Published : 10 Sep 2025 06:27 AM
Last Updated : 10 Sep 2025 06:27 AM
மதுரை: தேசிய ஜனநாயக கூட்டணியில் சில வருத்தங்கள் இருந்தாலும், அவை விரைவில் முடிவுக்கு வரும் என்று பாஜக மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை கூறினார்.
மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது: தேசிய ஜனநாயக கூட்டணிக்கு டிடிவி.தினகரன், ஓபிஎஸ் மீண்டும் வர வேண்டும், கூட்டணியில் தொடர வேண்டும் என்று நான் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன். வருத்தத்தில் ஒரு முடிவை எடுத்திருப்பார்கள். தேசிய ஜனநாயக கூட்டணியில் சில வருத்தங்கள் இருந்தாலும், விரைவில் அவை முடிவுக்கு வரும்.
அதுவரை இணைப்பு முயற்சிகளை மேற்கொள்வோம். நாம் எப்போதுமே பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரை கடவுளாக கருதி வருகிறோம். அவருக்கு உரிய மரியாதையை கொடுக்கிறோம். தியாகி இமானுவேல் சேகரன் விழாவுக்கும் ஆண்டுதோறும் பாஜக தலைவர்கள் செல்கின்றனர். எங்களைப் பொறுத்தவரை, எதையும் சர்ச்சையாக பார்ப்பதில்லை. எல்லோரும் அவரவர் கருத்தை சொல்கின்றனர்.
தமிழகத்தில் பாஜகவை வழி நடத்தும் நயினார் நாகேந்திரன்தான் எங்களது தலைவர். சட்டப்பேரவைத் தேர்தலுக்கு இன்னும் 7 மாதங்கள் இருக்கின்றன. அதற்குள் ஏன் அவசரப்பட வேண்டும்? சகோதரர் விஜய் கட்சி தொடங்கி இருக்கிறார். மதுரை மண்ணில் அண்மையில் மாநாடு நடத்தி முடித்திருக்கிறார்.
அவர் 24 மணி நேரமும் அரசியல் களத்தில் இருக்க வேண்டும். தவெக தமிழகத்தில் மாற்றத்தை ஏற்படுத்தும் கட்சி என்று அவர்கள் சொல்கின்றனர். சனிக்கிழமை மட்டும் நான் பிரச்சாரத்துக்கு வருவேன். ஞாயிற்றுக்கிழமை மட்டும் மக்களைப் பார்ப்பேன். பிற நாட்களில் பார்க்க மாட்டேன் என்பது புதிதாக வந்திருக்கும் அரசியல் கட்சிக்கு அழகல்ல. திமுகவுக்கு தவெகதான் எதிரி என்கின்றனர். இதை களத்தில் காட்ட வேண்டும்.
மாற்றத்துக்கான அறிகுறி... தமிழகத்தில் அதிமுக ஒரு யாத்திரை நடத்தி வருகிறது. பாஜக பூத் கமிட்டி கூட்டங்களை முடித்து, மண்டல மாநாடுகளை நடத்தவிருக்கிறது. ஜான் பாண்டியன் அண்மையில் திண்டுக்கல்லில் மாநாடு நடத்தினார். இனி நடைபெறும் பொதுக்கூட்டங்களில் கட்சித் தொண்டர்களை தாண்டி, மக்கள் ஆர்வமாக பங்கேற்கும்போதுதான் அரசியல் மாற்றத்துக்கான அறிகுறி தெரியும். இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT