Published : 11 Sep 2025 06:59 PM
Last Updated : 11 Sep 2025 06:59 PM
அன்புமணி எதிர்பார்க்காத ஒன்று இன்று நடந்துவிட்டது. பாமகவின் எதிர்காலமாக பார்க்கப்பட்ட அன்புமணியை, அவரின் தந்தை ராமதாஸே கட்சியிலிருந்து நீக்கியிருக்கிறார். இனி பாட்டாளிகளின் ஆதரவு யாருக்கு அதிகம் என்ற கேள்வி எழுகிறது.
பாட்டாளி மக்கள் கட்சி தமிழகத்தில், குறிப்பாக வட தமிழகத்தில் ஏற்படுத்திய தாக்கங்கள் அதிகம். 1991 தேர்தல் முதல் எந்தக் கூட்டணியில் இருந்தாலும், தனித்து நின்றாலும் பாமகவின் டிராக் ரெக்கார்டு மிக மிக முக்கியமானது. மாறி, மாறி கூட்டணி வைக்கிறார் என்ற விமர்சனங்கள் இருந்தாலும், அதிகளவில் எம்எல்ஏக்களை ஒவ்வொரு முறையும் சட்டப்பேரவைக்கு அனுப்பினார் ராமதாஸ். பாமகவினர் நாடாளுமன்றத்திலும், மத்திய அமைச்சரவைகளிலும் அங்கம் வகிக்கும் வகையில் காய்களை நகர்த்தியவர் ராமதாஸ். வன்னியர்களுக்கான இட ஒதுக்கீடு உள்ளிட்ட பல்வேறு உரிமைகளுக்கான போராட்ட களத்திலும் முன்னணியில் நின்றவர் ராமதாஸ்.
தந்தை, மகன் போட்டியில் தவிக்கும் பாட்டாளிகள்:
2001 சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக கூட்டணியில் இருந்த பாமக 20 இடங்களில் வென்றது. ஆனாலும், 2004 மக்களவைத் தேர்தலில் தடாலடியாக திமுக கூட்டணிக்குச் சென்றார் ராமதாஸ். 5 தொகுதிகளிலும் போட்டியிட்டு வென்றது பாமக. அக்கட்சியின் பொற்காலம் கிட்டத்திட்ட அதுதான். அப்போது 20 எம்எல்ஏக்கள், 5 எம்.பிக்கள் பாமக வசம் இருந்தது. அந்த நேரத்தில்தான் அன்புமணியை கட்சிக்குள் கொண்டுவந்தார் ராமதாஸ். அன்புமணி வந்த கையோடு பவர்ஃபுல்லான மத்திய சுகாதாரத் துறை அமைச்சராகவும் ஆக்கி அழகு பார்த்தார். அதன்பின்னர் கட்சிக்குள் படிப்படியாக தனது ஆதிக்கத்தை அதிகமாக்கினார் அன்புமணி.
2016-ல் கட்சி முழுக்க அன்புமணி வசம் சென்றது. அதன்பின்னர், பாமக சந்தித்த தேர்தல்களில் எல்லாம் பெரிதாக சோபிக்கவில்லை என்பதுதான் ராமதாஸின் முதல் ஆதங்கம். அதனை தீர்க்கும் விதமாக 2024 தேர்தலில் அதிமுகவிடம் ஒரு ராஜ்யசபா சீட்டுடன், 7 தொகுதிகளையும் பேசி முடித்திருந்தார் ராமதாஸ். ஆனால், கடைசி நேரத்தில் பாஜகவோடு கூட்டணியை இறுதி செய்து ஷாக் கொடுத்தார் அன்புமணி. அந்த தேர்தலிலும் பாமக படுதோல்வி அடைந்ததால், அன்புமணி மீதான ராமதாஸின் கோபம் அதிகமானது.
இந்த நிலையில்தான், கடந்த ஆண்டு டிசம்பர் இறுதியில் நடந்த பாமகவின் பொதுக்குழுவின் தனது பேரன் முகுந்தனை இளைஞர் சங்க தலைவராக்கினார் ராமதாஸ். இதற்கு மேடையிலேயே கடும் எதிர்ப்பு தெரிவித்தார் அன்புமணி. அப்போது தொடங்கிய கலகம், இப்போது அன்புமணியை கட்சியில் இருந்து நீக்கும் அளவுக்கு வந்துள்ளது.
பாமகவின் எதிர்காலம் என்ன?
‘அன்புமணியிடம் 16 குற்றச்சாட்டுகள் குறித்து விளக்கம் கேட்கப்பட்டது. அவர் பதிலளிக்காததால், குற்றச்சாட்டுகளை உண்மையானது என முடிவெடுத்து கட்சியிலிருந்து நீக்குகிறேன். அவர் அரசியல்வாதி என்பதற்கே தகுதியற்றவர். அன்புமணி வேண்டுமானால் தனிக்கட்சி ஆரம்பித்துக் கொள்ளட்டும்’ என்று இன்று அறிவித்தார் ராமதாஸ்.
அதே நேரத்தில், தன்னை கட்சியில் இருந்து நீக்க ராமதாஸுக்கு அதிகாரமில்லை எனத் தெரிவித்துள்ளது அன்புமணி தரப்பு. தேர்தல் ஆணையம் தங்கள் தரப்பையே அங்கீகரித்துள்ளது எனவும் தெரிவித்துள்ளது. எனவே, இந்தச் சிக்கல் அடுத்த கட்டமாக நீதிமன்றத்துக்கு செல்லும்.
தற்போது பாமக அங்கீரிக்கப்பட்ட மாநிலக் கட்சி என்ற அந்தஸ்தை இழந்துவிட்டது, கட்சிக்கு நிரந்தர சின்னமும் இல்லை. இருப்பினும் சமரசம் ஏற்படாமல் சிக்கல் தொடர்ந்தால், இருவரும் தனித்தனி பெயர்களில் 2026 தேர்தலை சந்திக்கும் நிலை உருவாகும்.
மகாராஷ்டிராவில் தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு சரத் பவாரும், அவரின் அண்ணன் மகன் அஜித் பவாரும் உரிமை கோரினர். அப்போது அஜித் பவாருக்கு என்சிபி கட்சியையும், சரத் பவாருக்கு என்சிபி (எஸ்பி) என்ற புதிய பெயரையும் தேர்தல் ஆணையம் கொடுத்தது. பிஹாரில் ராம் விலாஸ் பாஸ்வான் மறைவுக்கு பிறகு அவரது மகன் சிராக் பஸ்வானுக்கும், சகோதரர் பசுபதி குமார் பராஸுக்கும் இடையே மோதல் வெடித்தது. அப்போது லோக் ஜனசக்தி கட்சி முடக்கப்பட்டு, சிராக்குக்கு லோக் ஜனசக்தி (ராம்விலாஸ்) என்ற பெயரும், பராஸுக்கு ராஷ்டிரிய லோக் ஜனசக்தி என்ற பெயரையும் தேர்தல் ஆணையம் அளித்தது.
அதுபோல, பாமகவும் தேர்தல் ஆணையத்தின் கதவுகளை தட்டினால், ஒருவேளை பாமக முடக்கப்படலாம் அல்லது இருவருக்கும் தனித்தனி பெயர்கள் அளிக்கப்படலாம். தனித்தனி பெயர்கள், தனித்தனி சின்னங்களுடன் இருவரும் மோதும் நிலை உருவாகும்.
‘இப்போதைய சூழலில் பெரும்பாலான நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அன்புமணியின் பக்கமே உள்ளனர். ஏனென்றால் அவர்தான் கட்சியின் எதிர்காலம் என நினைக்கின்றனர். ராமதாஸ் தனது மகள் காந்திமதியை முன்னிறுத்துவது இப்போது வரை பெரிய தாக்கத்தை உருவாக்கவில்லை. எனவே பாமக இரண்டாக பிரிந்து போட்டியிட்டால், பெரும்பாலான வாக்குகள் அன்புமணி பக்கமே செல்லும். ராமதாஸால் கணிசமான ஆதரவையே பெற முடியும்.
அதே நேரத்தில், இந்த தேர்தல் என்பது அன்புமணிக்கு அக்னி பரீட்சைதான். தொடர் தோல்விகள் எனும் குற்றச்சாட்டைத்தான் அன்புமணி மீது ராமதாஸ் முன்வைக்கிறார். ஒருவேளை இம்முறை அன்புமணியை விட, ராமதாஸ் அணி கொஞ்சம் முன்னேறினாலும், அது அன்புமணியின் தலைமை மீது கேள்விகளை எழுப்பும்.
அன்புமணி முழுக்கவும் திமுகவுக்கு எதிராக பேசி வருகிறார். எனவே, அவர் அதிமுக அணியிலும், ராமதாஸ் திமுக அணியிலும் இருக்கும் சூழல் உருவானால், அது 2026 தேர்தலில் பெரும் சலசலப்பை உருவாக்கும். இதில் யார் அதிக தொகுதிகளை கைப்பற்றுகிறார்கள் என்பதை பொறுத்தே கட்சியின் எதிர்காலம் தீர்மானிக்கப்படும்.
எனவே, 2026 தேர்தலில் கட்சியை யார் வெற்றிப் பாதையில் கொண்டு செல்கிறார்களோ, அவர்கள் பக்கமே பாட்டாளிகள் இனி படையெடுப்பார்கள்’ என்கின்றனர் அரசியல் நோக்கர்கள். அதுவரை, பாமகவினர் மத்தியில் குழப்பம் நீடிக்கும் வாய்ப்புதான் அதிகம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT