Published : 09 Sep 2025 01:06 PM
Last Updated : 09 Sep 2025 01:06 PM
சென்னை: தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச் செயலாளர் என்.ஆனந்த் மீதும், கழகத் தோழர்கள் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதற்கு தவெக தலைவர் விஜய் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழக வெற்றிக் கழகத்தின் மீது மக்களிடையே பெருகி வரும் அன்பையும் ஆதரவையும் பொறுத்துக்கொள்ள முடியாத வெற்று விளம்பர மாடல் திமுக அரசு, அதன் செயல்பாடுகளை முடக்கும் நோக்கத்தில் பொதுச் செயலாளர் என்.ஆனந்த் மீதும், கழகத் தோழர்கள் மீதும் வழக்குப் பதிவு செய்திருக்கிறது.
மக்களிடையே செல்வாக்கை இழந்த தற்போதைய ஆளும் கட்சி, யாருக்குப் பயப்படுகிறதோ இல்லையோ? தமிழக வெற்றிக் கழகத்தைக் கண்டு பயத்தின் உச்சத்தில் இருக்கிறது என்பது மட்டும் மீண்டும் மீண்டும் நிரூபணம் ஆகி வருகிறது.
தேர்தல் பிரசாரப் பயணம் என்பது, அனைத்துக் கட்சிகளும் மேற்கொள்ளும் ஜனநாயகப்பூர்வமான பிரதான நடவடிக்கைதான். மற்ற கட்சிகளின் இது போன்ற நடவடிக்கைகளைச் சர்வ சாதாரணமாக எடுத்துக்கொள்ளும் இந்த வெற்று விளம்பர மாடல் அரசு, நமது தமிழக வெற்றிக் கழகத்தின் மக்கள் நலனுக்கான செயல்பாடுகளைக் கண்டாலே அஞ்சி நடுங்குகிறது.
தோல்வி பயத்தால் ஆட்சியாளர்கள் தங்களின் தூக்கத்தை இழந்து முழு நேரமும் நம்மை வீழ்த்துவதைப் பற்றியே சிந்தித்து, காவல் துறைக்கு நெருக்கடி கொடுத்து நம் செயல்பாட்டை முடக்க நினைக்கிறார்கள். அதன் ஒரு பகுதிதான், திருச்சியில் நமது கழகப் பொதுச் செயலாளர் திரு.என்.ஆனந்த் மற்றும் கழகத் தோழர்கள் மீது பதியப்பட்டுள்ள வழக்கு.
திமுக அரசின் இத்தகைய பழிவாங்கும் நடவடிக்கைகளை வன்மையாகக் கண்டிப்பதோடு, என்.ஆனந்த் மீதும் கழகத் தோழர்கள் மீதும் பதியப்பட்ட வழக்கைத் திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்துகிறேன்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT