Published : 08 Sep 2025 06:56 AM
Last Updated : 08 Sep 2025 06:56 AM
திருவாரூர்: அதிமுகவை பிளவுபடுத்துவதில் பாஜகவின் பின்புலம் உள்ளது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் கூறினார்.
திருவாரூரில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது: அதிமுகவில் இருந்து பிரிந்து போனவர்கள் அனைவரும் ஒன்றாக இணைய வேண்டும் என்று கூறி, அதற்காக பழனிசாமிக்கு காலக்கெடு விதித்த முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனை கட்சியில் இருந்து நீக்கியுள்ளனர். ஏற்கெனவே சசிகலா, டிடிவி.
தினகரன், ஓ.பன்னீர்செல்வம் என பல குழுக்களாக இருக்கும் அதிமுகவில், புதிதாக செங்கோட்டையன் என்ற குழு உருவாக வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. அனைவரும் சுயநலப் போக்குடனே இந்தப் பிரச்சினையை அணுகுவதால், இப்போதைக்கு அதிமுக இணைய வாய்ப்பே கிடையாது.
அதிமுகவை பிளவுபடுத்துவதில் பாஜக பின்புலமாக இருந்து செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இதை அதிமுகவில் இருப்பவர்கள் உணர வேண்டும். கொள்கை வேறு, கூட்டணி வேறு என்று அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி சொல்லிக்கொண்டிருக்கிறார். இதனால், பாஜக, அதிமுக கூட்டணி மேலும் மேலும் பலவீனமடைந்து கொண்டிருக்கிறது.
கடந்த 8 ஆண்டுகளாக 28 சதவீதம் வரை ஜிஎஸ்டி விதித்து மக்களை துயரத்துக்கு உள்ளாக்கிய பாஜக, தற்போது சிறிய அளவு வரியை மட்டும் குறைத்துள்ளது. தமிழக முதல்வர் ஸ்டாலினின் வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்கும் முயற்சி வரவேற்கத்தக்கது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரியின் முதலாமாண்டு நினைவு நாள் வரும் 12-ம் தேதி வருகிறது. அன்று தமிழகம் முழுவதும் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் உடல் தானம் செய்யத் தீர்மானித்துள்ளனர். இதன்மூலம் உடல் தானம் குறித்த விழிப்புணர்வு ஏற்படும். இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT