Last Updated : 08 Sep, 2025 09:07 AM

3  

Published : 08 Sep 2025 09:07 AM
Last Updated : 08 Sep 2025 09:07 AM

“பாஜக தலைவர்களை சந்திக்க செல்லவில்லை” - டெல்லி புறப்பட்ட செங்கோட்டையன்

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன். | படம்: ஜெ.மனோகரன்

கோவை: “என்னுடைய கருத்துக்கு மாறுபட்ட கருத்தை யாரும் கூறவில்லை” என அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார். டெல்லி புறப்பட்ட அவர், “பாஜக தலைவர்கள் யாரையும் சந்திக்க செல்லவில்லை” என்றார்.

அதிமுக முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டவர்களை ஒருங்கிணைத்து, கட்சியை பலப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிமுக தலைமையிடம் வலியுறுத்தி காலக்கெடு நிர்ணயித்துள்ளார். அதேசமயம், அவரது கோரிக்கையை ஏற்காத கட்சித் தலைமை, அவரிடம் இருந்து அமைப்புச் செயலாளர், மாவட்ட செயலாளர் உள்ளிட்ட பதவிகளை பறித்தது. மேலும், அவரது ஆதரவாளர்களின் பதவிகளையும் கட்சி தலைமை பறித்தது.

இதைத் தொடர்ந்து முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனை ஈரோடு மாவட்டம் கோபியில் உள்ள அவரது இல்லத்தில் ஆதரவாளர்கள் தொடர்ந்து சந்தித்து ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கோபியில் இருந்து புறப்பட்டு இன்று (செப்.8) காலை கோவை வந்தார். கோவையில் இருந்து விமானம் மூலம் டெல்லி புறப்பட்டுச் சென்றார்.

முன்னதாக, கோவையில் செய்தியாளர்களிடம் அவர் கூறியது: “ஹரித்துவாரில் உள்ள ராமர் கோயிலுக்குச் செல்கிறேன். மனம் சரியில்லாததால் கோயிலுக்குச் செல்வதற்காக வந்திருக்கிறேன். பாஜக தலைவர்கள் யாரையும் சந்திக்க செல்லவில்லை. 9-ம் தேதி செய்தியாளர் சந்திப்பு எதுவும் இல்லை. கலங்கிப் போய்விட வேண்டாம், நியாயமான கோரிக்கையைத்தான் வைத்துள்ளீர்கள் என தொண்டர்கள் சொல்கிறார்கள்.

எனவே, கோயிலுக்குச் சென்று விட்டு வந்தால் மனம் கொஞ்சம் ரிலாக்ஸ் ஆக இருக்கும். என்னுடைய கருத்துக்கு மாறுபட்ட கருத்தை யாரும் கூறவில்லை. அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கருத்துக்கு நான் பதில் கூற முடியாது. நல்லதுக்கு நாம் சொல்கின்றோம். பல்வேறு முடிவுகளை கட்சியின் பொதுச் செயலாளர் எடுத்துள்ளார். அவர் முடிவுக்கு கருத்துகள் சொல்ல முடியாது. காலம்தான் பதில் சொல்லும்.

பாஜக தலைவர்களை சந்திக்க நான் ஹரித்துவார் செல்லவில்லை. ராமரை சந்திக்க செல்கிறேன். வேறு யாரையும் சந்திக்கவில்லை. நாளை பிற்பகல் விமானத்தில் திரும்புகிறேன். இரண்டு நாட்களாக வீ்ட்டில் இருந்தேன். 10,000-க்கும் மேற்பட்டோர் சந்தித்துள்ளனர்” என்று கூறினார்.அப்போது, ‘உங்களை கட்சி நிர்வாகிகள் வந்து யாராவது சந்தித்தனரா?’ என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு, ‘நோ கமென்ட்ஸ்’ எனக் கூறிவிட்டு செங்கோட்டையன் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.

உடன் செல்லும் திமுக எம்.பி.க்கள்: அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் செல்லும் விமானத்தில், திமுக எம்.பிக்கள் கணபதி ராஜ்குமார் (கோவை), பிரகாஷ் (ஈரோடு) ஆகியோரும் உடன் சென்றனர். இவர்கள், நாளை குடியரசு துணைத் தலைவர் தேர்தலுக்கான வாக்குப் பதிவு குறித்து இன்று நடக்கும் பயிற்சியில் கலந்து கொள்வதற்காக டெல்லி செல்கின்றனர். இருப்பினும், மூவரும் ஒரே விமானத்தில் பயணிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x