Published : 09 Sep 2025 06:38 AM
Last Updated : 09 Sep 2025 06:38 AM

டெல்லியில் அமித் ஷாவுடன் செங்கோட்டையன் சந்திப்பு: ஹரித்வார் செல்வதாகக் கூறிய நிலையில் திடீர் திருப்பம்

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன்.

கோவை: ஹரித்வார் செல்வதாகக் கூறி கோவையி​லிருந்து டெல்லி புறப்​பட்​டுச் சென்ற அதிமுக முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், திடீர் திருப்பமாக உள்துறை அமைச்சர் அமித் ஷாவை அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசினார். அதிமுக​வில் இருந்து பிரிந்து சென்​றவர்​களை இணைக்​கும் முயற்​சியை 10 நாட்​களில் தொடங்க வேண்​டும் என, அக்​கட்​சி​யின் பொதுச்​செய​லா​ளர் பழனி​சாமிக்​கு, முன்​னாள் அமைச்​சர் கே.ஏ.செங்​கோட்​டையன் கெடு விதித்​தார்.

இதைத் தொடர்ந்து அவரிடம் இருந்த அமைப்​புச் செய​லா​ளர், ஈரோடு புறநகர் மேற்கு மாவட்​டச் செய​லா​ளர் ஆகிய பதவி​களை பறித்து பழனி​சாமி நடவடிக்கை எடுத்​தார். மேலும், அவருடன் கோபி, நம்​பியூரைச் சேர்ந்த சில நிர்​வாகி​களின் பதவி​களும் பறிக்கப்​பட்​டன.

இதைத் தொடர்ந்து முன்​னாள் அமைச்​சர் செங்​கோட்​டையனை ஈரோடு மாவட்​டம் கோபி​யில் உள்ள அவரது இல்​லத்​தில் ஆதரவாளர்​கள் தொடர்ந்து சந்​தித்து ஆதரவு தெரி​வித்​தனர். இந்​நிலை​யில், கே.ஏ.செங்​கோட்​டையன் கோபி​யில் இருந்து புறப்பட்டு நேற்று காலை கோவை வந்​தார். பின்​னர் கோவை, பீளமேட்டில் உள்ள சர்​வ​தேச விமான நிலை​யத்​தில் இருந்து புதுடெல்லி புறப்​பட்​டுச் சென்​றார்.

முன்​ன​தாக அவர் கோவை​யில் செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது:

ஹரித்வார் பயணம்: நான் ஹரித்​வாரில் உள்ள கோயிலுக்​குச் செல்​கிறேன். பாஜக தலை​வர்​கள் யாரை​யும் சந்​திக்க புதுடெல்லி செல்​ல​வில்​லை. 9-ம் தேதி செய்​தி​யாளர் சந்​திப்பு எது​வும் இல்​லை. ‘கலங்க வேண்​டாம்; நியாய​மான கோரிக்​கை​யைத் தான் வைத்​துள்​ளீர்​கள்’ என தொண்​டர்​கள் என்​னிடம் சொல்​கிறார்​கள்.

எனவே, கோயிலுக்​குச் சென்​று​விட்டு வந்​தால் மனம் கொஞ்​சம் ரிலாக்ஸ் ஆக இருக்​கும். அமமுக பொதுச்​செய​லா​ளர் டிடிவி தினகரன் கருத்​துக்கு நான் பதில் கூற முடி​யாது. கட்​சி​யின் நன்​மைக்​காக என் கருத்தை சொன்​னேன்.

பல்​வேறு முடிவு​களை கட்​சி​யின் பொதுச்​செய​லா​ளர் எடுத்​துள்​ளார். அவர் முடிவுக்கு கருத்து சொல்ல இயலாது. காலம்​தான் பதில் சொல்​லும். பாஜக தலை​வர்​களை சந்​திக்க நான் ஹரித்​வார் செல்​ல​வில்​லை. ராமரை சந்​திக்​கச் செல்​கிறேன். வேறு யாரை​யும் சந்​திக்​க​வில்​லை. நாளை பிற்​பகல் திரும்​பு​கிறேன். 2 நாட்​களில் 10 ஆயிரத்​துக்​கும் மேற்​பட்​டோர் என்னை சந்​தித்​துள்​ளனர். இவ்​வாறு அவர் கூறி​னார்.

அப்​போது, ‘உங்​களை அதி​முக நிர்​வாகி​கள் யாராவது சந்​தித்​தார்​களா?’ என செய்​தி​யாளர்​கள் கேட்​டதற்​கு, முதலில் ‘நோ கமென்ட்​ஸ்’ என்​றவர், மீண்​டும் அதே கேள்​வியை செய்​தி​யாளர்​கள் எழுப்​பிய​தால் ‘சஸ்​பென்​ஸ்’ என்​றார். மேலும், பழனி​சாமி தரப்​பில் இருந்து யாராவது பேசி​னார்​களா? என செய்​தி​யாளர்​கள் கேட்​டதற்​கும், ‘நோ கமென்ட்​ஸ்’ எனக் கூறி​விட்டு செங்​கோட்​டையன் புறப்​பட்​டுச் சென்​றார்.

இந்நிலையில் திடீர் திருப்பமாக உள்துறை அமைச்சர் அமித் ஷாவை அவரது இல்லத்தில் செங்கோட்டையன் நேற்று இரவு சந்தித்தார். அப்போது, அதிமுகவில் இருந்துதான் நீக்கப்பட்டது குறித்தும் தற்போதைய சூழல் குறித்தும் அவரிடம் ஆலோசித்ததாகக் கூறப்படுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x