Published : 12 Sep 2025 08:57 AM
Last Updated : 12 Sep 2025 08:57 AM
மக்களவைத் தேர்தலுக்கு முன்னதாக, ஜெயலலிதா உள்ளிட்ட அதிமுக முன்னோடிகளை எசகுபிசகாக விமர்சனம் செய்த அப்போதைய பாஜக தலைவர் அண்ணாமலைக்கு எதிராக வெகுண்டெழுந்தது அதிமுக. அதையே சாக்காகச் சொல்லி கூட்டணியை விட்டு விலகி சூடும்பட்டது அதிமுக. அதேபோல் இப்போது பாஜக தலைவராக இருக்கும் நயினார் நாகேந்திரனுக்கு எதிராக குற்றச்சாட்டுகளை முன்வைத்து என்டிஏ கூட்டணியை விட்டு விலகி இருக்கிறார் டி.டி.வி.தினகரன்.
“அண்ணாமலை தான் என்னை என்டிஏ கூட்டணியில் சேர்த்தார். அவர் எங்களுக்கு உரிய மரியாதை கொடுத்தார். ஆனால், அவருக்கு இருக்கும் பக்குவம் நயினார் நாகேந்திரனுக்கு இல்லை. இபிஎஸ் மட்டும் இருந்தால் போதும் என நினைக்கும் நயினாருக்கு தமிழகத்தின் யதார்த்த நிலை தெரியவில்லை. நாங்கள் என்டிஏ கூட்டணியை விட்டு விலகக் காரணம் நயினார் நாகேந்திரன் தான். அண்ணாமலை தலைவராக இருந்திருந்தால் இது நடந்திருக்காது” என்று பொட்டிலடித்தாற்போல் சொல்லிவிட்டார் தினகரன்.
மக்களவைத் தேர்தலில் அண்ணாமலையால் கூட்டணியை முறித்துக் கொண்ட அதிமுக, அண்ணாமலையை நீக்க பாஜக தலைமை ஒத்துக் கொண்டதை அடுத்து மீண்டும் பாஜக கூட்டணிக்கு தலையாட்டியது. அதிமுக-வை வைத்துக் கொண்டு தமிழகத்தில் கூட்டணி ஆட்சியை அமைத்துவிட வேண்டும் என்பதில் குறியாக இருக்கும் பாஜக தலைமை, இன்னொரு முறை அதிமுக-வை கைநழுவ விட தயாராய் இல்லை. அதனால் தான், கூட்டணியை விட்டு விலகுகிறேன் என தர்மயுத்த நாயகன் ஓபிஎஸ் சொன்னபோது அவரை நிறுத்திவைப்பதற்கான எந்த முயற்சியையும் அதிகாரபூர்வமாக எடுக்காமல் மவுனம் காத்தது.
அதேசமயம், தமிழகம் வந்த மோடியை சந்திக்க ஓபிஎஸ் எடுத்த முயற்சிகளை நயினார் உதாசீனப்படுத்திய விவகாரமானது தினகரனை ரொம்பவே யோசிக்க வைத்துவிட்டது. அப்போதே இதுகுறித்து ரியாக்ட் செய்திருந்த அவர், “பழனிசாமிக்கு பயந்து கொண்டு நாளைக்கே நம்மையும் பாஜக-வினர் இப்படி உதாசீனம் செய்யமாட்டார்கள் என்பது என்ன நிச்சயம்?” என்று தனது ஆதரவாளர்கள் மத்தியில் ஆதங்கப்பட்டிருக்கிறார்.
தினகரன் யூகித்தபடியே ஜி.கே.மூப்பனார் நினைவேந்தல் நிகழ்ச்சியில் அந்த கசப்பான அனுபவமும் அவருக்கு ஏற்பட்டுவிட்டது. இந்த நிகழ்ச்சியில் தினகரன் உள்ளிட்ட என்டிஏ கூட்டணிக் கட்சி தலைவர்களை ஒரே மேடையில் உட்காரவைத்துவிட வேண்டும் என பிரயாசைப்பட்ட ஜி.கே.வாசன், தினகரனையும் இந்த நிகழ்வுக்கு அழைத்திருந்ததாகச் சொல்கிறார்கள்.
ஆனால், தினகரன் வந்தால் தன்னால் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முடியாது என இபிஎஸ் பிரேக் போட்டிருக்கிறார். இதனால் தர்மசங்கடப்பட்டுப் போன வாசன், விஷயத்தை தினகரனுக்கு பக்குவ மாக எடுத்துச் சொல்லி இருக்கிறார். இதனால், நிகழ்வில் தினகரன் கலந்துகொள்ளவில்லை. அதேசமயம், இந்த நிகழ்வில் அண்ணாமலையையும் இபிஎஸ்ஸையும் அடுத்தடுத்த இருக்கையில் அமரவைத்து இருவருக்கும் இடையிலான இறுக்கத்தைக் குறைத்தார் வாசன்
இந்த நிலையில் தான், “நயினார் நாகேந்திரனுக்கு கூட்டணிக் கட்சிகளை அரவணைக்கத் தெரியவில்லை” என்று குற்றம்சாட்டி இருக்கும் தினகரன், “பழனிசாமி இல்லாமல் வெறொருவரை முதல்வர் வேட்பாளராக அறிவித்தால் மட்டுமே என்டிஏ கூட்டணியை நாங்கள் ஆதரிப்போம்” என அடுத்த குண்டையும் எடுத்து வீசி இருக்கிறார்.
இதுபற்றி அதிமுக தரப்பிலிருந்து நம்மிடம் பேசியவர்கள், “ஓபிஎஸ், டிடிவி இருவரும் கூட்டணிக்குள் இருந்தால் தான் தென் மாவட்டங்களில் என்டிஏ கூட்டணிக்கு பலம் என்று ஒரு மாயத் தோற்றத்தை உருவாக்கியதே அண்ணாமலை தான். ஆனால், நயினார் நாகேந்திரனை மாநில தலைவராக்குவதன் மூலம் அதை ஈடு செய்துகொள்ள முடியும் என நினைத்தது பாஜக தலைமை. அதை பொய்யாக்க சிலர் இப்போது மெனக்கிடுகிறார்கள். அவர்களின் சதி ஆலோசனைப்படியே ஓபிஎஸ்ஸும், தினகரனும் கூட்டணியை விட்டு விலகி இருக்கிறார்கள். இவர்கள் இருவருமே நயினார் மீது பழிபோட்டிருப்பதைப் பார்த்தாலே உள் விவகாரம் என்னவாக இருக்கும் என்று யாருக்கும் புரியும்” என்றனர்.
பாஜக தரப்பில் பேசியவர்களோ, “அதிமுக உடன் கூட்டணி மீண்டும் உறுதியான போதே பழனிசாமி தமைமையில் என்டிஏ கூட்டணி ஆட்சி அமைக்கும் என அமித் ஷா தெள்ளத் தெளிவாக சொல்லிவிட்டார். அதைக் கேட்டுக் கொண்டு அப்போது சும்மா இருந்த தினகரன், இப்போது மூப்பனார் நினைவேந்தல் நிகழ்ச்சிக்குப் பிறகு, ‘பழனிசாமியை முதல்வர் வேட்பாளராக ஏற்கமாட்டோம்’ என திடீர் பல்டி அடித்திருக்கிறார். அந்த நிகழ்ச்சிக்கு தினகரன் வருவதாக இருந்தால் நான் வரமுடியாது என பழனிசாமி சொல்லி இருக்கிறார். அதில் தான் தினகரனுக்கு ஈகோ.
அதுமட்டுமல்லாது, தவெக தரப்பிலும் தினகரனும் ஓபிஎஸ்ஸும் பேச்சுவார்த்தை நடத்த ஆரம்பித்துவிட்டார்கள். இந்தக் கணக்கெல்லாம் இருப்பதால் தான் ‘பழனிசாமியை முதல்வர் வேட்பாளராக ஏற்கமாட்டோம்’ என போகாத ஊருக்கு வழி தேடுகிறார் தினகரன். ஆனால் ஒன்று... முறுக்கிக் கொண்டு நின்ற பழனிசாமியையே வழிக்குக் கொண்டு வந்தவர் அமிஷ் ஷா. ஒருவேளை, தினகரனும் ஓபிஎஸ்ஸும் கட்டாயம் இந்தக் கூட்டணிக்கு தேவை என கருதினால் அவர்களையும் வளைத்துக் கொண்டு வரும் ‘வித்தையும்’ அமித் ஷாவுக்கு தெரியும்” என்று சிரிக்கிறார்கள்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT