Published : 09 Sep 2025 04:32 PM
Last Updated : 09 Sep 2025 04:32 PM
சென்னை: மத்திய அமைச்சர்கள் அமித் ஷா மற்றும் நிர்மலா சீதாராமனை சந்தித்தபோது பேசிய விவரங்கள் குறித்து செங்கோட்டையன் சில தகவல்களை வெளியிட்டுள்ளார்.
டெல்லியில் இருந்து திரும்பிய பின் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த செங்கோட்டையன், “நேற்று ஹரித்வார் செல்வதாக சொல்லிவிட்டு சென்றேன். டெல்லியில் உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்திக்க அனுமதி வழங்கப்பட்டது. இதனால் அமித் ஷா, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்தேன். அவர்களிடம் இன்றைய அரசியல் சூழல் குறித்து கருத்துகள் பரிமாறப்பட்டன. எல்லோரும் ஒன்றிணைய வேண்டும், இயக்கம் வலுப்பெற வேண்டும் என்று கருத்துகளை அவர்களிடம் எடுத்துச் சொன்னோம்.
ஆகவே, இதன் அடிப்படையில் இதுகுறித்து ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமான கருத்துகளை வெளிப்படுத்துகிறார்கள். ஒவ்வொருவருக்கும் ஜனநாயக உரிமை உண்டு, இது வரவேற்கத்தக்கது. உள்துறை அமைச்சரை சந்தித்தபோது, அங்கே ரயில்வே அமைச்சர் வருகை தந்தார். அப்போது ஈரோட்டிலிருந்து புறப்படும் ஏற்காடு எக்ஸ்பிரஸ் ரயில், முதலில் 10 மணிக்கு புறப்பட்டது. இப்போது முன்கூட்டியே புறப்படுவதால் சிரமம் ஏற்படுவதாக சொன்னேன். அதுகுறித்து பரிசீலித்து நடவடிக்கை எடுப்பதாக சொன்னார்கள். மக்கள் பணி செய்வதற்கும், இயக்கம் வலுப்பெறுவதற்கும் நான் தொடர்ந்து பணியாற்றுவேன்” என்று செங்கோட்டையன் கூறினார்.
முன்னதாக, அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்களை இணைக்கும் முயற்சியை 10 நாட்களில் தொடங்க வேண்டும் என அக்கட்சியின் பொதுச் செயலாளர் பழனிசாமிக்கு, முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கெடு விதித்தார். இதைத் தொடர்ந்து அவரிடம் இருந்த அமைப்புச் செயலாளர், ஈரோடு புறநகர் மேற்கு மாவட்டச் செயலாளர் ஆகிய பதவிகளை பறித்து பழனிசாமி நடவடிக்கை எடுத்தார். மேலும், அவருடன் கோபி, நம்பியூரைச் சேர்ந்த சில நிர்வாகிகளின் பதவிகளும் பறிக்கப்பட்டன.
இதைத் தொடர்ந்து முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனை ஈரோடு மாவட்டம் கோபியில் உள்ள அவரது இல்லத்தில் ஆதரவாளர்கள் தொடர்ந்து சந்தித்து ஆதரவு தெரிவித்தனர். இதன் தொடர்ச்சியாக, செங்கோட்டையன் கோபியில் இருந்து புறப்பட்டு நேற்று காலை கோவை வந்தார். பின்னர் கோவை, பீளமேட்டில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில் இருந்து புதுடெல்லி புறப்பட்டுச் சென்றார். திடீர் திருப்பமாக உள்துறை அமைச்சர் அமித் ஷாவை அவரது இல்லத்தில் செங்கோட்டையன் நேற்று இரவு சந்தித்தது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT