Published : 08 Sep 2025 06:45 AM
Last Updated : 08 Sep 2025 06:45 AM
ஈரோடு: செங்கோட்டையன் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கையைக் கண்டித்து 1,000-க்கும் மேற்பட்ட அதிமுக நிர்வாகிகள் ராஜினாமா செய்வதாக கடிதம் கொடுத்தனர்.
அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்களை இணைக்கும் முயற்சியை 10 நாட்களில் தொடங்க வேண்டும் என பொதுச் செயலாளர் பழனிசாமிக்கு கெடுவிதித்த முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனின், அமைப்பு செயலாளர் மற்றும் ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட செயலாளர் பதவிகளைப் பறித்து பழனிசாமி அறிவித்தார். அவருடன், கோபி, நம்பியூரைச் சேர்ந்த சில நிர்வாகிகளும் நீக்கப்பட்டனர்.
இந்நிலையில், கோபி சட்டப்பேரவை தொகுதிக்கு உட்பட்ட அதிமுக ஒன்றிய, நகர, பேரூர், கிளை, வார்டு செயலாளர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளை வகிக்கும் 1,000-க்கும் மேற்பட்டோர் கோபி அதிமுக அலுவலகத்துக்கு வந்து, செங்கோட்டையன் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கையை கண்டித்து ராஜினாமா செய்வதாக கடிதம் கொடுத்தனர்.
அதில், "அதிமுக பழைய வலிமையை பெற வேண்டும். வெற்றிப் பாதையில் பயணிக்க வேண்டும். எம்ஜிஆர், ஜெயலலிதா வழியில் மக்களுக்கு பயனுள்ள ஆட்சியைத் தர வேண்டும். இந்த நல்ல நோக்கம் நிறைவேற அதிமுக ஒன்றுபட வேண்டும்.
இதற்காக கட்சியிலிருந்து பிரிந்தவர்களை இணைக்க வேண்டும் எனசெங்கோட்டையன் கூறியிருந்தார். இதற்காக அவரை பதவியில் இருந்து நீக்கியதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, எங்களது கட்சிப் பதவிகளில் இருந்து விலகுகிறோம். கட்சி ஒன்றுபட்டால் பதவியில் நீடிப்போம்" என குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேபோல, ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட மகளிரணி செயலாளரும், முன்னாள் எம்.பி.யுமான சத்தியபாமாவும், கட்சி பொறுப்புகளில் இருந்து ராஜினாமா செய்வதாக நேற்று தெரிவித்தார். இதற்கிடையில், செங்கோட்டையன் விதித்த கெடு வரும் 15-ம் தேதி நிறைவடைகிறது.
அதுவரை கட்சி நிர்வாகிகளைச் சந்திக்க முடிவு செய்துள்ள செங்கோட்டையன், பின்னர் சசிகலா, ஓபிஎஸ் உள்ளிட்டவர்களைச் சந்தித்து, அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து ஆலோசனை நடத்த முடிவு செய்துள்ளதாக அவரது ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT