கேட், தலைமை தபால் நிலையம், பாலக்கரை, காந்தி மார்க்கெட் வழியாக மரக்கடை வரும் விஜய், மீண்டும் காந்தி மார்க்கெட், அரியமங்கலம் பால்பண்ணை வழியாக சென்னை புறவழிச்சாலைக்கு சென்றுவிட வேண்டும்; ‘ரோடு ஷோ’ நடத்த அனுமதியில்லை; விஜய்யின் வாகனத்துடன் மொத்தம் 5 வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்படும்.

மருத்துவ வசதிகள், ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனங்கள் அனைத்தும் அக்கட்சியினரே ஏற்பாடு செய்து கொள்ள வேண்டும்; குழந்தைகள், கர்ப்பிணிகள், மாற்றுத் திறனாளிகளை அழைத்து வரக் கூடாது; கட்சித் தொண்டர்கள் மிக நீளமான குச்சிகளில் கொடியை கட்டி எடுத்து வரக் கூடாது; உயரமான கட்டிடங்கள், மரங்களில் ஏறி நிற்க தொண்டர்களுக்கு அனுமதி இல்லை.

விஜய் வரும்போது பட்டாசு வெடிக்கக் கூடாது; மேளதாளங்கள் இசைக்கக் கூடாது; அனுமதியின்றி பிளக்ஸ் பேனர்கள் வைக்கக் கூடாது; பார்க்கிங் வசதிகளை அவர்களே ஏற்பாடு செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட 23 நிபந்தனைகளை திருச்சி மாநகர காவல் துறையினர் விதித்துள்ளனர். இதற்கு தவெக நிர்வாகிகள் ஒப்புக்கொண்டு கையெழுத்திட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x