Published : 11 Sep 2025 02:04 AM
Last Updated : 11 Sep 2025 02:04 AM
சென்னை: ராமேசுவரம் - காசி கட்டணமில்லா ஆன்மிக பயணத்தில் பங்கேற்க விருப்பமுள்ள பக்தர்கள் அக்.22-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என இந்து சமய அறநிலையத்துறை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து இந்து சமய அறநிலையத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலில் இருந்து காசி விஸ்வநாதசுவாமி கோயிலுக்கு இவ்வாண்டு ரூ.1.50 கோடி அரசு நிதியில் 600 பக்தர்கள் ஆன்மிகப் பயணமாக அழைத்துச் செல்லப்பட உள்ளனர். இந்து சமய அறநிலையத்துறையின் 20 இணை ஆணையர் மண்டலங்களிலிருந்து மண்டலத்துக்கு 30 பக்தர்கள் வீதம் 600 நபர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
விண்ணப்பதாரர் இந்து மதத்தை சார்ந்தவராகவும், இறை நம்பிக்கை உடையவராகவும், 60 வயது முதல் 70 வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும். ஆண்டு வருமானம் ரூ.2,00,000-க்கு மிகாமல் இருப்பதோடு, அதற்கான சான்றிதழை வட்டாட்சியரிடமிருந்து பெற்று, போதிய உடல் தகுதி உள்ளதற்கான மருத்துவ சான்றுடன், ஆதார் நகல் இணைக்கப்பட வேண்டும்.
இந்த ஆன்மிகப் பயணத்துக்கான விண்ணப்ப படிவங்களை அந்தந்த மண்டல இணை ஆணையர் அலுவலகங்களில் நேரில் பெற்றோ அல்லது www.hrce.tn.gov.in என்ற இந்து சமய அறநிலையத்துறை இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்தோ விண்ணப்பிக்கலாம்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தினை உரிய சான்றுகளுடன் இணைத்து சம்பந்தப்பட்ட மண்டல இணை ஆணையர் அலுவலகத்தில் அக்.22-ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். மேலும், விவரங்களுக்கு துறையின் இணையதளத்திலோ அல்லது 1800 425 1757 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணிலோ தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT