Published : 10 Sep 2025 05:33 AM
Last Updated : 10 Sep 2025 05:33 AM
சென்னை: தேர்தல் நாள் வரை பசி, தூக்கம், ஓய்வை மறந்து உழைப்பை கொடுங்கள் என்று திமுகவினருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். ஓரணியில் தமிழ்நாடு மற்றும் திமுக முப்பெரும் விழா தொடர்பாக, திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் காணொலியில் நேற்று நடைபெற்றது.
இதில் முதல்வர் ஸ்டாலின் பேசியது: கடந்த 10 ஆண்டு அதிமுக ஆட்சியில் படுபாதாளத்துக்கு போன தமிழகத்தின் வளர்ச்சியை மீட்டெடுத்து 11.19 சதவீத வளர்ச்சியுடன் நாட்டிலேயே முதன்மை மாநிலமாக திமுக ஆட்சியில் தமிழகத்தை உயர்த்தியுள்ளோம். அடுத்தக்கட்ட பாய்ச்சலுக்கு அடித்தளமிட ஜெர்மனி, இங்கிலாந்துக்கு சென்று ரூ.15,516 கோடி முதலீடுகளை ஈர்த்து ‘சூப்பர் ஹிட்’ அடித்துள்ளோம்.
தமிழகத்தை ஒரு டிரில்லியன் பொருளாதாரமாக உயர்த்தும் இலக்கை நாம் விரைந்து அடைய, இப்பயணங்கள் வெற்றியடைந்தால் மட்டும் போதாது. வரவிருக்கும் தேர்தலிலும் மாபெரும் வெற்றியைப் பெற வேண்டும். இதற்கான அடித்தளமாகத்தான், ஓரணியில் தமிழ்நாடு முன்னெடுப்பை தொடங்கினோம்.
சர்வாதிகார மனப்பான்மையுடன் தமிழகத்தை வஞ்சிக்கும் மத்திய அரசுக்கு எதிராக, தமிழகத்தின் மண், மொழி, மானம் காக்க, தமிழக மக்களை ஒன்றிணைக்க நீங்கள் எல்லோரும் களத்தில் சிறப்பாகப் பணியாற்றினீர்கள். ஒரு கோடிக்கும் அதிகமான குடும்பங்களை, ஓரணியில் தமிழ்நாடு இயக்கத்தில் இணைத்துள்ளோம்.
தேர்தல் முடியும் வரைக்கும் ஓய்வு என்ற சொல்லையே மறந்துவிடுங்கள். ஏனென்றால், 2026-ல் நாம் பெறப்போகும் வெற்றி, திமுகவுக்கான வெற்றி மட்டுமல்ல. ஒட்டுமொத்த தமிழகத்துக்கான வெற்றி. மக்களைக் குழப்ப எதிர்க்கட்சிகள் என்ன வேண்டுமானாலும் செய்யட்டும். அதுதான் அவர்களால் முடியும். மக்களை ஒன்றிணைத்து, அவர்களின் துணையோடு தமிழ்நாட்டின் மண், மொழி, மானம் காக்க நம்மால்
தான் முடியும்.
அதற்கான வலிமையை நாம் பெறப்போகும் நாள்தான், வரும் செப்.17 முப்பெரும் விழா. அதற்கு முன், பேரறிஞர் அண்ணாவின் செப். 15-ம் நாள், 68 ஆயிரம் வாக்குச்சாவடிகளிலும் அந்தந்த வாக்குச்சாவடிகளில் இணைந்த குடும்பங்களை அழைத்து, வாக்குச்சாவடியில் உள்ள பிஎல்ஏ, பிடிஏ, பிஎல்சி கூட்டங்களை நடத்த வேண்டும்.
நம்மோடு இணைந்திருக்கும் எல்லோரையும் தேர்தல் வரைக்கும் நம்முடனே இணைத்துக் கொண்டு களப்பணியாற்ற வேண்டும். லட்சக்கணக்கான உடன்பிறப்புகள் முப்பெரும் விழாவுக்காக கரூர் நோக்கி திரண்டு வருவார்கள். எல்லோரும் பாதுகாப்பாக வந்து போவதை உறுதி செய்யுங்கள். அவர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் அனைத்தும் இருக்க வேண்டும். விழா முடிந்த பிறகு, செப்.20-ம் ல் ஓரணியில் தமிழ்நாடு கூட்டங்களை மாவட்டவாரியாக நடத்த வேண்டும்.
நமது அரசின் திட்டங்களால், மக்களிடையே நமக்கு இருக்கும் ஆதரவு உணர்வை அப்படியே தேர்தல் வரைக்கும் எடுத்துச் சென்று
அறுவடை செய்ய ஒவ்வொரு வரும் களத்தில் தீவிரமாகப் பணியாற்ற வேண்டும். அடுத்து நமது இலக்கு 2026-ல் திராவிட மாடல் 2.0 அமைய வேண்டும் என்பதே. அதற்கு தேர்தல் நாள் வரை பசி, தூக்கம், ஓய்வை மறந்து உழைப்பை கொடுங்கள். ஓய்வறியாச் சூரியனாக உழைப்போம். இவ்வாறு தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT