Published : 11 Sep 2025 05:17 AM
Last Updated : 11 Sep 2025 05:17 AM
சென்னை: அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்களை ஒருங்கிணைத்தால் தான் 2026 சட்டப்பேரவை தேர்தலில் கரை சேர முடியும் என கட்சியின் பொதுச் செயலாளர் பழனிசாமிக்கு 10 நாட்கள் கெடு விதித்து செங்கோட்டையன் போர் கொடி தூக்கிய நிலையில், செங்கோட்டையன் மற்றும் அவரது ஆதரவாளர்களின் கட்சி பதவிகள் பறிக்கப்பட்டன. இதைத்தொடர்ந்து, ஹரித்வார் செல்வதாக கூறிவிட்டு சென்ற செங்கோட்டையன், டெல்லியில் அமித் ஷா மற்றும் நிர்மலா சீதாரமனை சந்தித்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
இந்த சந்திப்பின் போது, 2026 தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியை பிடிக்க வேண்டுமென்றால், ஒருங்கிணைந்த அதிமுகவுடன் தேர்தலை சந்திக்க வேண்டும் என அமித் ஷாவிடம் செங்கோட்டையன் வலியுறுத்தியதாக தெரிகிறது.
அதுமட்டுமில்லாமல், ஓபிஎஸ், தினகரனை டெல்லிக்கு அழைத்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என அமித் ஷாவிடம் செங்கோட்டையன் கூறியதாகவும் தெரிகிறது. இதையடுத்து, இருவரையும் டெல்லிக்கு அழைத்து பேச பாஜக மேலிடம் திட்டமிட்டு வருவதாகவும், இதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாகவும் பாஜக வட்டாரத்தில் கூறப்படுகிறது.
அதேசமயம், பிரிந்தவர்கள் பிரிந்தவர்கள்தான். அவர்களை மீண்டும் அதிமுகவில் இணைப்பதற்கான வாய்ப்பு துளியும் இல்லை என கறார் காட்டி வரும் பழனிசாமியிடமும் அதிமுக ஒருங்கிணைப்பு குறித்து சமாதான பேச்சுவார்த்தை நடத்தவும் அதற்கு முன்பாக, பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரனிடமும் ஆலோசனை நடத்தவும் பாஜக மேலிடம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதற்காக அவர் இன்று (11-ம் தேதி) டெல்லி செல்கிறார். அங்கு அமித் ஷா, ஜெ.பி.நட்டா, தேசிய பொதுச் செயலாளர் பி.எல்.சந்தோஷ் உள்ளிட்டோரை சந்திக்கிறார். அப்போது, அதிமுக ஒருங்கிணைப்பு குறித்து அவர் வலியுறுத்த உள்ளதாக கூறப்படுகிறது.
இந்தச் சூழலில் நயினார் நாகேந்திரனிடம் ஆலோசித்த பிறகு ஒபிஎஸ், தினகரனை டெல்லிக்கு அழைத்து சமாதான பேச்சுவார்த்தையை நடத்த திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன்மூலம் கூட்டணியில் ஏற்பட்டுள்ள சலசலப்புகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து, பிரிந்து சென்றவர்களை ஒருங்கிணைத்து, பலமான கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்க பாஜக ஆயத்தமாக வருவது தெரிகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT