Published : 12 Sep 2025 06:59 AM
Last Updated : 12 Sep 2025 06:59 AM
மதுரை: அதிமுக-பாஜக கூட்டணியில் பிளவு இல்லை என்று பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கூறினார்.
மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது: தமிழகத்தில் அதிமுக வலுவாக உள்ளது. பழனிசாமி செல்லும் இடமெல்லாம் மக்கள் ஆரவாரத்துடன் பங்கேற்று, அவருக்கு ஆதரவு கொடுத்து வருகின்றனர். இதைப் பார்த்து திமுகவினர் பொறாமையில் உள்ளனர். அதிமுகவில் பிளவு வர வேண்டும் என்று அவர்கள் கருதுகின்றனர். அதனால், அதிமுகவில் பிளவு ஏற்பட்டுள்ளதாக பொய் பிரச்சாரம் செய்கின்றனர்.
அதிமுகவை உடைக்க வேண்டிய அவசியம் பாஜகவுக்கு இல்லை. பழனிசாமியை நாங்கள் கூட்டணி தலைவராக ஏற்றுக்கொண்டுள்ளோம். மத்திய அமைச்சர் அமித்ஷா- செங்கோட்டையன் சந்திப்பு குறித்து எனக்கு முழுமையாக தெரியாது. அமித்ஷாவை செங்கோட்டையன் சந்தித்ததால், எங்கள் கூட்டணியில் எந்த பிரச்சினையும் இல்லை.
பாஜக அவசர சிகிச்சைப் பிரிவில் இருப்பதாக உதயநிதி கூறியுள்ளார். யார் ஐசியுவுக்கு செல்கிறார்கள் என்பது 2026-ல் தெரியும். பழனிசாமி குறித்து டிடிவி. தினகரன் கூறியது அவரது சொந்தக் கருத்து. ஓ.பன்னீர்செல்வத்தை நான் எந்த நேரத்திலும் அழைத்துப் பேசுவேன். எனக்கு யாருடனும் கருத்து வேறுபாடு கிடையாது.
டிடிவி.தினகரன் மீது எனக்கு வெறுப்பு இல்லை. தேவைப்பட்டால் அவருடனும் பேசுவேன். பள்ளிக்கு விடுமுறைவிட்டு ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம் நடத்தியது கண்டிக்கத்தக்கது. திமுக வலுவாக இருப்பதாக அண்ணாமலை கூறவில்லை. திமுக வலுவாக இருக்கிறது என்று உதயநிதி போன்றவர்கள் சொல்லி வருவதாகத்தான் அவர் தெரிவித்துள்ளார். தவெக தலைவர் விஜய் சனிக்கிழமைகளில் பிரச்சாரம் செய்யப் போவதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.
சனிக்கிழமையின் மகிமை எல்லோருக்கும் தெரியும். பிரதமர் மோடி, அமித்ஷா, பாஜக தேசிய தலைவர் நட்டா ஆகியோர் என் மீது அளவற்ற அன்பும், பாசமும் வைத்துள்ளனர். நான் பாஜக தலைவர் பதவியிலிருந்து விலக வேண்டிய அவசியம் இல்லை. அதிமுக, பாஜக கூட்டணியில் பிளவு இல்லை. கூட்டணித் தலைவர் பழனிசாமி என்ன சொல்கிறாரோ அதுதான் நடக்கும். எனவே, பிளவு என்ற பேச்சுக்கே இடமில்லை. இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT