Published : 11 Sep 2025 10:08 AM
Last Updated : 11 Sep 2025 10:08 AM
எல்லாக் கட்சிகளிலும் ஏதோ ஒன்று நடந்துகொண்டிருக்கும் போது, நாம் மட்டும் சும்மா இருந்தால் எப்படி என காங்கிரஸ் தலைமை நினைத்துவிட்டது போலிருக்கிறது. அதனால், ஒரே சமயத்தில் கோவையில் மூன்று மாவட்டத் தலைவர்களுக்கும் மொத்தமாக விடை கொடுத்திருக்கிறது. காரணம் ஒன்றும் புதிதல்ல... வழக்கமான கோஷ்டி அரசியல் தான்.
தமிழகத்தில் காங்கிரஸ் கொஞ்சம் சத்தாக இருக்கும் மாவட்டங்களில் கோவையும் ஒன்று. கோவை மாநகர், கோவை வடக்கு, கோவை தெற்கு என கோவை மாவட்ட காங்கிரஸ் மூன்று மாவட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. மாநகர் மாவட்டத் தலைவராக வழக்கறிஞர் கருப்புசாமியும், வடக்கு மாவட்டத் தலைவராக வி.எம்.சி.மனோகரனும், தெற்கு மாவட்டத் தலைவராக என்.கே.பகவதியும் இருந்தனர். இவர்கள் மூவரையும் தான் அண்மையில் பொறுப்பிலிருந்து விடுவித்திருக்கிறது காங்கிரஸ் தலைமை.
இவர்களுக்குப் பதிலாக மாநகர் மாவட்டத்துக்கு பீளமேடு விஜயகுமாரும் வடக்கு மாவட்டத்துக்கு பி.ஆர்.ரங்கராஜனும், தெற்கு மாவட்டத்துக்கு பி.சக்திவேலும் தலைவர்களாக நியமிக்கப் பட்டுள்ளனர். இந்தத் தடாலடி நீக்கம் குறித்து நம்மிடம் பேசிய கோவை காங்கிரஸார், “காங்கிரஸ் கட்சி மாவட்டத் தலைவர் பதவியானது மூன்றாண்டு கால பதவியாகும். இருந்தாலும் அதிகபட்சம் ஒருவர் தொடர்ச்சியாக 6 ஆண்டுகள் வரைக்கும் தலைவராக இருக்கலாம்.
ஆனால், இப்போது பதவி நீக்கப்பட்ட வடக்கு மாவட்டத் தலைவர் வி.எம்.சி.மனோகரன் தனக்குள்ள மேலிட செல்வாக்கைப் பயன்படுத்தி 17 ஆண்டுகளாக அந்தப் பதவியில் ஒட்டிக்கொண்டு இருந்தார். அதேபோல் மாநகர் மாவட்டத் தலைவர் கருப்புசாமியும் வடக்கு மாவட்டத் தலைவர் பகவதியும் நாலரை ஆண்டுகளுக்கும் மேலாக தலைவர்களாக நீடித்தார்கள்.
இப்படி தொடர்ந்து இந்த மூவரே மாவட்டத் தலைவர் பதவிகளை தக்கவைத்துக் கொண்டதால் ஒட்டுமொத்தமாக கோவை மாவட்ட காங்கிரஸே தேக்க நிலைக்குப் போய்விட்டது. இவர்களால் அடுத்தகட்ட பொறுப்புகளுக்கு நியமிக்கப்பட்டவர்களும் கட்சியை வளர்ப்பதில் கவனம் செலுத்தாததால் காங்கிரஸுக்கான புதிய வாக்காளர்களின் வருகையும் கணிசமாக குறைந்து போனது. அதேசமயம், கட்சியை வளர்ப்பதில் கவனம் செலுத்தாத இவர்கள், ஒருவர் மீது ஒருவர் தலைமைக்கு புகார் சொல்லிக் கொண்டு தனி ஆவர்த்தனங்களை நடத்தி வந்தனர்.
மாநகர் மாவட்டத்தில் மாவட்டத் தலைவர் கருப்புசாமிக்கு எதிராக, எதிர் கோஷ்டியினர் போட்டிக் கூட்டங்களை நடத்திய வரலாறும் உண்டு. நீக்கப்பட்ட மூன்று மாவட்ட தலைவர்களும் தங்களுக்குள் ஒருங்கிணைப்பு இல்லாமல் ஆளுக்கொரு திசையில் செயல்பட்டதால் கட்சியினருக்குள் ஒற்றுமை இல்லாமல் போனது. அதிலும் மூவரில் ஒருவர், அகில இந்தியப் பொறுப்பாளர் ஒருவரை பிடித்து அவர் மூலமாகத்தான் பதவி பெற்றதாகச் சொல்வார்கள். இவரது பதவியை பறிக்கப் போவதாக ரொம்ப நாட்களாகவே பேச்சு இருந்ததால் அவரது பதவி நீக்கம் கட்சியினர் மத்தியில் பெரிதாக அதிர்ச்சியை ஏற்படுத்தவில்லை.
வடக்கு மாவட்டத் தலைவருக்கும் மாநகர் மாவட்ட நிர்வாகிகளுக்கும் ஆரம்பத்திலிருந்தே ஒத்துப்போகவில்லை. தெற்கு மாவட்ட தலைவர் பகவதிக்கும் மாநில தலைவர் செல்வப்பெருந்தகைக்கும் தொடக்கத்திலிருந்தே ஏழாம் பொருத்தமாக இருந்தது. கட்சியின் அனைத்து நிகழ்வுகளிலும் தன்னை முன்னிலைப்படுத்திக் கொள்வதிலேயே கவனமாக இருந்த பகவதி, கட்சியைப் பற்றி கவலைப்படவில்லை.
இப்படி மூன்று மாவட்டத் தலைவர்களுமே முரண்பட்டு நின்றதால் ஒருவரை நீக்கிவிட்டு மற்றவர்களை வைத்திருந்தால் தேவையற்ற பிரச்சினைகளைக் கிளப்புவார்கள் என்பதால் மூன்று பேரையும் மாவட்டத் தலைவர் பொறுப்பிலிருந்து தூக்கி இருக்கிறார்கள். புதிதாக தலைவர் பொறுப்புக்கு வந்திருப்பவர்கள் கடந்த கால நிகழ்வுகளை எல்லாம் சீர்தூக்கிப் பார்த்து கோவை காங்கிரஸை கோமாவில் இருந்து மீட்டால் நல்லது” என்றனர்.
பதவி நீக்கம் தொடர்பாக வடக்கு மாவட்ட முன்னாள் தலைவர் வி.எம்.சி.மனோகரனிடம் பேசினோம். “கட்சி தலைமை அறிவித்த அனைத்து போராட்டங்களையும் பொதுக்கூட்டங்களையும் ஆயிரக்கணக்கில் கூட்டத்தைக் கூட்டி சிறப்பாகவே நடத்தி முடித்திருக்கிறேன். கட்சி வளர்ச்சிக்காக என்னாலான அனைத்து முயற்சிகளையும் எடுத்துள்ளேன்.
இருந்தாலும் மாற்றம் என்பது வழக்கமானது தான். அதை ஏற்றுக்கொண்டு, நான் வழக்கம் போல கட்சிப் பணிகளை தொய்வின்றி தொடர்கிறேன்” என்றார் அவர். மாநகர் மாவட்ட முன்னாள் தலைவர் கருப்புசாமியோ, “இது வழக்கமான கட்சியின் நடவடிக்கை தான். மற்றபடி இதற்கு குறிப்பிடும்படியாக வேறெந்தக் காரணமும் இல்லை” என்றார்.
இதனிடையே, புதிதாக மாநகர் மாவட்டத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள பீளமேடு விஜயகுமார் மீது அதற்குள்ளாகவே புகாரை கிள்ளிப்போட ஆரம்பித்துவிட்டார்கள். 2022-ல் கோவை மாநகராட்சி தேர்தலில் திமுக கூட்டணியில் தனது மனைவிக்கு சீட் இல்லை என்றதும், திமுக-வுக்கு ஒதுக்கப்பட்ட அந்த வார்டில் தனது மனைவியை சுயேச்சையாக போட்டியிட வைத்து கூட்டணி தர்மத்தை மீறினார் என்பதே விஜயகுமாருக்கு எதிராக காங்கிரஸ் கட்சியினர் சுடச் சுடக் கொளுத்திப் போட்டிருக்கும் புகார்.
எத்தனை பேர் வந்து புத்தி சொன்னாலும் கோஷ்டி அரசியல் செய்வதிலும் ‘ஜனநாயகரீதியில்’ செயல்படும் காகிரஸாரை அத்தனை எளிதில் மாற்றிவிட முடியுமா என்ன?
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT