Published : 08 Sep 2025 05:14 AM
Last Updated : 08 Sep 2025 05:14 AM
திண்டுக்கல்: பசும்பொன் முத்துராமலிங்கத் தேவருக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்று அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி கூறினார். திண்டுக்கல் மாவட்டத்தில் நேற்று 2-வது நாளாக பொதுமக்களிடையே பழனிசாமி பிரச்சாரப் பயணத்தை மேற்கொண்டார். முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சி.சீனிவாசன், நத்தம் ஆர்.விஸ்வநாதன் முன்னிலை வகித்தனர்.
ஆத்தூர் தொகுதிக்கு உட்பட்ட சின்னாளபட்டியில் பழனிசாமி பேசியதாவது: அதிமுக ஆட்சியில் ரூ.350 கோடியில் திண்டுக்கல்லில் அரசு மருத்துவக் கல்லூரி அமைக்கப்பட்டது. இதுபோன்ற ஏதாவது பெரிய திட்டத்தை இங்குள்ள அமைச்சர் கொண்டு வந்திருக்கிறாரா? தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்துவிட்டது.
வெடிகுண்டு கலாச்சாரம் வந்துவிட்டது. தமிழக அரசு செயலற்று இருப்பதால், மக்கள் நிம்மதியாக வாழ முடியவில்லை. அனைத்து ஊராட்சிகள், ஒன்றியங்களில் உள்ள நிதியை ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் வேறு பணிக்கு செலவழிக்கிறார். இது வன்மையாகக் கண்டிக்கத்தது.
திமுக மக்களுக்கான கட்சி அல்ல. ஒரு குடும்பத்துக்காக உள்ள கட்சி. திமுகவில் உண்மையாக உழைப்பவர்களுக்கு மரியாதை இல்லை. முதல்வரின் குடும்பத்தை சேர்ந்தவர்களுக்கு மட்டுமே மரியாதை வழங்கப்படுகிறது.
திமுக ஆட்சியில் முடக்கப்பட்ட திட்டங்கள் அனைத்தும், மீண்டும் அதிமுக ஆட்சி அமைந்தவுடன் செயல்படுத்தப்படும். விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்துவிட்ட விலைவாசியைக் கட்டுப்படுத்த திமுக அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இந்திய சுதந்திரப் போராட்டத்தில் தீவிரமாகப் பங்கேற்ற பசும்பொன் முத்துராமலிங்க தேவர், வாழ்நாள் முழுவதும் அனைத்து தரப்பு மக்களுக்காகவும் வாழ்ந்தவர். தனது சொத்தில் பெரும் பகுதியை சாதி மதம் பார்க்காமல் மக்களுக்கு தானமாக வழங்கியவர்.
தென் மாவட்ட மக்களின் இதயத்தில் வாழும் பசும்பொன் முத்துராமலிங்க தேவருக்கு நாட்டின் உயரிய விருதான பாரத ரத்னா விருது வழங்க வேண்டும். அதேபோல, தேசியமும் தெய்வீகமும் தனது இரு கண்கள் என வாழ்ந்து காட்டிய பசும்பொன் முத்து ராமலிங்கத் தேவர் பெயரை மதுரை விமான நிலையத்துக்கு சூட்ட வேண்டும். இதற்கான முயற்சிகளை அதிமுக முன்னெடுக்கும். இவ்வாறு பழனிசாமி பேசினார்.
5-ம் கட்ட பிரச்சாரம்: இதனிடையே அதிமுக தலைமை வெளியிட்ட அறிக்கை: கட்சியின் பொதுச் செயலாளர் பழனிசாமி தனது 5-ம் கட்ட பிரச்சாரப் பயணத்தை வரும் 17-ம் தேதி தருமபுரியில் தொடங்குகிறார். அன்று தருமபுரி, பாப்பிரெட்டிபட்டி, அரூர் தொகுதிகளிலும், வரும் 18-ம் தேதி பாலக்கோடு, பென்னாகரம், 19-ம் தேதி நாமக்கல் மாவட்டம் ராசிபுரம், சேந்தமங்கலம், 20-ம் தேதி நாமக்கல், பரமத்தி வேலூர், 21-ம் தேதி திருச்செங்கோடு, குமாரபாளையம் தொகுதிகளிலும் பிரச்சாரம் செய்கிறார்.
தொடர்ந்து, வரும் 23-ம் தேதி நீலகிரி மாவட்டம் குன்னூர், உதக மண்டலம், 24-ம் தேதி கூடலூர், 25-ம் தேதி திண்டுக்கல் மாவட்டம் வேட சந்தூர், கரூர், 26-ம் தேதி கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி, கிருஷ்ணராயபுரம், குளித்தலை தொகுதிகளிலும் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார். இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.திண்டுக்கல் மாவட்டம் சின்னாளபட்டியில் நேற்று பொதுமக்களிடையே பேசிய அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT