Last Updated : 08 Sep, 2025 01:37 PM

 

Published : 08 Sep 2025 01:37 PM
Last Updated : 08 Sep 2025 01:37 PM

இலங்கை தமிழர்கள் நீண்ட கால விசாக்களுக்கு விண்ணப்பிக்க முடியாது: மத்திய அரசு வட்டாரம் தகவல்

புதுடெல்லி: இலங்கை தமிழர்களிடம் பயண ஆவணங்கள் இல்லை என்றாலும் தண்டனையில் இருந்து விலக்கு அளிக்கப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் கடந்த வாரம் அறிவித்த நிலையில், ஆவணமற்ற இலங்கை தமிழ் அகதிகள் நீண்ட கால விசாக்களுக்கு (LTV) விண்ணப்பிக்க முடியாது என்ற தகவல் வெளியாகியாகியுள்ளது.

ஜனவரி 9, 2015 க்கு முன்பு நமது நாட்டில் தஞ்சம் புகுந்த இலங்கைத் தமிழர்களிடம், பாஸ்போர்ட், விசா உள்ளிட்ட பயண ஆவணங்கள் இல்லை என்றாலும், அவர்கள் சட்டவிரோத குடியேறிகளாக கருதப்பட மாட்டார்கள் என்று மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. மேலும், அவர்களுக்கு நமது நாட்டு சட்டப்படி அளிக்கப்படும் தண்டனையில் இருந்து விலக்கு அளிக்கப்படும் எனவும் மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்தது.

இருப்பினும், இலங்கை தமிழர்கள் நீண்ட கால விசாக்களுக்கு விண்ணப்பிக்க முடியாது என்றும், ஆனால் 1955 குடியுரிமைச் சட்டத்தின் கீழ் அவர்கள் இந்தியக் குடியுரிமைக்கு விண்ணப்பிக்கலாம் என்றும் உள்துறை அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்தன. குடியுரிமை பெறுவதற்கு முன்னோடியான நீண்ட கால விசாக்கள், ஒன்று முதல் ஐந்து ஆண்டுகள் வரையிலான காலத்திற்கு வழங்கப்படுகின்றன.

மார்ச் 17, 2021 அன்று, உள்துறை அமைச்சகம் மாநிலங்களவையில், “இலங்கை குடிமக்கள் உட்பட எந்தவொரு வெளிநாட்டவரும், 1955 குடியுரிமைச் சட்டம் மற்றும் அதன் கீழ் உருவாக்கப்பட்ட விதிகளில் குறிப்பிடப்பட்டுள்ள தகுதி அளவுகோல்களை பூர்த்தி செய்த பிறகு, விதிகளின் அடிப்படையில் இந்தியக் குடியுரிமையைப் பெறலாம்” என்று தெரிவித்தது.

இருப்பினும், 1986 ஆம் ஆண்டு உள்துறை அமைச்சகம் மாநிலங்களின் தலைமைச் செயலாளர்களுக்கு எழுதிய கடிதத்தில், “இந்தியக் குடியுரிமை வழங்குவதற்கான இலங்கை அகதிகளின் விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ள வேண்டாம். கவனமாக பரிசீலித்த பிறகு, ஜூலை 1983 அல்லது அதற்குப் பிறகு இந்தியாவிற்கு வந்த இலங்கை அகதிகளுக்கு குடியுரிமைச் சட்டம், 1955 மற்றும் குடியுரிமை விதிகள், 1956 இன் விதிகளின் கீழ் குடியுரிமை பெறவோ/பதிவு செய்யவோ கூடாது என்ற முடிவுக்கு மத்திய அரசு வந்துள்ளது" என்று செப்டம்பர் 23, 1986 தேதியிட்ட கடிதத்தில் கூறப்பட்டுள்ளது. இந்த வழிகாட்டுதல்கள் இன்னும் செயல்பாட்டில் உள்ளன எனவும் மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

செப்டம்பர் 2 ஆம் தேதி, வெளியுறவுத்துறை அமைச்சகம் குடிவரவு மற்றும் வெளிநாட்டினர் சட்டம், 2025-ன் கீழ் ஒரு உத்தரவை வெளியிட்டது. இதன்படி டிசம்பர் 31, 2024-க்கு முன்னர், பாஸ்போர்ட் அல்லது விசாக்கள் இல்லாமல் இந்தியாவிற்குள் நுழைந்தால், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் மற்றும் பாகிஸ்தானை சேர்ந்த ஆறு சிறுபான்மை சமூகங்கள், இந்தியாவில் குறைந்தது 11 ஆண்டுகள் தொடர்ந்து தங்கிய பிறகு, நீண்டகால விசாக்களுக்கு விண்ணப்பிக்க முடியும் என்றாலும், இலங்கை தமிழர்கள் அதற்குத் தகுதி பெற மாட்டார்கள் எனத் தெரிவித்தது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x