Published : 09 Sep 2025 09:13 PM
Last Updated : 09 Sep 2025 09:13 PM

“அதிமுகவின் முதல்வர் வேட்பாளரை மாற்றினால் பாஜக கூட்டணிக்கு ஆதரவு” - டிடிவி தினகரன்

ஸ்ரீவில்லிபுத்தூர்: “பாஜகவில் யார் மீதும் எந்த வருத்தமும் இல்லை. அதிமுகவில் முதல்வர் வேட்பாளரை மாற்றினால் ஆதரிக்க தயாராக உள்ளோம்” என ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் சுவாமி தரிசனம் செய்த அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்தார்.

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் செவ்வாய்க் கிழமை இரவு அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் சுவாமி தரிசனம் செய்தார். தொடர்ந்து மணவாள மாமுனிகள் மடத்தில் ஶ்ரீ சடகோப ராமானுஜ ஜீயர் சுவாமிகளிடம் ஆசி பெற்றார். இருவரும் தனி அறையில் 5 நிமிடம் பேசினர்.

அதன்பின் செய்தியாளர்களிடம் டிடிவி தினகரன் கூறியது: “குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் சி.பி ராதா கிருஷ்ணன் வெற்றி பெற்றது தமிழகத்துக்கு பெருமை அளிக்கக்கூடிய விஷயம். தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகிய காரணங்களை இரு நாட்களாக கூறிவிட்டேன். தனிப்பட்ட முறையில் நயினார் நாகேந்திரன் நல்ல நண்பர். அவரது எனக்கு எந்த கோபமும் இல்லை. ஒரு நண்பராக அவர் எப்போது வேண்டுமானாலும் என்னிடம் பேசலாம், சந்திக்கலாம். பாஜகவில் யார் மீதும் எனக்கு எந்த வருத்தம் இல்லை.

துரோகத்தை ஏற்றுக்கொண்டு நாங்கள் கூட்டணிக்கு செல்ல வாய்ப்பு இல்லை. அதிமுக சார்பில் நாங்கள் ஏற்றுக்கொள்ளும் வேட்பாளரை அறிவித்தால் நாங்கள் ஆதரிக்க தயாராக உள்ளோம். பழனிச்சாமி 10.5 சதவீத இட ஒதுக்கீடு எனக் கூறி வட தமிழக மக்களை ஏமாற்றினார். அவரை பதவியில் அமைத்தியவருக்கு துரோகம், நம்பிக்கை வாக்கெடுப்பில் உதவி செய்தவருக்கு துரோகம், ஆட்சி தொடர காரணமாக இருந்தவர்களுக்கு துரோகம் செய்து, துரோகத்தின் மறு உருவமாக பழனிச்சாமி உள்ளார்.

அதேபோல் இன்று அமைதி பூங்காவாக உள்ள தென் தமிழகத்தை தேவையற்ற வசனங்களை பேசி உள்ளார். பசும்பொன் தேவர் பெயரில் பழனிசாமி செய்யும் சமூக விரோத அறிவிப்பை மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். எம்.ஜி.ஆர், ஜெயலலிதா காலத்தில் அதிமுக கோட்டையாக இருந்த தென் தமிழகம் பழனிச்சாமி தலைமையில் அதள பாதாளத்துக்குச் சென்று விட்டதால் மக்களை பிரித்தாளும் வகையில் பழனிசாமி செயல்படுகிறார். செங்கோட்டையன் நல்ல முயற்சி வெற்றி பெற வேண்டும் எனபது ஜெயலலிதா தொண்டர்களின் விருப்பம். அவரின் முயற்சி வெற்றி பெறும் என ஆண்டாள் சந்நிதியில் கூறுகிறேன்” என்று டிடிவி தினகரன் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x