Published : 08 Sep 2025 08:03 PM
Last Updated : 08 Sep 2025 08:03 PM
சென்னை: “கருணாநிதியைவிட மோசமான ஆட்சியை மு.க.ஸ்டாலின் நடத்துகிறார்” என்று ‘ஏர்போர்ட்’ மூர்த்தி கைதுக்கு பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், “புரட்சித் தமிழகம் கட்சியின் தலைவர் ஏர்போர்ட் மூர்த்தி மீது, டிஜிபி அலுவலக வாயிலில் வைத்து, விசிக கட்சி ரவுடிகள் தாக்குதல் நடத்தினர். தாக்குதலில் ஈடுபட்ட விசிக ரவுடிகளை விட்டுவிட்டு, தன்னை தற்காத்துக் கொள்ள முயற்சித்த ஏர்போர்ட் மூர்த்தியை கைது செய்திருக்கிறது திமுக அரசின் காவல் துறை. மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் 2006 - 2011 ஆட்சிக் காலத்தை விட, மோசமான ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கிறார் அவரது மகன் முதல்வர் மு.க.ஸ்டாலின்” என்று கூறியுள்ளார்.
முன்னதாக, சென்னை டிஜிபி அலுவலகத்துக்கு கடந்த 6-ம் தேதி பாமக மாநில இணைப் பொதுச் செயலாளர் அருள் வந்திருந்தார். அவரை பார்ப்பதற்காக புரட்சி தமிழகம் கட்சி தலைவர் ‘ஏர்போர்ட்’ மூர்த்தி டிஜிபி அலுவலக வாசலில் காத்துக்கொண்டிருந்தார். அப்போது, அங்கு திடீரென வந்த விசிக கட்சியைச் சேர்ந்த சிலருக்கும் ‘ஏர்போர்ட்’ மூர்த்திக்கும் தகராறு ஏற்பட்டது. இதில் இருதரப்பினரும் தாக்கி கொண்டனர்.
இந்த சம்பவம் குறித்து ‘ஏர்போர்ட்’ மூர்த்தியும் விசிக நிர்வாகி திலீபனும் மெரினா காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இரு தரப்பினர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதில் ‘ஏர்போர்ட்’ மூர்த்தி கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT