Published : 11 Sep 2025 02:09 PM
Last Updated : 11 Sep 2025 02:09 PM

பாஜகவால்தான் பாமக, அதிமுகவில் பிரிவினை ஏற்பட்டுள்ளது: செல்வப்பெருந்தகை

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் தியாகி இமானுவேல் சேகரன் 68வது நினைவு தினத்தை முன்னிட்டு தமிழக காங்கிரஸ் மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை, முன்னாள் எம்பி திருநாவுக்கரசர் ஆகியோர் மரியாதை செய்தனர். படம்: எல்.பாலச்சந்தர்.

பரமக்குடி: பாஜகவால்தான் தமிழகத்தில் பாமக, அதிமுகவில் பிரிவினை ஏற்பட்டுள்ளது, பாஜக எனும் ஆமை புகுந்த மாநிலமாக தமிழகம் மாறியிருக்கிறது, என தமிழக காங்கிரஸ் மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை பரமக்குடியில் இன்று தெரிவித்தார்.

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் தியாகி இமானுவேல் சேகரன் 68வது நினைவு தினத்தை முன்னிட்டு இன்று தமிழக காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை, முன்னாள் எம்பி திருநாவுக்கரசர் மற்றும் கட்சியினர் மரியாதை செய்தனர்.

பின்னர் தமிழக காங்கிரஸ் மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை பேசியதாவது: காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் தியாகி இமானுவேல் சேகரனுக்கு தபால் தலை வெளியிட்டது. தமிழக முதல்வர் கொடுத்த வாக்குறுதிப்படி மணிமண்டபம் அமைத்துள்ளனர்.

சந்தர்ப்பவாத அரசியல் செய்யும் கட்சிகள் தேர்தலுக்காக ஏதேதோ வாக்குறுதிகள் கொடுத்து கொண்டிருக்கின்றனர். தேர்தல் மட்டும் நோக்கமல்ல, மக்களின் வாழ்க்கையை முன்னேற்ற வேண்டும் என்பதுதான் காங்கிரஸ் கட்சியின் நோக்கம். முக்கியமாக தேவேந்திர குல மக்களோடு காங்கிரஸ் பேரியக்கம் பின்னிப் பிணைந்துள்ளது.

இமானுவேல் சேகரன் காங்கிரஸ் கட்சியிலிருந்து பாடுபட்டவர். மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைந்து ராகுல் காந்தி பிரதமராக ஆனவுடன் இங்கு அழைத்து வருவோம்.

பாஜகவைபோல் பிரித்தாளும் கொள்கை காங்கிரஸ் கட்சிக்கு கிடையாது. பிரித்தாளும் கொள்கையுடைய பாஜகதான் பாமக, அதிமுக பிரிவினைக்கு காரணம், பாஜகவால்தான் பாமகவில் தந்தை மகன் இடையே முட்டல் உருவாகியுள்ளது. அதிமுகவில் செங்கோட்டையன் பிரிவினைக்கும் பாஜகதான் காரணம். ஆமை நுழைந்த வீடுபோல், பாஜக எனும் ஆமை நுழைந்த மாநிலமாக தமிழகம் மாறியிருக்கிறது.

பாஜக யார் யாரோடு சேர்கிறார்களோ அங்கெல்லாம் பிரச்சினை. அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி ஆட்சியில் இருக்கும்போது மதுரை விமான நிலையத்திற்கு பெயர் சூட்டுவது தொடர்பாக வாய் திறக்காமல் தற்போது பேசியுள்ளது இது வாக்கு அரசியல், சந்தர்ப்பவாத அரசியலாகும். இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x