Published : 08 Sep 2025 06:02 AM
Last Updated : 08 Sep 2025 06:02 AM
சென்னை: ராமநாதபுரம் மாவட்டத்தில் 20 இடங்களில் ஹைட்ரோ கார்பன் கிணறுகளுக்கான அனுமதி ரத்து செய்வதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக நேற்று அவர் வெளியிட்ட அறிக்கை: ராமநாதபுரம் மாவட்டத்தில் 20 இடங்களில் ஹைட்ரோ கார்பன் கிணறுகளை அமைக்க அளிக்கப்பட்ட அனுமதியை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று தமிழ்நாடு மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையத்துக்கு ஆணையிடப்பட்டிருப்பதாக திமுக அரசு அறிவித்து 15 நாட்கள் ஆகிறது. ஆனால், ஓஎன்ஜிசி நிறுவனத்துக்கு அளிக்கப்பட்ட அனுமதி இன்று வரை திரும்பப்பெறப்படவில்லை.
ஹைட்ரோ கார்பன் கிணறுகளை தடுக்க வேண்டும் என்ற எண்ணம் தமிழ்நாடு அரசுக்கு இல்லை. மாறாக விவசாயிகளை ஏமாற்ற வேண்டும் என்ற எண்ணம் மட்டுமே இருக்கிறது. மீத்தேன், ஹைட்ரோ கார்பன் திட்டங்களை திணிப்பது, அதற்கு மக்களிடம் எதிர்ப்பு எழுந்தால் உடனடியாக திரும்ப பெறுவது என்ற உத்தியைத்தான் திமுக அரசு கடைபிடித்து வருகிறது.
2010-ம் ஆண்டில் மீத்தேன், ஹைட்ரோ கார்பன் திட்டங்களை காவிரி பாசன மாவட்டங்களில் செயல்படுத்த அனுமதித்த திமுக அரசு, அதற்கு மக்களிடம் எதிர்ப்பு எழுந்தவுடன் ஆய்வுகள் மட்டுமே அனுமதிக்கப்பட்டதாக பல்டி அடித்ததை தமிழக மக்கள் இன்னும் மறக்கவில்லை.
20 இடங்களில் ஹைட்ரோ கார்பன் கிணறுகள் அமைக்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டால், அதன்பின் ராமநாதபுரம் மாவட்டம் பாலைவனமாவதை தடுக்க முடியாது. எனவே, விவசாயிகளுக்கு துரோகம் செய்யாமல் ஹைட்ரோ கார்பன் கிணறுகள் திட்டத்துக்கு அளிக்கப்பட்டுள்ள அனுமதியை மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம் ரத்து செய்வதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT