Published : 08 Sep 2025 12:03 AM
Last Updated : 08 Sep 2025 12:03 AM
சென்னை: வெளிநாடு வாழ் தமிழர்கள் அனைவரும் ஆண்டுக்கு ஒரு முறையாவது குடும்பத்துடன் தமிழகத்துக்கு வாருங்கள். உங்களால் இயன்றவரை அங்கு முதலீடு செய்யுங்கள் என்று லண்டனில் நடைபெற்ற தமிழர்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார்.
தமிழகத்தை 2030-ம் ஆண்டுக்குள் ஒரு ட்ரில்லியன் டாலர் பொருளாதாரம் கொண்ட மாநிலமாக உருவாக்க அரசு தீவிர முயற்சிஎடுத்து வருகிறது. இதற்காக, முதலீட்டாளர்கள் மாநாடு, முதலீடுகளை ஈர்ப்பதற்காக பல்வேறு சலுகைகள் அறிவிப்பு என பல்வேறு நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது. முதலீடுகளை ஈர்க்க முதல்வர் ஸ்டாலின் வெளிநாட்டு பயணமும் மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில், தமிழகத்துக்கு முதலீடுகளை ஈர்க்கும் விதமாக ‘டிஎன் ரைசிங்’ என்ற பெயரில் முதல்வர் ஸ்டாலின் ஐரோப்பியநாடுகளுக்கு பயணம் மேற்கொண்டார். முதல்கட்டமாக ஜெர்மனிக்கு சென்ற அவர் பின்னர் இங்கிலாந்தில் பயணம் மேற்கொண்டார்.
முதல்வரின் இந்த பயணத்தின் போது, இந்துஜா குழுமம் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்கள் தமிழகத்தில் தொழில் தொடங்குதல், விரிவாக்கம் செய்தல் போன்றவற்றுக்கு தமிழக அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செய்துள்ளன. அந்த வகையில், முதல்வர் ஸ்டாலினின் ஜெர்மனி, இங்கிலாந்து பயணத்தால் தமிழகம் பெற்றுள்ள மொத்த முதலீடு ரூ.15,516 கோடி. இதன்மூலம் 17,613 பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது. இந்நிலையில், இங்கிலாந்து பயணத்தின் நிறைவாக, லண்டனில் நடைபெற்ற ‘மாபெரும் தமிழ்க்கனவு - இங்கிலாந்து வாழ் தமிழர்கள் சந்திப்பு’ நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் கலந்து கொண்டு, மாணவர்களின் கலை நிகழ்ச்சியை கண்டு ரசித்தார்.
இந்த நிகழ்வில் அவர் பேசியதாவது: உலகின் அனைத்து பகுதிகளிலும் வசிக்கும் தமிழர்கள், மிக எளிய பின்புலங்களில் இருந்து, படித்து முன்னேறி, முக்கிய பொறுப்புகளுக்கு வந்துள்ளனர். அவர்கள் சுயமரியாதையுடன், மதிப்புமிக்க இடத்தில் இருப்பதை பார்த்து,திமுக தலைவராக, தமிழக முதல்வராக மிகவும் பெருமைப்படுகிறேன். ‘திராவிடத்தால் வாழ்கிறோம்’ என்று பெருமிதத்துடன் சொல்லும் தமிழர்களை பார்க்கிறேன். அவர்கள் தமிழகத்தின் அறிவிக்கப்படாத தூதர்களாக இருக்கின்றனர். இதையெல்லாம் பார்க்கும்போது, தமிழுக்கு தீங்கு நினைக்கும் யாருடைய எண்ணமும், ஒருபோதும் நிறைவேறாது என்ற எண்ணம் வலுப்பெறுகிறது.
அடுத்த தலைமுறை தமிழர்கள், நம்மைவிட அதிக உயரத்தில் இருக்க வேண்டும். ஆண்டுக்கு ஒரு முறையாவது அனைவரும் குடும்பத்துடன் தமிழகம் வாருங்கள். அங்கு இயன்ற முதலீடுகளை செய்யுங்கள். உங்கள் சகோதரனாக இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அங்கே இருப்பான். அந்த நம்பிக்கையோடு வாருங்கள். உலக கதவுகளை திறந்து, சக தமிழர்களை வளர்க்கும் வகையில் இங்குள்ள வேலைவாய்ப்புகள் பற்றி, தமிழகத்தில் இருக்கும் நமதுஇளைஞர்களுக்கு எடுத்துக் கூறவேண்டும்.
தமிழர்களின் வரலாறு, பண்பாட்டை வெளிக்காட்ட, கீழடியை தொடர்ந்து, பொருநை அருங்காட்சியகம், கங்கைகொண்ட சோழபுரம் அருங்காட்சியகம் என்று அமைத்து வருகிறோம். குழந்தைகளுக்கு அதை சுற்றிக் காண்பித்து,நமது வரலாற்றை எடுத்துக் கூறவேண்டும். பழம்பெருமை மட்டுமின்றி, நாம் எவ்வளவு வலிகள், வேதனைகளை கடந்து தலை நிமிர்ந்துள்ளோம் என்பதையும் கூறவேண்டும்.
எப்போதும் தமிழர்களுக்குள் ஒற்றுமை நிலவவேண்டும். இந்த இனம் எப்போதும் முன்னேற்றப் பாதையில் மட்டுமே பயணிக்க வேண்டும். அதற்காகத்தான் தமிழகத்தில் ஏராளமான திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம். வெளிநாடுவாழ் தமிழர்களுக்கு பிரச்சினை என்றால் ஓடோடி வந்து உதவுகிறோம்.
சாதி, மதம், ஏழை, பணக்காரன் போன்ற வேறுபாடுகள், நம்மை பிரிப்பதோடு, நமது இனத்தையே வளரவிடாது. தமிழ் என்ற வேரில் வளர்ந்திருக்கும் நாம், நமது அடையாளத்தை ஒருபோதும் மறக்க கூடாது. இவ்வாறு முதல்வர் பேசினார்.
முதல்வர் தனது பயண நிறைவு குறித்து சமூக வலைதள பதிவில் கூறியுள்ளதாவது: ஜெர்மனியில் தமிழர்கள் அளித்த உற்சாக வரவேற்புடன் தொடங்கிய ‘டிஎன் ரைசிங்’ பயணம், லண்டன் மாநகரில் அவர்கள் வாழ்த்தி வழியனுப்ப நிறைவுறுகிறது. அளவில்லா அன்பு பொழிந்த உள்ளங்களின் எண்ணிலடங்கா நினைவுகளுடன் தாயகம் திரும்புகிறேன். இத்தனை நாளும் சகோதரனாய் என்னை கவனித்துக்கொண்ட புலம்பெயர்ந்த தமிழ் சமூகத்துக்கு என் அன்பை நன்றியாய் நவில்கிறேன். இவ்வாறு முதல்வர் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT