Published : 09 Sep 2025 06:28 AM
Last Updated : 09 Sep 2025 06:28 AM
சென்னை: தமிழகத்தின் தென் மாவட்டங்களின் முக்கிய நீராதாரமாக விளங்கும் முல்லைப் பெரியாறு அணையை கட்டிய பிரிட்டிஷ் பொறியாளர் பென்னி குயிக் நினைவை போற்றும்விதமாக அவர் பிறந்த கேம்பர்லீ நகரமும் மதுரையும் கலாச்சார இணைப்புத் திட்டத்தில் ஒருங்கிணைக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
18-ம் நூற்றாண்டில் தென் தமிழகத்தில் மழையின்றி பல ஆறுகள் வறண்டதால் பஞ்சம் அதிகரித்தது. இதற்காக முல்லைப் பெரியாற்றில் அணை கட்டும் திட்டத்தை ஜான் பென்னி குயிக் உருவாக்கினார். கடும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் தனது சொத்துகளில் பெரும்பகுதியை விற்று அணையைக் கட்டி முடித்தார். இவரது நினைவை போற்றும் வகையில் தேனி மாவட்டம் கூடலூரில் மணிமண்டபம் கட்டி தென்தமிழக மக்கள் வழிபட்டு வருகின்றனர். மேலும், பென்னி குயிக் பிறந்த கேம்பர்லி நகரப் பூங்காவில் தமிழக அரசு சார்பில் 2022-ல் அவருக்கு சிலையும் அமைக்கப்பட்டது.
இந்நிலையில், புதிய தொழில் முதலீடுகளை ஈர்க்கும் பயணத்தின் ஒருபகுதியாக இங்கிலாந்தின் லண்டன் சென்ற முதல்வர் பென்னி குயிக் குடும்பத்தினரை சந்தித்தார். தொடர்ந்து அங்கு வாழும் தமிழர்களின் கோரிக்கைகள் அடிப்படையில் மதுரை மற்றும் கேம்பர்லீ நகரங்கள் கலாச்சார இணைப்புத் திட்டத்தின்கீழ் கொண்டுவரப்பட உள்ளதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளன.
இதுதொடர்பாக கேம்பர்லீ தமிழர் பிரிட்டிஷ் அசோசியேஷன் செயலாளர் சந்தான பீர் ஒலி கூறியதாவது: கலாச்சார இணைப்புத் திட்டம் (Twinning of Cities) என்பது இருநாடுகளைச் சேர்ந்த முக்கிய நகரங்கள் ஒருங்கிணைக்கப்படும். இதன்மூலம் கல்வி, சுற்றுலா, வர்த்தகம் உட்பட பல்வேறு துறைகள் சார்ந்த சிறப்பம்சங்களை இருநகரங்களும் பரிமாறிக் கொள்ளும். அதன்படி தமிழகத்தில் சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய நகரங்கள் ஏற்கெனவே அமெரிக்கா, சீனா, ஜெர்மனி, மலேசியா உள்ளிட்ட நாடுகளில் உள்ள முக்கிய நகரங்களுடன் இணைக்கப்பட்டுள்ளன. அந்தவகையில் நூற்றாண்டு காலம் தொடர்புள்ள கேம்பர்லீ மற்றும் மதுரை நகரங்களும் இத்திட்டத்தின்கீழ் இணைக்கப்பட உள்ளன.
தமிழர் பண்பாட்டை மதுரை நகரம் முழுமையாக பிரதிபலித்து வருகிறது. கோயில்களின் பாரம்பரிய விழாக்கள் ஆகியவற்றின் வழியாக மதுரை உலகம் முழுவதும் தமிழர் பண்பாட்டின் மையமாகப் போற்றப்படுகிறது. அதேபோல், கேம்பர்லீ நகரமும் கல்வி, வரலாறு, சமூக மேம்பாடு, சுற்றுலா ஆகிய துறைகளில் தனித்துவமாக விளங்குகிறது. இவ்விரு நகரங்களும் ஒருங்கிணைந்தால் பல்வேறு பலன்களை தமிழகம் பெறும்.
கேம்பர்லீ நகரத்தில் 6 பெரிய பல்கலைக்கழகங்கள் உள்ளன. அவற்றில் மதுரை மாணவர்கள் இளைஞர் பரிமாற்றத்தில் கல்வி பயிலலாம். கீழடி உட்பட தொன்மங்கள் குறித்து ஆராய்ச்சிகளை தீவிரப்படுத்தலாம். மதுரையின் கோயில்கள், விழாக்கள், கைவினைப் பொருட்கள் மூலமாக நமது கலாச்சாரம் உலகளாவிய வரவேற்பை பெறும். புதிய தொழில் முதலீடுகள் வரும். சுற்றுலாவை மேம்படுத்துவதுடன் விமானப் போக்குவரத்தும் விரிவு செய்யப்
பட வாய்ப்புள்ளது.
இத்தகைய அம்சங்களை முன்வைத்து முதல்வர் ஸ்டாலினிடம் கோரிக்கை வைத்தோம். இதுசார்ந்து கேம்பர்லீ நகரம் அமைந்துள்ள சர்ரே மாகாணத்தின் மேயரும், கலாச்சார இணைப்பு திட்டத்தில் சேர சம்மதம் தெரிவித்து முதல்வர் ஸ்டாலினுக்கு கடிதம் எழுதியிருந்தார். அதையேற்று கடந்த வாரம் லண்டன் வந்திருந்தபோது இத்திட்டத்தை முன்னெடுப்பதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார். இதன்மூலம் இருநகரங்களும் சிறந்த வளர்ச்சியை பெறும்.
இவ்வாறு அவர் கூறினார்.
பென்னிக் குயிக் குடும்பத்தினர் லண்டனில் பென்னி குயிக் பேத்திகள் மேரி மற்றும் செர்லீ ஆகியோரிடம் முதல்வர் பேசினார். அப்போது, “தாங்கள் அவ்வப்போது தமிழகம் வந்துசெல்ல வேண்டும். அங்கு யாருமில்லை என நினைக்க வேண்டாம். தமிழகத்தில் உள்ள அனைவரின் இல்லமும் தங்களை வரவேற்கும். அதில் முதல் வீடாக எனது இல்லத்தை நினைத்துக் கொள்ளுங்கள். மேலும், ஏதேனும் உதவிகள் தேவை என்றாலும் நீங்கள் தயக்கப்படாமல் கேளுங்கள்” என்று முதல்வர் உரிமையுடன் பேசியுள்ளார்.
இதை கேட்டு மகிழ்ச்சியில் கண்கலங்கிய பென்னி குயிக் குடும்பத்தினர், நிச்சயம் தமிழகம் வருவதாகவும் உறுதி தெரிவித்தனர். பொங்கல் திருவிழா, ஜல்லிக்கட்டு மற்றும் மதுரை- கேம்பர்லீ நகரங்கள் இணைப்பு நிகழ்ச்சியில் பங்கேற்கவும் அழைப்பு விடுத்தார். இதைக் கண்டு நெகிழ்ந்த அந்த நாட்டின் பிரமுகர்கள் தமிழர்களின் நன்றியுணர்வு வியக்க வைப்பதாக பெருமைபட பேசியதாக பிரிட்டன் வாழ் தமிழர்கள் தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT