Published : 08 Sep 2025 12:09 PM
Last Updated : 08 Sep 2025 12:09 PM
புதுச்சேரி: அதிக ஆண்டுகள் புதுச்சேரி பாஜக மாநிலத் தலைவராக இருந்த முன்னாள் எம்எல்ஏ சாமிநாதன் கட்சியிலிருந்து இன்று விலகினார்.
புதுவை மாநிலத்தின் பாஜக தலைவராக முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினரான சாமிநாதன் கடந்த 2015-ஆம் ஆண்டு டிசம்பரிலிருந்து செயல்பட்டு வந்தார். நாட்டிலேயே அதிகபட்சமாக மாநிலத் தலைவராக 8 ஆண்டுகள் வரை இப்பொறுப்பில் இருந்தார்.
வழக்கமாக 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை மாநிலத் தலைவர் மாற்றம் நடப்பது வழக்கம். ஆனால், அதிக காலம் அவர் இப்பதவியை வகித்து வந்தார். மாநிலத் தலைவர் பதவிக்கு பலரும் முயற்சித்து வந்தனர். கடந்த 2023 செப்டம்பரில் அவர் மாற்றப்பட்டார். அதைத்தொடர்ந்து எம்பி செல்வகணபதி மாநிலத்தலைவராக அப்போது நியமிக்கப்பட்டவுடன் சாமிநாதன் ஆதரவாளர்களின் பொறுப்புகள் பறிக்கப்பட்டன. அதையடுத்து அவர் கட்சி செயல்பாட்டை குறைத்துக்கொண்டார்.
இந்நிலையில், இன்று பாஜக முன்னாள் மாநிலத்தலைவர் சாமிநாதன் கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். அவர் வெளியிட்ட அறிக்கையில், ‘கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாக இருந்த பாஜகவில் இருந்து இன்று முதல் முழுமையாக விலகிக்கொள்கிறேன். புதுச்சேரி மாநில வளர்ச்சிக்காக தொடர்ந்து பாடுபடுவேன். புதுச்சேரி மக்களுக்காக தொடர்ந்து குரல் கொடுப்பேன். ஊழலற்ற, நேர்மையான புதியவர்களை கொண்டு புதிய அரசு அமைய முழு வீச்சில் பாடுபடுவேன்’ என்று தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT