Published : 12 Sep 2025 03:01 PM
Last Updated : 12 Sep 2025 03:01 PM
மதுரை: பரமக்குடி இமானுவேல் சேகரன் நினைவிடத்துக்கு தமிழகத்தில் பல்வேறு பகுதிகளிலிருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டதில் ரூ.5 கோடி வரை முறைகேடு நடைபெற்றுள்ளதாக புதிய தமிழகம் கட்சியின் நிறுவனத் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி குற்றஞ்சாட்டியுள்ளார்.
மதுரையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது: பரமக்குடியில் உள்ள தியாகி இமானுவேல் சேகரன் நினைவிடத்துக்கு மரியாதை செலுத்தச் சென்ற பொது மக்களை வாடகை அடிப்படையில் அரசு பேருந்துகளில் அழைத்துச் சென்றதில் ரூ.5 கோடி அளவில் மிகப்பெரிய ஊழல் நடைபெற்றுள்ளது. இதுபோன்ற நாட்களில் இயக்கப்படும் அரசு பேருந்துகளுக்கு கடந்த ஆண்டு வரை 1 கி.மீ-க்கு ரூ.40 ரூபாய் மட்டுமே கட்டணம் வசூலிக்கப்பட்டது.
இந்த ஆண்டு கட்டணம் உயர்த்தப்பட்டு அதில் மிகப்பெரிய அளவிற்கு முறைகேடு நடந்துள்ளது. முந்தைய ஆண்டுகளில் கிராமங்களில் இருந்து 200 கி.மீ. தூரத்திற்கு ரூ.12 ஆயிரம் வசூலிக்கப்பட்ட நிலையில், இந்த ஆண்டு ரூ.26 ஆயிரம் முதல் ரூ.30 ஆயிரம் வரை கட்டணம் உயர்த்தியுள்ளனர். இதற்கு ரசீதும் வழங்கவில்லை. கடந்தாண்டு சிறப்பு பேருந்துகளில் ஓட்டுநர், நடத்துநர் அனுமதிக்கப்பட்ட நிலையில், இந்த ஆண்டு நடத்துனர் இல்லை.
வாடகை பேருந்துகளுக்கான பயண சீட்டுகள் கட்டுகளை கூட எடுத்துச் சென்றுவிட்டனர். இதனால் இமானுவேல் சேகரன் நினைவிடத்துக்கு தமிழகம் முழுவதும் எத்தனை அரசு பேருந்துகள் இயக்கப்பட்டன?. பேருந்து கட்டணங்களுக்கு ஏன் ரசீது கொடுக்கவில்லை? என்பதற்கு அரசு போக்குவரத்து துறை விளக்கம் அளிக்க வேண்டும். இல்லையெனில் அரசு போக்குவரத்து கழக அதிகாரிகளுக்கு எதிராக நீதிமன்றங்களில் வழக்கு தொடரப்படும்.
மேலும், பரமக்குடிக்கு இயக்கப்பட்ட சிறப்பு பேருந்துகள் எங்கும் நிறுத்தப்படவில்லை. பேருந்தில் பயணம் செய்தவர்கள் சிறுநீர் கழிக்கவோ, உணவு, தேநீர் அருந்தவோ அனுமதிக்கப்படவில்லை. பரமக்குடி செல்லும் வழித்தடத்தில் கடைகள் அடைக்கப்பட்டன. மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட இடங்களில் டீக் கடைகளை கூட திறக்க போலீஸார் அனுமதிக்கவில்லை. இதுபோன்ற விழாக்கள் நடக்கும் போது தமிழக அரசு மனித நேயத்துடன் நடந்து கொள்ள வேண்டும்.
ஜன.7-ல் மாநாடு: புதிய தமிழகம் கட்சியின் மாநில மாநாடு மதுரையில் ஜனவரி 7-ல் நடைபெறுகிறது. தமிழகத்தில் நூறு நாள் வேலை திட்டத்தில் முறைகேடு நடைபெற்று வருகிறது. கோயில் நகைகள் உருக்கப்பட்டு தங்க கட்டிகளாக மாற்றப்படும் என அநிலையத் துறை அமைச்சர் தெரிவித்தார். அதன்படி உருக்கும் தங்கத்தில் பதிக்கப்பட்டிருக்கும் விலை உயர்ந்த வைரம், முத்து, பவள கற்கள் என்ன செய்யப்பட்டது எனத் தெரியவில்லை. இது குறித்து அறநிலையத் துறை வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.
இருக்கன்குடி மாரியம்மன் கோயிலில் ரூ.130 கோடி மதிப்பில் நடைபெற்று வரும் கட்டுமானத்தில் ஊழல் நடைபெற்றுள்ளது. இந்த கோயிலில் ஒரு குறிப்பிட்ட சமூகத்தினர் மட்டுமே அறங்காவலராக உள்ளனர். இக்கோயிலில் முடிக் காணிக்கை செலுத்தியதில் மட்டும் ரூ.7 கோடி வரை முறைகேடு நடந்துள்ளது. தேர்தல் கூட்டணி தொடர்பாக கள நிலவரங்களுக்கு ஏற்ப முடிவெடுப்போம்.
தமிழகத்தில் திராவிடம் நிலைத்து நிற்கும் என்பதற்கு எந்த உத்திரவாதமும் இல்லை. நாங்கள் திறந்த மனதுடன் இருக்கிறோம். அடுத்த தேர்தலில் தமிழகத்தில் கூட்டணி ஆட்சி தான் அமைய வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறோம். இதை தவெக தலைவர் விஜய் முன்னெடுத்தால் அவருடன் கூட்டணி அமைப்பது குறித்து மாநாட்டுக்கு பிறகு முடிவெடுக்கப்படும்.
தமிழகத்தில் எந்த அரசு நிறுவனங்களுக்கும், கட்டிடங்களுக்கும் ஜாதி தலைவர்களின் பெயர்களை வைக்கக்கூடாது என 1998-ல் நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது. அந்த முடிவுபடி அரசு நிறுவனங்கள், அரசு கட்டிடங்களுக்கு பொதுவான பெயரைத் தான் வைக்க வேண்டும். அப்படியிருக்கும் போது மதுரை விமான நிலையத்திற்கு பெயர் சூட்டும் விவகாரத்தை மீண்டும் எழுப்புவது அவசியமற்றது. மேலும் 1998ல் தமிழகத்தில் உள்ள சாதி தலைவர்களின் சிலைகளை அகற்றி ஒரே இடத்தில் வைக்க வேண்டும் என்றும் முடிவெடுக்கப்பட்டது.
அதையும் செயல்படுத்த வேண்டும். விமான நிலையங்களுக்கு பெயர் சூட்டும் விவகாரம் மீண்டும் சமூகத்தை கீழ் நோக்கி அழைத்துச் செல்லும், கலவரங்களுக்கு வாய்ப்பு ஏற்படுத்தி கொடுக்கும். இதுவும் பிளவுபடுத்தும் வாக்கு அரசியல் தான். தமிழகத்தில் வேலையில்லா திண்டாட்டம், கிராம மக்கள் பசி, பட்டினியுடன் உள்ளனர். இது குறித்து விவாதிக்க வேண்டும்” என்று டாக்டர் கிருஷ்ணசாமி கூறினார்.
இந்த செய்தியாளர் சந்திப்பில், புதிய தமிழகம் கட்சியில் மாநில இளைஞரணி தலைவர் டாக்டர் ஷியாம் கிருஷ்ணசாமி மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT