Published : 09 Sep 2025 11:21 AM
Last Updated : 09 Sep 2025 11:21 AM

செங்கோட்டையன் - அமித் ஷா சந்திப்பு: மவுனம் கலைப்பது யார்?

அதிமுக பொதுச் செயலாளரும், முன்னாள் முதல்வருமான ஜெயலலிதா, உடல் நலம் குன்றி, மருத்துவமனயில் அனுமதிக்கப்பட்ட காலத்தில் இருந்து, அதிமுகவின் அசைவுகள் அனைத்தும் பாஜகவின் ஆக்டோபஸ் கரங்களுக்குள் சிக்கியிருக்கின்றன.

அந்தக் காலகட்டத்தில், அதிமுக எம்.எல்.ஏ.க்களால் முதல்வராக தேர்வு பெற்ற சசிகலாவுக்குப் பதவி பிரமாணம் செய்து வைக்காமல் கவர்னர் எஸ்கேப் ஆனது முதல் தர்மயுத்தம், அணிகள் இணைப்பு, இபிஎஸ்ஸின் நான்கரை ஆண்டு கால ஆட்சிக்கான ஆதாரமாக இருந்தது என ஒவ்வொரு அசைவிலும் பாஜக இருந்து வந்துள்ளது.

2021 சட்டசபைத் தேர்தலில் டிடிவி தினகரன் உள்ளிட்டோரை சேர்த்து தேர்தலை சந்திக்கலாம் என்ற அமித் ஷாவின் விருப்பதை இபிஎஸ் நிராகரித்தார். அவரது இந்த முடிவுதான் தமிழகத்தில் திமுக ஆட்சி அமைய காரணமாக அமைந்தது என பாஜகவின் டெல்லி தலைமை அவர் மீது கோபம் கொண்டது. இந்தக் கோபத்தின் வெளிப்பாடு, அண்ணாமலை மூலம் சில கட்டங்களில் வெளியாக, கடந்த மக்களவைத் தேர்தலில் பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக வெளியேறியது.

அந்த தேர்தலில் அதிமுகவுக்கு கிடைத்த அனுபவம் கசப்பானதாக அமைந்தது. அதன்பின், டெல்லியில் கட்சி அலுவலகத்தை பார்வையிடச் செல்வதாக சென்ற இபிஎஸ், அமித் ஷாவைச் சந்திக்க, கூட்டணி மீண்டும் உயிர் பெற்றது.

தமிழகத்தில் திமுக ஆட்சியை வீழ்த்த ஒன்றுபட்ட அதிமுகவுடன் கூடிய வலுவான என்.டி.ஏ. கூட்டணி தேவை என்பது மத்திய அமைச்சர் அமித் ஷாவின் உறுதியான நிலைப்பாடு. அதற்காக அதிமுகவில் இருந்து பிரிந்து சென்ற ஓபிஎஸ் உள்ளிட்டவர்களை சேர்க்க வேண்டும் என்ற பாஜகவின் எண்ணத்தை, முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தனது உரிமைக் குரலாக எழுப்பிதால் தற்போது அவரைச் சுற்றி அரசியல் களம் சுழல்கிறது.

இந்த நிலையில், மன அமைதிக்காக ஹரித்வார் சென்று ராமரை வழிபடுவதாகக் கூறி திங்கள்கிழமை காலை டெல்லி சென்றார் செங்கோட்டையன். ஹரித்வாரில் சிவன் கோயில் மட்டுமே உள்ளது, அயோத்தியில் தான் ராமர் கோயில் உள்ளது என்பது வேறு விஷயம்.

இதன் தொடர்ச்சியாக டெல்லி சென்ற செங்கோட்டையன், மத்திய அமைச்சர் அமித் ஷாவை திங்கள்கிழமை மாலை சந்தித்தார் என்ற தகவல் செங்கோட்டையன் தரப்பில் இருந்து கசியவிடப்பட்டது. இந்தச் சந்திப்பு குறித்து பாஜக தரப்பில் அதிகாரபூர்வமாக எவ்வித அறிவிப்பும் இல்லை.

மாறாக, பாஜக மாநில துணை தலைவராக உள்ள கே.பி.ராமலிங்கம், ‘பாஜகவுக்கும் செங்கோட்டையனின் கருத்துக்கும் எந்த சம்மந்தமும் இல்லை. இபிஎஸ்ஸுக்கு எதிராக செயல்படும் யாரையும், பாஜகவினர் சந்திக்க மாட்டார்கள்’ என்று நாமக்கல்லில் திங்கள்கிழமை தெரிவித்ததும் குறிப்பிடத்தக்கது.

செங்கோட்டையன் - அமித் ஷா சந்திப்பு குறித்து அரசியல் வட்டாரங்கள் கூறியது: தமிழக அரசியலில், குறிப்பாக அதிமுகவின் உட்கட்சி அரசியலில் அமித் ஷாவுக்கு தொடர்ந்து ஆர்வம் இருந்து வருகிறது.

அதிமுகவுடன் கூட்டணியை ஏற்படுத்திக் கொண்டபின், சமீபத்தில் பூத் கமிட்டி கூட்டத்தில், அதிமுகவின் வாக்கு வங்கி 21 சதவீதம், பாஜக தலைமையிலான என்.டி.ஏ.வின் வாக்கு வங்கி 18 சதவீதம் என குறிப்பிட்ட அமித் ஷா, அதற்கேற்ப சட்டசபை தேர்தலில் அதிமுக தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என எதிர்பார்க்கிறார்.

இதன் மூலம் தமிழகத்தில் என்.டி.ஏ. கூட்டணி ஆட்சி அமைக்க வேண்டும் என்ற அவரது ஆசைக்கு இபிஎஸ் இணங்காத நிலை உள்ளது. இந்த நிலையில் இபிஎஸ்ஸை கட்டுக்குள் கொண்டுவர செங்கோட்டையன் மூலம் வாய்ஸ் கொடுத்து ஒரு கலகத்தை பாஜக ஏற்படுத்தியுள்ளது.

இந்த கலகத்தின் அடுத்த காட்சிதான் டெல்லியில் அமித் ஷா மற்றும் நிர்மலா சீதாராமனை செங்கோட்டையன் சந்தித்து பேசியதாக வெளியான தகவல். ஆனால், அதிமுக தரப்போ, டெல்லியில் அமித் ஷாவை செங்கோட்டையன் திங்கள்கிழமை சந்திக்கவே இல்லை, அவருக்கு நேரம் ஒதுக்கப்படவே இல்லை என்று அடித்துச் சொன்னது.

ஆனால், இந்த விவகாரத்தில் அடுத்த ட்விஸ்ட்டாக, சென்னை திரும்பிய செங்கோட்டையன், டெல்லியில் அமித் ஷா, நிர்மலா சீதாராமனை சந்தித்தது குறித்து விவரித்தார்.

“ஹரித்வார் செல்வதாக சொல்லிவிட்டு சென்றேன். டெல்லியில் உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்திக்க அனுமதி வழங்கப்பட்டது. இதனால் அமித் ஷா, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்தேன். அவர்களிடம் இன்றைய அரசியல் சூழல் குறித்து கருத்துகள் பரிமாறப்பட்டன. எல்லோரும் ஒன்றிணைய வேண்டும், இயக்கம் வலுப்பெற வேண்டும் என்று கருத்துகளை அவர்களிடம் எடுத்துச் சொன்னோம்.

ஆகவே, இதன் அடிப்படையில் இதுகுறித்து ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமான கருத்துகளை வெளிப்படுத்துகிறார்கள். ஒவ்வொருவருக்கும் ஜனநாயக உரிமை உண்டு, இது வரவேற்கத்தக்கது. மக்கள் பணி செய்வதற்கும், இயக்கம் வலுப்பெறுவதற்கும் நான் தொடர்ந்து பணியாற்றுவேன்” என்று செங்கோட்டையன் கூறினார்.

முன்னதாக, டெல்லி புறப்படும் முன் நடந்த செய்தியாளர் சந்திப்பில் எழுப்பப்பட்ட சில பல கேள்விகளுக்கு செங்கோட்டையன் அளித்த பதில்... ‘சஸ்பென்ஸ்’.

ஆம், அமித் ஷா - செங்கோட்டையன் சந்திப்பு ஏற்படுத்தப்போகும் தாக்கம் எப்படி இருக்கப் போகிறது என்பதும் இப்போது சஸ்பென்ஸ்தான்!

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x