Last Updated : 11 Sep, 2025 05:21 PM

3  

Published : 11 Sep 2025 05:21 PM
Last Updated : 11 Sep 2025 05:21 PM

“மதுரை விமான நிலையத்துக்கு பாண்டிய மன்னன் நெடுஞ்செழியன் பெயர் சூட்டுக” - சீமான்

மதுரை: மதுரை விமான நிலையத்துக்கு பாண்டிய மன்னன் நெடுஞ்செழியன் பெயரை சூட்ட வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தினார்.

தியாகி இமானுவேல் சேகரன் நினைவு தின நிகழ்வில் பங்கேற்க நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை வந்தார். பின்னர் அவர் விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் கூறியது: “குடியரசு துணைத் தலைவராக பதவியேற்கும் சி.பி.ராதாகிருஷ்ணன் பற்றி சொல்ல எதுவும் இல்லை. அவருக்கு எனது வாழ்த்துக்கள். சனிக்கிழமைகளில் மட்டும் விஜய் பிரச்சாரம் மேற்கொள்வது அவரது கட்சியின் முடிவு.

திருச்சியில் பள்ளிக்கு விடுமுறை கொடுத்து ‘ உங்களுடன் ஸ்டாலின்’ முகாம் நடந்த கொடுமைக்கு பெயர்தான் திராவிட மாடல் ஆட்சி. பாஜக, ஆர்எஸ்எஸ் கோட்பாடு என்னவோ அப்படியே பாஜக இயங்கிறது. இல.கணேசன் மறைவுக்கு மோடி செய்ய வேண்டிய மரியாதையை முதல்வர் செய்ததற்கு காரணம் என்ன? மூப்பனார் நினைவேந்தலுக்கு வந்த மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், இல.கணேசனுக்கு வர முடியவில்லை. இவர்களின் நெருக்கத்துக்கு இதைவிட வேறு சான்று என்ன சொல்ல முடியும்.

பாஜக கொள்கைகளுடன் ஒத்துபோய் ஓர் ஆட்சி நடக்கிறது என்றால், அது திமுகதான். அதிமுக கூட்டணியில் இருந்து பிரிந்தவர்கள் விஜய்யுடன் கூட்டணி சேர்ந்தால் என்ன நடக்க போகிறது? கூட்டத்தை வைத்து கட்சி ஆரம்பிக்கவில்லை. நான் நம்புவது உயர்ந்த கொள்கையை மட்டுமே. பிள்ளைகள் வாழ வீட்டை கட்ட நினைக்கிறீர்கள். நான் பிள்ளைகள் வாழ நாட்டை காப்பாற்ற நினைக்கிறேன்.

ஆண்ட அதிமுக, திமுக, பாஜக, காங்கிரஸோடு கூட்டணி வைத்து என்ன செய்யப் போகிறீர்கள்? அவர்கள் 60% கொள்ளை அடித்தால் இவர்கள் 40% கொள்ளை அடிப்பார்கள். இதுவே நடக்கப் போகிறது. அதிகாரங்களை எதிர்த்து சண்டை போட்டதால் 200-க்கும் மேற்பட்ட வழக்குகள் என் மீது உள்ளது. இதற்கெல்லாம் பயப்படக்கூடாது.

மதுரை விமான நிலையத்துக்கு முத்துராமலிங்கத் தேவர் பெயர் வைப்பதைவிட, எங்களுடைய வரலாறு உள்ள பாண்டிய மன்னன் நெடுஞ்செழியன் பெயரை வைத்தால் யாரும் எதிர்க்க மாட்டார்கள். திருச்சியில் நடக்கவிருக்கும் எங்களது மாநாடு மாற்றத்தை விரும்பும் மக்களின் மாநாடு. ஆடு, மாடு மாநாடு தொடர்ந்து மலைகள், கடல்கள், ஆறுகளுக்கு அடுத்தடுத்து மாநாடு நடைபெற உள்ளது. நாங்கள் மனிதர்களுக்கு மட்டுமான அரசியல் இன்றி எல்லா உயிர்களுக்குமான அரசியலாக பார்க்கிறோம்” என்று சீமான் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x