Published : 11 Sep 2025 08:08 PM
Last Updated : 11 Sep 2025 08:08 PM
திருநெல்வேலி: இந்திய தேர்தல் ஆணையம் வாக்காளர்களை நீக்கும் ஆணையமாக செயல்பட்டு வருவதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் பிருந்தா காரத் தெரிவித்தார். மேலும், பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் அமைப்புகள் தமிழகத்தில் கால்பதிக்க முயல்கின்றன என்று அவர் கூறினார்.
திருநெல்வேலியில் பாரதியாரின் 104 -வது நினைவு தினத்தை முன்னிட்டு அவரது சிலைக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மூத்த தலைவர் பிருந்தா காரத், மாநில செயலர் சண்முகம் உள்ளிட்ட நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர் செய்தியாளர்களிடம் பிருந்தா காரத் கூறியது: “பாரதியார் பன்முகத்தன்மை, ஜனநாயகம், மதச்சார்பின்மை ஆகிய விழுமியங்களை பாதுகாக்க போராடியவர். அவரது கருத்துகளை முன்னெடுத்துச்செல்ல அனைவரும் உறுதி ஏற்க வேண்டும்.
ஆனால், துரதிருஷ்டவசமாக இந்தியாவை ஆளும் சக்திகள் பன்முகத்தன்மைக்கும், ஒற்றுமைக்கும் எதிராக செயல்படுகின்றன. தற்போதைய சூழலில் பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் அமைப்புகள் தமிழகத்தில் கால்பதிக்க முயல்கின்றன. இந்திய அரசியல் அமைப்பு சட்டம், நாடாளுமன்றத்தின் விதிமுறைகள், மதச்சார்பின்மை, ஜனநாயகம் ஆகியவற்றை அச்சுறுத்தும் வகையில் பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் செயல்படுகின்றன. இந்த சக்திகளை தமிழக மக்கள் நிச்சயம் வீழ்த்துவார்கள்.
சாதிய கொலைகளை தடுக்க தனிச் சட்டம் கொண்டு வர வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறோம். மக்களுடன் இருப்பதும், மக்களுக்காக போராடுவதும், பாஜக, ஆர்எஸ்எஸ் அமைப்புகளை தோற்கடிப்பதுமே எங்களின் வியூகம். இண்டியா கூட்டணி பலமாக உள்ளது. பிஹாரில் வாக்குப் பதிவு முறையை முற்றிலுமாக சீர்குலைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது. இது பிரிட்டிஷ் காலனித்துவ காலத்தை நினைவூட்டுகிறது.
பிஹாரில் தேர்தல் ஆணையம் மேற்கொண்ட நடவடிக்கைகளை உச்ச நீதிமன்றம் தலையிட்டு தடுத்துள்ளது. தேர்தல் ஆணையம் வாக்குகளை உறுதி செய்வதற்கு பதிலாக வாக்காளர்களை நீக்கும் ஆணையமாக செயல்பட்டு வருகிறது. இதனை எதிர்த்து இண்டியா கூட்டணி ஒன்றாக போராடி வருகிறது” என்று தெரிவித்தார்.
இந்தியாவில் இடதுசாரிகளின் வளர்ச்சி குறைந்து வருகிறதா என எழுப்பப்பட்ட கேள்விக்கு, ‘நீங்கள் நாடாளுமன்றத்தில் உள்ள எண்ணிக்கை அடிப்படையில் கேட்கிறீர்கள், ஆனால் இடதுசாரிகளின் கருத்து வளர்ந்து வருகிறது. முன்பு இருந்ததைவிட தற்போது பலமாக வளர்ந்து வருகிறது” என்று பிருந்தா காரத் பதிலளித்தார்.
இடதுசாரிகளின் தொழிற்சங்கங்கள் பல்வேறு கோரிக்கைகளுக்காக திமுகவை கண்டித்து போராட்டம் நடத்தி வருவது குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு, ‘அது யாருக்கும் எதிரான போராட்டம் அல்ல, ஜனநாயக உரிமைகளுக்கான போராட்டம். தொழிலாளர் வர்க்கத்தின் ஜனநாயக உரிமைகளுக்காக போராடுவது கம்யூனிஸ்ட் கட்சியின் அடிப்படை இயல்வு’ என்று தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT